யானை காப்பாற்றிய கோட்டையை தக்க வைத்துக்கொள்ளுமா ஐ.தே.க?

'ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான கோட்டைகளை நாம் கைப்பற்றுவோம் - இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சூளுரை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கண்டியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது அவர் தெரிவித்தார். ஆனால், ஆளுங் கட்சியின் குறி..? இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இன்று வரை 62 வருட காலமாக கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியே தன்னகப்படுத்தி வருகின்றது. அதேபோல் தான் இம்முறை தேர்தலிலும் தன்னகப்படுத்தியுள்ளது.

பலப் பரீட்சைகளுக்கு மத்தியிலும் கொழும்பு மாநகர சபையை வெற்றிகொண்டுள்ளது என்றால் இந்த வெற்றிக்கு யானையா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையா? என்று சற்று சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. ஐ.தே.க.வின் முக்கிய கோட்டை எனக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்கு ஆளுந்தரப்பு பல்வேறு கைங்கரியங்களில் ஈடுபட்ட போதிலும் வெற்றிகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சமமான முக்கியத்துவத்துடன் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்றன. பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் தலைநகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விறுவிறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன. மினித்தேர்தலான இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு பொதுத்தேர்தலை விட பிரசார முன்னெடுப்புகள் விறுவிறுப்பாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவசரசாலச் சட்டத்தை நீக்கிய ஜனாதிபதி நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பைக் கைப்பற்றினால் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் இப்போதும் தம்முடன் நிற்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்று எண்ணியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு வாழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனரா? என்ற கேள்வியும் எழுகின்றது.

கட்சியின் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டுமாயின் தலைகீழாவது நின்று கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருந்தது. இது நடக்குமா? நடக்காதா என்ற அச்சத்தில் எப்படியாவது யானைச் சின்னம் ரணிலைக் காப்பாற்றி விட்டது என்றுதான் கூற வேண்டும்.

கொழும்பு மாநகரசபையின் அபிவிருத்தி என்பதைத் தமது கோஷமாகக் காட்டிக் கொண்டு பிரதான கட்சிகள் களத்தில் குதித்து பல்வேறு உபாயங்களை முன்னெடுத்திருந்தன. ஐந்து பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய கொழும்பு மாநகரசபையில் சிறுபான்மையின மக்களைப் பெரும்பான்மையாக உள்ளடக்கியிருக்கும் தொகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்து வந்த காலம் முதல் கொழும்பு மாநகரசபைக்காக இடம்பெற்ற தேர்தல்களில் பெரும்பாலும் ஐ.தே.கட்சியே வெற்றி பெற்றிருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது அதன் ஆதரவு அணிகளோ கொழும்பு மாநகரைக் கைப்பற்றியதாக சரித்திரம் இல்லை. கொழும்பு யானையின் கோட்டையாகவே இருந்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மூன்று கட்டமாக இடம்பெற்று முடிந்தது. இவ்வாறு தேர்தல் இடம்பெற்ற பகுதிகளில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளை ஆளுந்தரப்பினால் வீழ்த்த முடியாவிட்டாலும், பெரும்பாலான இடங்களை ஆளுந்தரப்பு தன்னகப்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. குறிப்பாக ஐ.தே.க.வின் கோட்டைகள் அனைத்துமே வீழ்த்தப்பட்டன. அந்த எண்ணத்திலேயே கொழும்பும் தம்வசப்படும் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் முயற்சி பயனளிக்காது போயுள்ளமை பெரும் கௌரவப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

வடபகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மண்ணைக் கவ்வியது. இந்த நிலையில் கொழும்பைக் கைப்பற்றுவதன் மூலமாகத்தான் சிறுபான்மையினர் ஓரளவுக்காவது தம்முடன் இணைந்திருக்கின்றார்கள் என்ற தேவையை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டலாம் என்றால் அதுவும் முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.




செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப்பேரவைக் குழுக்கூட்டத்தில் இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், சர்வதேசத்தை சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை மறுக்கமுடியாது. அத்துடன் பல சர்வதேச நாடுகளும் இலங்கையைக் கைவிட்டுவிட்டதாக ஆளுந்தரப்பு அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெளிவாகக் கூறியிருந்தார். போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு கைங்கரியங்களினூடாக முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட அரசு தமிழ் மக்களிடம் இருந்து எதிர்பார்த்திருந்த சில நடவடிக்கைகள் தவறிவிட்டன என்று கூறினால் அது மிகையாகாது.

கடந்த நான்கு வருட காலமாக இடம்பெற்ற தேர்தல்கள் அனைத்திலும் போர் வெற்றியையும், சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மையப்படுத்தியதாகவே அரசின் பிரசாரங்கள் அமைந்து தேர்தல்களில் வெற்றியும் பெற்றிருந்தது. ஆனால் கொழும்புத் தேர்தலில் அந்த உத்தி பலிதமாகாது மாறியிருந்ததை நோக்கலாம்.

கொழும்பு தப்பியதால் தனக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாது எப்படியும் தலைமைப்பொறுப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று ரணில் தற்போது கருதியிருக்கிறார் போலும். ஆனால், கட்சி உறுப்பினர்களின் மன நிலைதான் என்னவோ?

G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar