தொடரும் பதிவுகளால் கிலி கொள்ளும் தமிழர்கள்

 essay
வடமாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சின் தேவைக்காக வாழ்நிலைத் தகவல்களைக் கணக்கெடுத்தல் என்ற செயற்பாட்டு புள்ளி விவரத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாமல் வடக்கில் மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் கணக்கெடுப்பு முழுமையாக முடிந்து விட்டது.
 வன்னி மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணியை தம்மால் மேற்கொள்ளமுடியாது என ஒரு பகுதி ஆசிரியர்கள் எதிர்த்த போதும் எஞ்சியவர்களைக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இந்தப் பணியை மேற்கொள்ள ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு ஆசிரிய சங்கங்கள் சிறு அளவில் தமது எதிர்ப்பையும்  கண்டனத்தையும் பதிவு செய்ததுடன் தமது பணியை நிறுத்திக்கொண்டன.
 
யாழ். மாவட்டத்தில் நடந்த பயிற்சி வகுப்பிலும் கூட எதிர்பார்த்தளவுக்கு  ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் இங்கும் எஞ்சியவர்களைக் கொண்டு கணக்கெடுப்பின் 50 வீதமான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.

படிவம் நிரப்பல்

வாழ்நிலைத் தகவல்களைக் கணக்கெடுத்தல் 2011 என்ற தலைப்பிடப்பட்ட ஐந்து பக்கங்களைக் கொண்ட ஒரு படிவம் மக்களுக்கு வழங்கப்பட்டு தகவல்கள் திரட்டப்படுகின்றன.இதில் முதல் பக்கத்தில் தொகை மதிப்பாக நடை பெறும் பகுதியை/ நிலத்தை அடையாளம் காணும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அதே பக்கத்தில் இருப்பிடத்தின் வகை மற்றும் குடியிருப்பாளர்களின் அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
 
இரண்டாம் பக்கத்தில் பகுதி ஒன்றில் வழமையான கேள்விகள் உள்ளன. குடும்ப தேசிய அடையாள அட்டை இலக்கம், உறவுமுறை, பால், பிறந்த ஆண்டு, மாதம், திகதி, மொழி, மதம் போன்றன கேட்கப்பட்டுள்ளன.மூன்றாம் பக்கம் பகுதி இரண்டு சார்ந்த ஆழமான விவரங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. அதாவது வேறு பிரதேசத்தில் ஒருவர் வசித்தமை பற்றிய விவரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புலி ஆதரவாளரைத் தேடல்
 
ஏற்கனவே 2 ஆம் பக்கத்தில் பகுதி ஒன்றில் குடித்தன விவரம் அல்லது கூறில் கூறப்பட்ட சகலரையும் உள்ளடக்கி அந்த ஒவ்வொரு நபரும் இந்த வசிப்பிடத்துக்கு வருகை தந்தமைக்கான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரத்திலிருந்து ஒரு நபர் தான் வசிக்கும் மாவட்டத்துக்கு எப்போது வந்தார் என்பதை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்கள். குறிப்பாக வன்னியிலிருந்து போரின் பின்னர் மீளக் குடியமர்ந்தவர் என்பதை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிலும் புலிகளுடன் கூடச்சென்றவர்களா இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்தவர்களா  என்று அறிய முயன்றிருக்கிறார்கள்.
 
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் நிலையத்தில் இருந்து மீள் குடியேற்றப்படல், ஏனைய இடங்களிலிருந்து மீள் குடியேற்றப்படல் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் நிலையத்திலிருந்து மீள் குடியேற்றப்படல் ஏனைய இடத்திலிருந்து மீள் குடியேற்றப்படல்'' என்று இது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
 
மூன்றாம் பக்கம் பகுதி மூன்றில் வேறு பிரதேசங்களுக்கு வசிக்கச்சென்றோர் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் போரில் இறந்தோரின் விவரத்தை இதன் மூலம் பெற முயன்றிருக்கிறார்கள். அதே போன்று புலம் பெயர்ந்து சென்றவர்களின் விவரத்தையும் இதற்கூடாகப் பெற முயன்றிருக்கிறார்கள். அப்படிச் சென்றவர்கள் ஏன் போனார்கள். அவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பு உண்டா இல்லையா என்பது குறித்தும் இந்த விவரங்கள் ஊடாக அறிய அரசு முயற்சிக்கிறது.இறுதியாக இறந்த அல்லது காணாமல் போனோர் விவரம் பகுதி 5 இல் 
கோரப்பட்டுள்ளது. "1982 ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் இந்தக் குடித்தனத்தின் குடும்பக் கூறில் அல்லது கூட்டு வசிப்பிடம் போன்ற ஏனைய கூறில் தமது குடும்பத்தின் சகல உறுப்பினர் களையும் இழந்து வசிப்பவர்களின் குடும்பக் கூறில் உறுப்பினராக இருந்து இறந்து அல்லது காணாமல் போனவர்கள் சம்பந்தமான விவரம்'' தருமாறு கோரப் பட்டுள்ளது.

இழப்புப் பதிவு
 
இறந்த, காணாமல் போனவர் பெயர், பால், உறவு, வருடம், இறப்புப்பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் என்பவற்றுடன் கேட்கப்பட்டுள்ளது.கடந்த கால வன்செயல்களின் போது அல்லது இராணுவ நடவடிக்கையின் போது பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள்.  அவற்றை நேர்மையாகத் திரட்ட இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
 
படைத்தரப்பில் ஏற்கனவே இத்தகைய புள்ளி விவரங்களை வீடு வீடாகச் சென்று சேகரித்தனர். அதனைத் தமிழ் மக்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்தன இதன் அடிப்படையில் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால், இராணுவத்தினரின் நடவடிக்கையைக் கைவிடுவதாக ஊடகங்களுக்கு அறிவித்த யாழ்.குடாநாட்டு இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, "மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து இராணுவம் தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்'' என்று அறிவித்தார். பாதுகாப்புத் தொடர்பான உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இராணுவத்துக்காகவே பதிவு நடவடிக்கை
 
இராணுவத்தின் தேவைக்காகவே தற்போதைய கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.  இந்தக் கணக்கெடுப்பை இராணுவம் மேற்கொண்டால் கண்டனம் வருகின்றது. என்பதால் ஆசிரியர்களைக் கொண்டு, புள்ளி விவரத்திணைக்களத்தின் ஊடாக இதனை மேற்கொள்கின்றனர்.
 
இந்த நடவடிக்கை குறித்து புள்ளிவிவரத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம் அவர் தெரிவித்ததாவது:
"புள்ளி விவரத் திணைக்களத்தினால் 10 வருடங்களுக்கு ஒரு முறை குடிசன மதிப் பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன டிப்படையில் இந்தவருடம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வடக்கில் இரு கட்டங்கள் முடிவடைந்துள்ளன. இறுதிக்கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதற்கிடையில் இந்த விசேட கணக் கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இது எந்தத் திணைக்களத் தேவைக்கானது என்று எமக்குத் தெளிவாகத் தெரியாது. 
 
இது தொடர்பில் கொழும்பில் உள்ள புள்ளி விவரவியல் திணைக்கள தலைமையகத்தில் கேட்ட போது, இது 2011 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டத்துக்கு வடக்குக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவே மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டது'' என்றார். கைவிட்ட அரசியல் வாதிகள்
இந்த விசேட கணக்கெடுப்பு எந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது? இந்தப்பணியை புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொண்டாலும் வழக்கமான கணக்கெடுப் பில் கேட்பதை விட மேலதிக விவரம் ஏன் கேட்கப்படுகிறது? தகவல்கள் அந்தரங்கமாக பேணப்படுமா? எடுக்கப்படும் கணக்கெடுப்பின் சாராம்சம் வெளியிடப்படுமா? அந்த விவரங்கள் யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும்? இந்த விசேட கணக்கெடுப்புக்கான வாகன உதவிகள் தங்குமிட வசதிகள் அனைத்தும் இராணுவத் தால் ஏன் வழங்கப்படுகின்றன? வழக்கமாக பொதுசன மதிப்பீட்டில் ஈடுபடும் ஊழியர்கள் சத்தியக் கடதாசி முடிக்க வேண்டும். ஆனால் இந்த விசேட கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவரும் சத்தியக் கடதாசி முடிக்க வில்லை.
அது ஏன்? அப்படிப்பட்ட ஒரு நிலையில் பெறப்படும் தகவல்களின் பாதுகாப்பு நம்பகம் எவ்வளவு? போன்ற பல கேள்விகளுக்கு இந்த விசேட கணக்கெடுப்பில் பதில்கள் கிடையாது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
"இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசியல் வாதிகள் தங்கள் தேர்தல் பிரசாரங்களுடன் இதைக் கைவிட்டு விட்டார்கள். இதுதான் மக்களின் வேதனை'' என்றும் அந்த அதிகாரி கவலைப்பட்டார்.இந்தப் பதிவு நடவடிக்கைகள் குறித்துக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

Ingen kommentarer:

Legg inn en kommentar