தடுமாறும் இலங்கை

 essay
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடந்த 22 ஆம் திகதி 9 வாக்குகளால் வெற்றிபெறுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தது.
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவால் இலங்கை மீது கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவுக்காகக் காத்திருப்பதாக இருந்தாலும் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க எண்ணியுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசும் உரையின்போது தெரிவித்திருந்தார்.
 
ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை எட்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய தரப்புகளுடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும் எனவும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

சிதறடிக்கப்பட்ட 
எதிர்பார்ப்பு
 
இது இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கப் போவதில்லை எனவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என்ற முடிவு நீண்டகால இலங்கை இந்திய உறவின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்த வேளையில் அக்கருத்துகளுக்கு நேர்மாறான முறையில் இந்தியப் பிரதமர் இப்படியான ஒரு கருத்தைத் திடீரென அறிவித்திருப்பது இலங்கையின் எதிர்பார்ப்புகளைச் சிதறடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
 
இந்திய அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது ஒரு வாக்குப் பலம் என்பதற்கும் அப்பால் தென்னாசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கை சீனா பக்கம் சாயப்போவதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி மிரட்டுவதன் மூலம் நான் செய்யும் மானிடகுல விரோத நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் தொடர்ந்தும் இந்திய ஆதரவைப் பெற முடியுமா என்ற கேள்வியையும் இம்முடிவு எழுப்பியுள்ளது.
 
மஹிந்தவின் குரல்கள்
 
இந்த அறிவிப்பு வெளியானதுமே இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இது இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே எடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
 
இலங்கைக்கு திருப்தியளிக்கும் வகையில் நம்பிக்கையளிக்கும் வகையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இம்முடிவு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக எவ்விதமான கருத்தையும் வெளியிடாவிட்டாலும் அவரின் குரலாக ஒலிக்கும் சிங்களக் கடும்போக்குவாதிகள் துள்ள ஆரம்பித்துவிட்டனர்.
 
ஜாதிக ஹெல உறுமயவின் சோபித தேரர் இந்த முடிவின் மூலம் இந்தியா, ராஜீவ்காந்தியை மீண்டும் கொலை செய்துவிட்டது எனக் கடுமையான முறையில் தாக்கியுள்ளதுடன் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் காணி பொலிஸ் அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்க அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச இந்தியப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
 
அதேவேளையில், கொழும்பிலிருந்து வெளிவரும் அரச சார்பு ஆங்கில ஊடகங்கள் இம்முடிவு தொடர்பாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இம்முடிவைக் கண்டித்து ஆசிரியத் தலையங்கங்கள் தீட்டியுள்ளன. இன்னொரு ஆங்கில நாளேடு முன்பக்கத்தில் மன்மோகன் சிங் தனது இந்தியத் தலைப்பாகையைக் கழற்றிவிட்டு அமெரிக்கத் தொப்பியை அணிந்திருப்பதாகக் கார்ட்டூன் பிரசுரித்துள்ளது.
 
சிங்களப் போக்காளரின் ஆர்ப்பாட்டம்
 
எதிர்வரும் நாள்களில் சிங்களக் கடும் போக்காளர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை எரித்தாலும் அது வியப்புக்குரிய விடயமல்ல. அப்படி இடம்பெறும் வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்த்தோ, ஆதரித்தோ எதுவும் சொல்லாது மௌனம் காப்பார் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
 
இவ்வாறு இந்த முடிவு கொழும்பைப் பெரும் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளியுள்ள வேளையில் இது தமிழக மக்களை முழுமையாகத் திருப்தி செய்யவில்லை என்ற ஒரு தோற்றப்பாடும் உருவாகியுள்ளது. இம்முடிவு தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்து வெளியிடுகையில், இந்தியப் பிரதமரின் உரை ஒரு மழுப்பலானது எனவும் இலங்கை அரசுமேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையிலேயே இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை புதுச்சேரி மாநிலத்தில் ஜெனிவாப் பேரவையில் இந்தியா அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரி அண்ணா தி.மு.கவினர் முழுநேரக் கடையடைப்பை நடத்தியுள்ளனர்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பிரதமரின் கருத்து மழுப்பலானதும் கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணை போவதாகவும் உள்ளது என்பது பலரையும் சிந்திக்கத் தூண்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கடந்த காலத்தில் தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களும் சந்தித்த சில அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழக முதல்வரின் கருத்துக்களை எவரும் அலட்சியம் செய்துவிட முடியாது.
 
கருணாநிதியின் அறிவிப்பு
 
போரின் இறுதி நாள்களின்போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை முன் வைத்தன. இந்தியா மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொண்டன. இந்த நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படாவிட்டால் தங்கள் நாடாளுமன்றப் பதவிகளை ராஜிநாமா செய்யப் போவதாகக் கருணாநிதி அறிவித்தார்.
 
கருணாநிதியின் மகள் கனிமொழியும் தனது ராஜசபா உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக முன்னாள் முதல்வரிடம் கடிதம் கொடுத்தார். இந்தபரபரப்பான அறிவிப்புக் காரணமாக இலங்கைத் தமிழ் மக்களும் தமிழக மக்களும் ஏதோ நடக்கப் போவதாக எதிர்பார்த்தனர். இலங்கை அரசு மக்கள் வாழும் பகுதிகள் மேல் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என அறிவித்த மத்திய அரசு கருணாநிதிக்கு அறிவிக்க அவர் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாகக் கூறித் தன் ஏமாற்று நாடகத்தை முடிவு செய்து ராஜிநாமாவைக் கைவிட்டார். ஆனால் அதேவேளையில் இலங்கையில் ஒவ்வொரு நாளும் எறிகணை வீச்சுகளாலும் விமானக் குண்டு வீச்சுகளாலும் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களும் தீக்குளிப்புகளும் எனப் போராட்டம் வலுக்கவே போர் வலயத்தில் அகப்பட்ட மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அன்று மாலையே போர் நிறுத்தத்தை இலங்கை அரசு மேற்கொண்டு விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
 
ஆனால் போர் வலயத்தில் ஒரு வினாடி கூடப் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. மனிதப் படுகொலைகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்த வண்ணமே இருந்தன.
 
இவ்வாறு முன்னாள் முதல்வர் அப்போது தமிழ் மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி ராஜிநாமா, உண்ணாவிரதம் என நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த அதேவேளையில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் போர் வலயத்தில் கொல்லப்பட்டனர்.
 
ஏராளமானோர் ஊனமுற்றனர். ஆயிரக் கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவைகளாகினர். போரின் பின் இடம்பெயர்ந்த மக்கள் இலட்சக் கணக்கில் உணவு, நீர், மருத்துவம் போன்ற வசதிகள் வழங்கப்படாமல் மிருகங்கள் போல அடைத்து வைக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் நிலையைக் கண்டறிய ஒரு குழு அனுப்பப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்க அந்தத் தி.மு.கவைச் சேர்ந்த குழுவினர் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எல்லா வசதிகளையும் வழங்குவதாக நற்சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போய்விட்டது. அதாவது இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு துணைபோக அவற்றை மறைக்கும் வகையிலும் நியாயப்படுத்தும் வகையிலும் தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் நாடகமாடி வந்தமையே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறாக விளங்கி வந்திருக்கிறது.
 
இவ்வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனவும் அப்படி ஆதரிக்கத் தவறினால் தாங்கள் மத்திய அரசில் தமது அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்யப் போவதாகவும் அறிவித்தார். 

மன்மோகன் ஆதரவு
 
இந்த அறிவித்தலை அடுத்து அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இது இந்திய மத்திய அரசும்  முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதியே என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகும். அதே அடிப்படையிலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
அதாவது போரின் இறுதிக் கட்டத்தின்போது நடத்திய ராஜிநாமா, உண்ணாவிரதம் போன்றே தற்சமயம் அமைச்சரவையிலிருந்து விலகப் போவதாகக் கருணாநிதி விடுத்த அறிவிப்பும் அதையடுத்து ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கப் போவதாக மன்மோகன்சிங் விடுத்த அறிவிப்பும் ஒரு நாடகம் எனத் தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கப் பிரேரணையை இறுதி வரைவு இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை என்ற இந்தியப் பிரதமரின் பதிலில் மழுப்பல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணையை இந்தியா ஆதரித்தாலும் அப்பிரேரணையின் வீரியத்தைக் குறைக்கும் வகையில் இந்தியா சில முயற்சிகளை எடுக்கக் கூடும் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலேயே ஏற்கனவே போரின் இறுதி நாள்களின் போது பெற்ற அனுபவங்கள் உள்ளன.
 
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை தமிழ் மக்கள் திருப்திப்படும் வகையில் இல்லை. ஆனால் அது அதன் பரிந்துரைகளைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றாது ஏமாற்றி வரும். எனவே தமிழ் மக்கள் நம்புகின்றனர். 
சிறப்பம்சம் என்ன?
 
எனினும் அமெரிக்கப் பிரேரணையின் சிறப்பம்சம் ஒரு வருட காலத்தில் இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அமெரிக்கப் பிரேரணையிலிருந்து இந்த அச்சம் நீக்கப்பட்டால் இதில் எவ்வித பயனுமில்லை (தீர்மானத்தில் அந்த அம்சம் நீக்கப்படவில்லை). இப்போ இந்திய ஆதரவின் பின்னால் இந்த அம்சம் நீக்கப்படக் கூடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதுள்ளது. அந்த அச்சம் நியாயம் என்பதை நிரூபிப்பது போன்று அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இந்திய முனைந்தது. எனினும் அமெரிக்கா அதை நிராகரித்துவிட்டதால் இந்தியாவின் இலங்கையைக் காப்பாற்றும் இறுதி முயற்சி முறியடிக்கப்பட்டது. எனினும் தீர்மானத்தில் ஒரு சில சொற்கள் திருத்தப்பட்டுள்ளன.
எப்படியிருப்பினும் இந்தத் தீர்மானம் சில பலவீனமான அம்சங்களைக் கொண்டிருப்பினும் இது நல்ல ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இலங்கை சர்வதேசத்தை ஏமாற்ற முடியும் எனவும் அவ்வேளைகளில் தங்களை இந்தியாவால் காப்பாற முடியும் எனவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஒரு உச்சத்தலையடி விழுந்துள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. 
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar