போரின் இறுதி நாள்களில் நடந்தது என்ன என்பதை எவரும் காணாததால் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்று எவரும் கூறிவிடமுடியாது. ஆதலினால் ஐக்கிய நாடுகள் சபையாலோ அன்றி அனைத்துலக சமூகத்தினாலோ தொடுக்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எமக்கில்லை.
மே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலும் புதுக்குடியிருப்பிலும் நந்திக்கடல் ஆற்றிலும் நடந்தது என்ன என்பதை எவரும் பார்க்கவில்லை என்பதால் ஒரு வகையில் இந்த வாதம் உண்மையானதே.இடம்பெற்று முடிந்த போருக்கு சாட்சியங்கள் எதுவும் இல்லை. உண்மையைக் கூறப்போனால் 3 லட்சம் பொதுமக்களையும் ஐ.நாவும் அனைத்துலக சமூகமும் கைவிட்டமையால் ஒருபுறம் விடுதலைப் புலிகளையும் மறுபுறம் இலங்கை இராணுவத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள்.
அர\ படையினரா அல்லது விடுதலைப் புலிகளா அதிகளவான பொதுமக்களைக் கொலை செய்தனர் என்பது கடவுளுக்குத்தான் நன்கு தெரியும். இறுதிப்போரின் போது 40,000 முதல் 60,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவே எங்களுக்குக் கூறப்படுகிறது. தற்போது, இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தினை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் நிலையில் இதே கேள்வி மீண்டும் அரசை நோக்கித் தொடுக்கப்படுகிறது.
குறித்த இந்த ஆவணப்படத்தைப் பலரும் பார்த்திருக்கிறார்கள், கருத்துக் கூறியிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தினர் புரிந்த போர்க் குற்றங் களைச் சுட்டிக்காட்டுவதாகச் சிலருக்கு இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. போர்க் குற்றம் தொடர்பான 'நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என இவர்கள் பேசுகிறார்கள்.
குறித்த இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக் கும் உள்ளது. போரின்போது உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய வேண்டிய தேவையும் இதன் ஊடாக நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம்தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கு உள்ளது என இது தொடர்பில் கருத்துரைத்த பிரிட்டன் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் இலங்கையில் மீறப்பட்டி ருப்பதை வெளிப்படுத்தும் நம்பத்தகுந்த குற்றச் சாட்டுக்கள் வெளியிடப்பட்டிருப்பது தொடர்பில் நாங்கள் அதிக கரிசனையுடன் இருக்கிறோம்.
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும்வகையில் செயற்பட்டவர்கள் யாரோ அவர்கள் பொறுப்புச் சொல்லும் செயல் முறைக்கு உட்படுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
எவ்வாறிருப்பினும் ஆவணப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் போலியானவை எனக் கூறும் அரசு இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தீவிரமாகக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் போலியானவை என்கிறார்கள் ஆளும் தரப்பினர். இந்த ஆவணப் படத்தின் தயாரிப்பாளர் கலம் மக்கெயர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான் ஸ்னோ மற்றும் இந்த ஆவணப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரையுமே புலம்பெயர் தமிழர்களின் \ம்பளத்துக் குப் பணிசெய்தவர்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.
டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பத்தில் முன்னணி நிபுணர் என வர்ணிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவ ருமான சிறி ஹேவவிதாரண சனல்4 இனது காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்.
அவரது கருத்துப்படி ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் டிராக்டரில் பெண்களின் உடல்கள் ஏற்றப்படும் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது என்கிறார்.ஆனால் நான்கு துறைசார் நிபுணர்கள் இந்தப் படங்களை ஆராய்ந்து அனைத்துமே உண்மை யானவை என உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் எனச் சனல்4 கூறுகிறது.தடயவியல் ஒளிப்படவியலாளர் டானியல் ஸ்பிட்ஸ், தடயவியல் சலனப்பட ஆய்வாளர் ஜிவ் ஸ்பைவக், துப்பாக்கிகள் தொடர்பான வல்லுநர் பீற்றர்டியாசக் மற்றும் தடயவியல் சலனப்பட வல்லுநர் கிறான்ட் பிறற்றிக்ஸ் ஆகிய இந்த நான்கு வல்லுநர்களும்
"இலங்கையின் கொலைக்களம்" என்ற ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் அனைத் தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள் என்கிறது சனல் 4.எங்களது துறைசார் வல்லுநர் சிறி ஹேவ விதா ரண கூறுவது உண்மையெனில், அவர் சனல்4 கூறும் அந்த நான்கு வல்லுநர்களதும் கூற்று தவறானது என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.
தங்களது வாதம் உண்மையெனில் சனல் 4 வெளியிட்டிருக்கும் ஆவணப்படம் போலியானது என்பதை எங்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு உள்ளது.
இலங்கைக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும்?
அப்போதுதான் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரை நீக்கமுடியும். இதுபோல் எடுத்த எடுப்பில் அனைத்தையும் நிராகரிப்பது இலங்கைக்கு நற்பெய ரையும் மதிப்பையும் மீளவும் பெற்றுத்தராது.
குறித்த இந்த வாதங்கள் தெற்கிலே இடம்பெற்று வரும் அதேநேரம் நாட்டின் வடக்குப் பகுதியில் நிலைமைகள் மேம்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.அளவெட்டியில் இடம்பெற்ற தங்களது கூட்டத்தின்போது எந்தவிதமான காரணங்களுமின்றி உள்நுழைந்த இராணுவத்தினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிபர் ராஜ பக்ஷவிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
''வடக்கில் எந்தவிதமான பொது நிர்வாகங்களும் இல்லை. போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் நாங்கள் இன்னமும் படைத்துறை நிர்வாகத்தின் கீழேயே வாழுகிறோம்'' என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
மே 29 ஆம் நாளன்று நூலகக் குழுமத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் இராணுவத்தினர் புகுந்து குழப்பத்தை விளைவித்ததாக நன்கு அறியப்பட்ட பேராசிரியர் ராஜன் ஹூல் அண்மையில் அதிபர் ராஜபக்ஷவிடம் முறையிட்டிருந்தார்.
இங்கு விடுதலைப் புலிகளின் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது, இது பாதுகாப்பு அமைச்சினது அறிவுறுத்தல், இது உங்களுக்கு விளங்குகிறதா? என குறித்த நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்துக்குள் புகுந்த கேணல் ஜெயவர்த்தன மற்றும் அவரது ஆள்கள் அங்கு திரண்டிருந்தவர்களை நோக்கி கத்தியிருக்கிறார்கள்.
போரை வென்ற அரசு அமைதியை வென்றெடுப்பதில் தோல்வியடைகிறது விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்கள் சிலருடன் நெருங்கிச் செயற்படும் அரசு அவர்களில் சிலரை தங்களுக்குத் தகவல் தருபவர்களாகப் பயன்படுத்தும் அதேநேரம் மக்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்ற தமிழர்களைப் புலி என முத்திரை குத்துவது வருந்துதற்குரியது என ராஜன் ஹூல் அதிபர் ராஜபக்ஷவிடம் எடுத்துக்கூறியிருக்கிறார்.
"யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது இன்றைய தேவை அமைதி. அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள், கருத்துச் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். தற்போது ஒரு கோயில் கூட்டத்தைக் கூட யாழ்ப்பாணத்தவர்களால் நடத்த முடியவில்லை. கூட்டத்தின் நடுவில் நுழையும் இராணுவத்தினர் அனைவரையும் கலைத்துவிடுகிறார்கள்.
30 ஆண்டுகளின் முன்னர் நடந்தது இதுதான். இதுபோன்ற நிலைமைதான் அப்போது இளைஞர்கள் அரசுக்கு எதிராக தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்குவதற்கு வழிசெய்தது. மக்களை அடக்கு முறைக்குள் தள்ளுவதாகவே குடாநாட்டில் அதி மிஞ்சிய இராணுவப் பிரசன்னம் அமைகிறது என்கிறார் ஆனந்தசங்கரி.
கடந்த காலத்தில் குடாநாட்டு மக்களுக்கு அதிக அச்சத்தைக் கொடுத்த ஈ.பி.டி.பியின் சாள்ஸ் என்பவர் யாழ். மக்களைக் கிலி கொள்ள வைப்ப தற்காக மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப் பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.இடம்பெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா மக்களை அச்சத்தின் உச்சத்துக்குத் தள்ளித் தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே சாள்சை மீண்டும் வரவழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட சாள்ஸ் பின்நாளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து கொண்டாராம்.இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பாக யாராவது சிறு விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது அரசு ஆதரவு தமிழ் அரசியல்கட்சிகளின் துணையுடன் படைத் தரப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஜூலை 16 ஆம் நாளன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட் டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனியான தொரு சம்பவமன்று. எதிர்க் கட்சிகளின் உறுப்பி னர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமிட்ட செயல் முறையில் ஓர் அங்கம்தான் இது.கிளிநொச்சி, முல்லைத்தீவு ஏன் யாழ்ப்பாணத்திலும் கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் _தந்திரமாகப் பயணம் செய்ய முடியாத `ழமைவே காணப்படுகிறது.
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக் கில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தவர் களையும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசார ணைக்கு உட்படுத்துகிறார்கள்'' என தேர்தல் கண் காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் பணிப் பாளர் கீர்த்தி தென்னக்கோன் சண்டேலீடர் பத்திரி கைக்குக் கூறியிருந்தார்.தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம் பெறுவதைத் தடுக்கும் ஒரு சுழமைவுதான் இது.
இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்காலம்தான் என்ன? அவர்கள் தமக்கான _தந்திரத் தேசத்தைத் தற்போது கோரவில்லை, பாதுகாப்புடனும் கௌரவத் துடனும் வாழும் ஒரு வாழ்வுக்காகத் தான் அவர்கள் அவாவி நிற்கிறார்கள். இந்த நாட்டின் சமதகைமையுடைய குடி மக்களாகத் தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்றே தமிழர்கள் கோருகிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது வாழ்வைப் பிரபாகரன் கட்டுப்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்ப்பதற்குத் திராணியில்லாமல் அந்த மக்கள் புலிகளின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை.
மாறாக, ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளை முறித்து, வழங்கிய வாக்குறுதிகளை உதறித்தள்ளித் தங்களுக்குத் துரோகமிழைத்த தொடராக ஆட்சிபீடம் ஏறிய சிங்கள அரசுகளை நம்புவதற்கு தமிழர்கள் தயாராக இருக்கவில்லை.
1958 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் தொடக்கம் ராஜபக்ஷவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவரைக்கும் இதுதான் நிலை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை தற்போது குப்பைக் கூடையிலேயே தனது காலத்தைக் கழிக்கக் கூடும்.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளைத் தன் னகத்தே கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்காத போதும் குறித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு அரசு தயாரெனில் நாங்கள் அதனை ஆக்கபூர்வமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராகவே இருக்கிறோம்' என கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
எவ்வாறிருப்பினும், தானே அமைத்த அனைத்துக் கட்சிக் குழுவின் பிரேரணைகளை மகிந்த ராஜபக்ஷ தானே நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது.பதிலாக தனது விருப்பத்துக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய அவர் தற்போது நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு விரும்புகிறார்.
மஹிந்தவின் நடவடிக்கை நகைப்புக்குரியது
இந்த விடயம் நாட்டு மக்களுக்கு மாத்திரமின்றி அனைத்துலக சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கும் நடைமுறை நகைச்சுவையான தொரு அம்சமாகத் தான் இருக்கும்.
ராஜபக்ஷ அரசு ஆட்சியில் தொடரும் வரைக்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதே இல்லை என்பதுதான் உண்மை.சிங்கள வாக்காளர்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற அச்சத்தால் ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்களப் பெரும்பான்மை அரசும் தமிழர்களுக்குச் சம உரிமையை வழங்கப் போவதில்லை.இலங்கைத் தீவில் சிங்களவர்கள் வந்து குடியே றிய நெடுநாள்களின் பின்னர் இந்தத் தீவுக்குள் நுழைந்த வெளிநாட்டவர்கள்தான் தமிழர்கள் என்றும் அவர்களுக்குச் \ம உரிமையை வழங்க வேண்டிய தேவை எதுவுமில்லை என்றுமே பெரும் பான்மைச் சிங்களவர்கள் நம்புகிறார்கள்.
எல்லாள மன்னனின் வழிவந்தவர்கள் தான் தமிழர்கள். நாங்கள் பேரரசன் துட்டகைமுனுவின் வழி வந்தவர்கள். தமிழ் மன்னான எல்லாளனை துட்டகைமுனு போரில் தோற்கடித்திருந்தான். ஆதலி னால் தமிழர்களைச் சமமாக நடத்த முடியாது இது தான் சிங்களவர்களின் மனங்களிலுள்ள சிந்தனை.
இது போன்றே சிங்களச் சிறார்களும் எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். திராவிடத் தமிழர்களை விட ஆரியச் சிங்களவர்கள் மேலான வர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே சிங்களச் சிறார்கள் வளர்க்கப்படுகிறார்கள்.
புத்த பெருமானின் போதனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட உண்மையான பௌத்த நாடாக இலங்கை மாறும் வரைக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சம உரிமை வழங்கப்படப் போவதில்லை.
இந்த உலகில் ஒரேயோரு மனித இனம்தான் இருக்கிறது என புத்தபெருமான் போதிக்கிறார். இந்த உலகிலுள்ள அனைத்து மாந்தர்களும் ஒரே இனத் தைச் சேர்ந்தவர்களே எனப் புத்தபெருமான் தெளி வாக வலியுறுத்துகிறார்.நாட்டின் சிங்கள ஆட்சியாளர்கள் இந்த உண்மையை எப்போது சரியாக விளங்கிக்கொண்டு அதனை ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம உரிமை கிடைக்கும். இந்த உண்மையை இவர்கள் உணரும் அந்த நாள் புலருமா?
Ground views இணையத்தளத்தில் Leela Isaac எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
Ground views இணையத்தளத்தில் Leela Isaac எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
நன்றி:புதினப்பலகை
Ingen kommentarer:
Legg inn en kommentar