இலங்கைக்கு தோல்வி நிச்சயம்

 essay
ஐ.நாவில் இலங்கையைக் காக்கக் கோரி விகாரமாதேவிப் பூங்காவில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள்.


லங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது நடந்த இனப்படுகொலை தொடர்பாக அந்த நாட்டு அரசு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்கியுள்ளதுடன், இலங்கையைக் கோபம் கொள்ளவும் வைத்துள்ளது.
 
போரின் இறுதிக் கட்டத்தில் அனைத்துலக சட்ட விதிமுறைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பாக நம்பகமான, சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மீறல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுமே ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. இதற்கான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. 
 
இந்த விவாதம் வியாழனன்று (இன்று) ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை அரசால் "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டன என்று கடந்த ஆண்டில் வெளியான ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
போரில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் மனித உரிமைகளை மீறியிருப்பதற்கும் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதற்கும் நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளன என்று வல்லுநர் குழு தனது விசாரணையில் கண்டறிந்திருந்தது.
 
தற்போது அமெரிக்காவால் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானம், புரிந்துணர்வுடன் கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு ஏற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசு தனது நாட்டில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க நியமித்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பயனுள்ள, உறுதியான பரிந்துரைகளை துரிதமாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிப்பதே தீர்மானத்தின் நோக்கம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் எலீன் டோனஹே தெரிவித்துள்ளார்.
 
"இலங்கை அரசு சரியான திசையில் பயணிப்பதை ஊக்குவிப்பதற்கான நேர்மையுடன் கூடிய உண்மையான முயற்சியாகவே'' தீர்மானம் உள்ளதாகவும், பல மாதங்களாக இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்தத் தீர்மான வரைவு முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு இலங்கை அரசு பல நாடுகளையும் கோரி உள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்த நாடுகள் எதிர்க்க வேண்டும் என்று அவர் நேரடியாக மற்றைய நாட்டுத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார் என்று ராஜந்திர வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
 
அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் தீர்மானம் சர்வதேச சமூகத்தை இரு துண்டுகளாகப் பிளவுபடுத்துவதற்கு வழிவகுப்பதாகவும், இது இலங்கை அரசுக்கு எதிரான சதி எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கண்டிக்கிறார்.
 
அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்ப்பதற்குரிய கூட்டாளிகளைத் தேடுவதற்காக ஜெனீவாவிற்கு 70 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைத்துள்ளது. 
 
இலங்கை அரசு தனது நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான "நடவடிக்கைத் திட்டம்' ஒன்றை ஏற்கனவே வரைந்துள்ளதாக பெப்ரவரி மாத முடிவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமைச்சரும் மனித உரிமைகளுக்கான மஹிந்தவின் சிறப்புத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். 
 
முன்னர் போர் வலயங்களாக இருந்த பகுதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கான கால அவகாசம் இலங்கைக்குத் தேவைப்படுவதாகவும், வெளிநாடுகளிடமிருந்து இலங்கை மீது அழுத்தங்களோ அல்லது "தேவையற்ற தீர்மானங்களோ'' முன்வைக்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிடுகிறார்.
 
மேற்குலக நாடுகளின் தீர்மானத்தை எதிர்த்து இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் ஆர்வலர்கள் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்கள் என இலங்கை அரச சார்பு ஊடகங்களால் முத்திரை குத்தப்படுகின்றனர் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமது நடவடிக்கைகளில் அரச பிரதிநிதிகள் குறுக்கீடு செய்கின்றனர் என்று ஜெனிவாவில் பிரசன்னமாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். 
 
அத்துடன், மனித உரிமைகள் சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கூட தமது குழு உறுப்பினர்களை மீண்டும் மீண்டும் அரச பிரதிநிதிகள் குழு ஒளிப்படம் எடுத்ததாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். 
 
இந்த முறைப்பாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவரான உருகுவேயைச் சேர்ந்த லூரா டுபே லசேரேயால் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விவாதத்தின் வெளிப்பாடானது கொழும்புக்கான சோதனைக் களமாக இருப்பது போல், மனித உரிமைகள் சபைக்கும் சோதனைக்களமாக உள்ளது. 
 
2009 இல், இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த கையோடு, கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரின் போது ஆசியாவைச் சேர்ந்த, இலங்கையின் அயல்நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடித்தன. ஆனால் இந்தத் தடவை இலங்கை தனக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானத்தைத் தோற்கடிப்பது என்பது கடந்த தடவையைப் போல் அவ்வளவு எளிதானது அல்ல என்று இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைகள் சபையின் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களை மட்டுமல்ல அரசை விமர்சிப்பவர்களையும் பாதிக்கின்றன என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் 32 பேர் கடத்தப்பட்டுள்ளனர் இல்லையேல் காணாமற்போயுள்ளனர் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இத்தகையதொரு நிலையில் இலங்கை முன்னர் போன்று பிராந்திய ஒருமைப்பாட்டை எதிர்பார்த்து நிற்கமுடியாது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகியன ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இதன் உள்நாட்டுக்குள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.
 
மறுபுறத்தில் இந்தியா, இலங்கையின் அயல் நாடாகவும், கூட்டாளி நாடாகவும் உள்ளது. இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த திங்களன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
 
எனவே இலங்கைக்கு இந்தச் சவால் வெல்லப்படக்கூடியதாக இருக்கப் போவதில்லை. 
 
(நன்றி நியூயோர்க் ரைம்ஸ்)
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar