ஓர் அச்சமூட்டும் இரவுக்குப் பின்னர் விடிந்த அன்றைய காலை
பரிதாபத்துக்குரியதாக இருந்தது. தஞ்சமடைந்த இடங்களில் பெற்றோரைக் காணாது
தவித்த பிள்ளைகளும் பிள்ளைகளை, சகோதரங்களைக் காணாது தவித்த உறவுகளும்
என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று கண்கள் குளமாகி, பரிதவித்துக் கிடந்தனர்.
நள்ளிரவு
தாண்டி நேரம் அதிகாலை 2.45 மணியை எட்டியிருந்தது. கள்ளர் வந்தாலும்
தெரியாத ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர் குடாநாட்டு மக்கள். திடீரென துப்பாக்கி
வேட்டுகளும் எறிகணை வெடியோசைகளும் காதைப் பிளந்தன.
நடப்பது என்ன என்று தெரியாமல்
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கலங்கினர். நித்திரையில் காணப்பட்ட
பிள்ளைகளைத் தட்டி எழுப்பி, ஓயாத எறிகணை வீச்சு மற்றும் துப்பாக்கி வேட்டு
சத்தங்களுக்கு மத்தியில் அருகில் உள்ள ஆலயங்களையும் பாதுகாப்பான
இடங்களையும் நாடி ஓடினர்.
எறிகணைகள் எங்கு விழுகின்றன என்று
தெரியாமல் அலங்கமலங்க விழித்தபடி மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். தலைக்கு
மேலால் எறிகணைகள் கூவிக் கொண்டு பறந்தவேளைகளில் எல்லாம் பற்றைகள் புல்தரை
எதுவும் பார்க்காமல் வீழ்ந்து படுத்துப் படுத்து ஓடியபடி பாதுகாப்பான
இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்தனர்.
வீட்டிலிருந்து வெளிக்கிட மறுத்த
வயோதிபப் பெற்றோரை விட்டுச் சென்ற பிள்ளைகள் மத்தியில், "எல்லோரும்
ஒன்றாகச் சாவோம்'' என்று கூறி வீட்டிலேயே பெற்றோருடன் தங்கியிருந்த
பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் நூற்றுக்கணக்கானவை.
சீறி வரும் துப்பாக்கி ரவைகள் மற்றும்
எறிகணைகளுக்கு மத்தியில் தமது உயிரே மிஞ்சுமா என்று தெரியாமல் ஓடியவர்கள்,
தமது வளவுகளில் பட்டடைகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகள், மாடுகள், கோழிகளைப்
பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்? எறிகணைகளின் உக்கிரத் தாக்குதலில் பல
பனைகளே தீப்பிழம்பாகி எரிந்தபோது எதுவும் மிஞ்சப்போவதில்லை என்பதை மக்கள்
உணர்ந்து கொண்டனர்.
பிரதேசத்தில் உள்ள கிராமங்களில்
கல்வீடுகள் மிகக் குறைவாக இருந்ததால் மக்கள் கற்களால் கட்டப்பட்டிருந்த
ஆலயங்களை நாடி ஓடினர். எறிகணைகள் அனைத்தும் ஏ9 வீதியிலும் பெரும்பாலான
தென்னந் தோட்டங்களிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்ததால் மக்களுக்குப்
பாதிப்பு ஏற்படவில்லை.
பொழுது விடிந்தபோது வீதியில் மக்கள்
நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை. இன்று போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத
காலம் அது. முதல் நாள் இரவில் அந்தப் பகுதியெங்கும் வீழ்ந்து வெடித்த
எறிகணைகள், இரு பகுதியினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றிருக்கலாமென்ற
ஊகத்தை மக்களிடம் தந்தபோதும் அந்த மோதல் எங்கு நடந்தது என்றும் எவரும்
அறிந்திலர்.
ஓர் அச்சமூட்டும் இரவுக்குப் பின்னர் விடிந்த அன்றைய காலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது.
தஞ்சமடைந்த இடங்களில் பெற்றோரைக்
காணாது தவித்த பிள்ளைகளும் பிள்ளைகளை, சகோதரங்களைக் காணாது தவித்த
உறவுகளும் "என்னாயிற்றோ ஏதாயிற்றோ'' என்று கண்கள் குளமாகி, பரிதவித்துக்
கிடந்தனர்.
காலை 8 மணிக்குப் பின்னர் எறிகணை
வீச்சு மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் குறைந்த பின்னர் விசாரித்தபோது
பளை முல்லையடியில் இருந்த அரச படையினரின் எறிகணைத்தளம் அழிக்கப்பட்டதாகத்
தகவல் கிடைத்தது.
இரவு இடம்பெற்ற அதிர்வுகளால்
பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர். பளை
நகரம், பெரியபளை, புலோப்பளை அல்லிப்பளை, முல்லையடி போன்ற பிரிவு மக்கள் ஒரு
இடத்திலும் தம்காமம் வண்ணான்கேணி போன்ற பிரிவு மக்கள் ஓரிடத்திலும்
அரசர்கேணி, கச்னர்வெளி, இத்தாவில், முகமாலை வேம்பொருகேணி ஆகிய பிரிவு
மக்கள் ஓரிடமாகவும் ஒதுங்கியிருந்தனர்.
கச்னர் வெளி தொடக்கம் பளை முல்லையடி
வரையான பகுதி இரவோடு இரவாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்
சென்றிருந்ததால் மக்கள் செய்வதறியாது கலங்கினர்.
பச்சிலைப்பள்ளி மேற்குப் பகுதியில்
நிலை கொண்டிருந்த படையினரோ அந்தப் பகுதி மக்களை உடனடியாக அங்கிருந்து
வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து கச்சாய்வெளி, செல்வபுரம்,
வேம்பொடுகேணி, இத்தாவில், அரசர்கேணி, முகமாலை போன்ற பிரிவுகளைச் சேர்ந்த
ஆயிரக்கணக்கான மக்கள் தமது கையில் அகப்பட்ட பொருள்களுடன் ஏனைய உடைமைகளைக்
கைவிட்டு உட்பாதைகள் ஊடாக முகமாலைக்கு வந்து அங்கிருந்து ஏ9 வீதியினூடாகக்
கால்நடையாக இடம்பெயர்ந்தனர்.
அந்த நாள் 26.03.2000.
பச்சிலைப்பள்ளி மேற்குப் பிரதேசமான
முகமாலை, வேம்பொடுகேணி, இத்தாவில், பகுதிகளைச் சேர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்து நேற்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. ஆனால் இன்னமும்
தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பவில்லை.
இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று
தமது மீள்குடியமர்வை எண்ணி அவர்கள் நாளாந்தம் ஏக்கத்துடன்
காத்துக்கிடக்கின்றனர். போர் முடிந்து மூன்றாண்டுகளை எட்டும் நிலையிலும்கூட
இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கைக்
கீற்றுக்களைக் காணமுடியவில்லை.
இன்று அறிவித்தால்கூட மூட்டை
முடிச்சுக்களுடன் புறப்படத் தயாராக இருக்கும் இந்த மக்களுக்கு சொந்த இடம்
திரும்பும் அனுமதி கிடைக்காதமை கவலையளிக்கிறது.
அது இப்போதெல்லாம் மெல்ல வெறுப்பாகி, விரக்தியாகி, கோபத்தைக் கிளறுகிறது.
12 வருடங்களாக ஒவ்வொருவரும் தமது சொந்த மண்ணைவிட்டு இடம் பெயர்க்கப்பட்ட குடியிருப்பாளர்களும் கொண்ட துயர் சொல்லில் அடங்கா.
பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்று
தமது வீட்டில் குடியமர்த்தியவர்கள் கொஞ்ச நாள் செல்ல வாடகை கேட்டு
வற்புறுத்தியதால் 12 வருடங்களில் கேட்கும் வாடகை கொடுக்க வசதியில்லாததால்
50 இற்கு மேற்பட்ட வீடுகளுக்கு மாறி மாறி குடியமர்ந்து கொண்டு தங்களுக்கு
எப்போது விடிவுவரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமருக்குக்கூட 14 ஆண்டுகளில் வனவாசம் முடிந்துவிட்டது. தங்களுக்கு எப்போது அது நிகழும் என்று காத்திருக்கிறார்கள் அந்த மக்கள்.
|
Ingen kommentarer:
Legg inn en kommentar