திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயப்படுகின்றன என்பது சொலவடை. ஆனால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் இளம் வயது திருமணங்கள் நரகத்தில் நிச்சயப்படுகின்றன என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது. எத்தனை அரசுகள் வந்தாலும் இன்றளவும் தடுக்க முடியாதவையாக அமைந்துள்ளன இந்த இளம் வயது திருமணங்கள்.போதிய கல்வியறிவு பெறாமையே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 2001-ல் 12,95,182 என்ற எண்ணிக்கையில் இருந்த மக்கள் தொகை இப்போது (2011) 15,02,900 என்ற அளவில் உயர்ந்துள்ளது. பெண்கள் 7.30 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். குறிப்பாக 6 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 77, 278 ஆக உள்ளது. மாவட்டத்தின் மொத்தக் கல்வியறிவு சதவீதம் 64.71. பெண் கல்வி சதவீதம் 60.03 ஆக உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2001-ல் 15,46,700 ஆக இருந்த மக்கள் தொகை இப்போது (2011), 18,83,731 ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் 9,20,579 பேர் உள்ளனர். ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 97,858 ஆக உள்ளது. மாவட்டத்தின் மொத்தக் கல்வியறிவு சதவீதம் 72.41 ஆக உள்ளது. பெண் கல்வி சதவீதம் 64.86 ஆக உள்ளது.தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காக வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சென்று வேலை பார்த்து வரும் சூழலில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்ற எண்ணத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துவிடுகின்றனர்.பொருளாதார நெருக்கடியும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. கூலி வேலைக்குச் சென்று குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களே அதிகமுள்ளதால் பெண் குழந்தைகளை உயர்கல்வி கற்க வைத்து, அதற்குத் தகுந்த வரனைத் தேடி வரதட்சிணை கொடுக்கும் சக்தி இல்லை. 4 முதல் 10 பவுன் வரை சேர்த்து திருமணத்தை முடிக்கவே படாதபாடுபடுவதால், கூலி வேலைக்குச் செல்லும் சக தொழிலாளிக்கே குறைந்த வரதட்சிணையில் தங்களது குழந்தைகளை இளம் வயதிலேயே திருமணம் செய்துவிடுகின்றனர்.வயதுக்கு வந்த பெண்களை அவர்களது சட்டப்பூர்வமான திருமண வயதான 18 வயது வரை பாதுகாக்க முடியாது என்ற எண்ணத்தில் 14 வயது முதல் 16 வயதுக்குள்ளாகவே திருமணத்தை முடித்துவிடுகின்றனர்.இரு மாவட்டங்களிலும் 70 சதவீத கிராமங்கள் மலைப்பாங்கான பகுதிகளாகவே உள்ளன. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் எஸ்சி, எஸ்டி பிரிவினரிடையே அதிக அளவில் இளம் வயது திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.மலைவாழ் மக்களில் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தாலே பெண்களுக்கான திருமண உதவித் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் இந்த உதவித் தொகையை பெறுவோர் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். ஏனெனில், 5-ம் வகுப்புவரை பெண்கள் கல்வி கற்பதே இங்கு அரிதாக உள்ளது.பெண் கல்வியறிவு சதவீதம் உயர்ந்தாலே விழிப்புணர்வு ஏற்பட்டு தகுந்த வயதில் திருமணம் என்பது சாத்தியமாகும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிக் கல்விக்கே (12-ம் வகுப்பு வரை) பல கிராமங்கள் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதன்காரணமாக பருவ வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வெகுதொலைவில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயங்கும் நிலையுள்ளது. மேல்நிலைக் கல்வியை கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும் வகையில் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.பெற்றோர்கள் பிழைப்புக்காக வேறு ஊரில் இருப்பதால் அவர்களது பெண் குழந்தைகளுக்கென தனியாக உண்டு, உறைவிடப் பள்ளிகளை கிராமப்புறங்களில் அதிகம் தொடங்க வேண்டும்.உள்ளூரில் வேலையில்லாமல் வெளியூருக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதை மாற்ற அதிக அளவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழிற்பேட்டைகளையும் உருவாக்க வேண்டும். அனைவருக்கும் அவரவர் பகுதியிலேயே வேலைவாய்ப்பு என்ற நிலை வந்தால் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதுடன், இளம் வயது திருமணமும் நடைபெறாது என்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.குறிப்பாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை ஒன்றிணைந்து பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கென தனித் திட்டத்தை இரு மாவட்டங்களுக்கென சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பெண்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுத்தல், பிறந்த பெண் குழந்தைகளைக் கணக்கிட்டு அவர்கள் உயர்கல்வி வரை கற்கின்றனரா என்பதைக் கண்காணித்து, அத்தகைய கல்வியைப் பெற்றுத் தருதல், பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளித்து, உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் திருமணத்துக்கு தயார்படுத்தி சட்டப்பூர்வ வயதை எட்டிய பிறகே திருமணம் நடைபெறுவதை உறுதி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இளம் வயது திருமணங்களைத் தடுக்கச் சட்டங்களால் மட்டுமே சாத்தியமாகாது!
Ingen kommentarer:
Legg inn en kommentar