இவன் என்ன செய்தான்?

 essay
ஒரு காலத்தில் தமிழர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், தமிழ்ப் புலிகள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கு, பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர். அதாவது புலிகளின் ஆரம்பக் கட்ட வளர்ச்சிக்கு தேவையான சாத்தியப்பாடான உதவிகளை இந்திய முகவர் அமைப்புக்கள் 'எமது பையன்களுக்கு' வழங்கியிருந்தன. தமிழ்நாட்டில் புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் மிக இரகசியமாக செயற்படுத்தப்பட்டன. இதனால் புலிகளின் வளர்ச்சி அபரீத நிலையை அடைந்தது.
 
 
ரு காலத்தில் தமிழர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், தமிழ்ப் புலிகள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கு, பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர். அதாவது புலிகளின் ஆரம்பக் கட்ட வளர்ச்சிக்கு தேவையான சாத்தியப்பாடான உதவிகளை இந்திய முகவர் அமைப்புக்கள் 'எமது பையன்களுக்கு' வழங்கியிருந்தன. தமிழ்நாட்டில் புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் மிக இரகசியமாக செயற்படுத்தப்பட்டன. இதனால் புலிகளின் வளர்ச்சி அபரீத நிலையை அடைந்தது.
 
புலிகள் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்துக்கு எதிராக தரையிலும் ஆழ்கடலிலும் போரை எதிர்கொண்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டனர். புலிகள் தமிழர்களுக்கான தனித் தாய்நாடு என்ற குறிக்கோளுடன் மட்டும் நின்று விடவில்லை என்பது மிகப் பிரதானமானதாகும். மிக உச்சமான படை வலிமையைக் கொண்டு தென்னாசிய பிராந்தியத்தையே தமது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
 
இதன் விளைவாக இந்தியாவும் இலங்கையும் இராணுவ ரீதியிலான விலையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 100,000 வரையான உயிர்கள் பறிக்கப்பட்டன, இதில் 28,000 வரையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் 23,330 இலங்கை இராணுவத்தினரும் உள்ளடங்குவர்.
 
சுற்றுலாத்துறையை அதிகம் நம்பி வாழும் இலங்கையின் பொருளாதாரம் இங்கு இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது பின்தள்ளப்பட்டிருந்தது. தமிழர்கள் நீண்ட ஆண்டுகளாகத் தமது நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்திருந்தாலும் கூட அந்தப் போராட்டத்தின் முறைமைகள், நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகளில் இருந்து தொலைவில் இருந்தன.
 
புலிகளை ஒடுக்கும் போர் தமிழ் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியது. நீண்ட காலமாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த போரின் விளைவாக 40 ஆயிரம் வரையான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களின் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
 
பிரித்தானியாவின் "சனல்4' தொலைக்காட்சி சேவையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட, மேலாடைகள் இன்றி, காணப்படும் அந்தச் சிறுவன் பிரபாகரனின் மகன் என அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனின் உடலில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுத்துவாரங்கள் காணப்படுகின்றன. இந்தச் சிறுவன் படுத்திருப்பது போல் காணப்படும் அவனின் படுகொலைக்காட்சி அனைவரின் மனங்களிலும் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. பிரபாகரனின் மகன் என்பதைத் தவிர இந்தச் சிறுவன் செய்த குற்றம் என்ன?
 
கடந்த ஆண்டில், இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி சேவை தனது முதலாவது ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. கடந்த மாதம், இந்தச் சேவையானது மிகப் பயங்கரமான போர் மீறல் காட்சிகளை உள்ளடக்கிய தனது இரண்டாவது ஆவணத்தை வெளியிட்டது.
 
நிச்சயமாக இந்தப் போர்க்குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆயுதக் குழுவுக்கும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, அனைத் துலக சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு நாட்டின் இராணுவத்துக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதையே இலங்கையில் நடந்த போர் விதி மீறல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், முப்பதாண்டுகளாகத் தொடர்ந்த புலிகளின் போராட்டத்தை இலங்கை அரசு நிறைவுக்கு கொண்டு வந்தவுடன் அமைதியும் பாதுகாப்பும் நிலவுவதாகவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் எனது இலங்கை நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கு எத்தகைய விலை கொடுக்கப்பட்டுள்ளது? நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதில் கவனிக்கப்பட வேண்டிய எந்தவொரு சட்டங்களோ அல்லது நீதி நடைமுறைகளோ இல்லையா?
 
இதற்கான பதிலை அனைத்துலக சமூகமும், இலங்கைத் தலைமையும் கூறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கைத் தீவில் எதைச் செய்யவேண்டும் என்பதையும், இங்கு இடம்பெற்ற மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பதற்கான ஒன்றாகக் காணப்படுகின்றது.
 
அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தோடு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானமானது அந்நாட்டு நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சீனா அதிகம் முதலீடு செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தைத்தான் ஆதரித்தால் இலங்கை சீனாவின் ஆதரவைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதை இந்தியா தனது கவனத்திற் கொண்டு கடைசி நேரத்தில் சாதகமான முடிவை எடுத்தது. 
 
இலங்கை விவகாரத்தில் பூகோள அரசியலும், இராஜதந்திர நகர்வுகளும் செல்வாக்குச் செலுத்தின. தமிழ் மக்கள் அநீதியை எதிர்கொண்டு, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கைகளில் அவர்கள் அகப்பட்டுக் கொண்டபோதே தமது கைகளில் ஆயுதங்களை ஏந்தினர். அநீதி எங்கு நிலவுகின்றதோ அங்கு நீதிக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதே கருத்தாகும் என மாட்டின் லூதர் கிங் கூறியிருந்தார்.
 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்களும் அவர்களுக்காக போராடிய புலிகள் அமைப்பும் சந்தித்த மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகக் காணப்படுகின்றன.
 
இலங்கைத் தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவதானது வேதனைக்குரிய விடயமாகும். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து நீதியை நிலைநாட்ட வேண்டியது முதன்மையானதாகும். இந்த விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பதானது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும்.
 
சிரியாவில் பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதும் சிரிய அரசின் அதிகாரத்தின் கீழுள்ள மக்கள் எப்போதும் கொல்லப்படலாம் என்ற நிலையில் உள்ளனர். சிரியா விடயத்தில் சில வல்லரசு நாடுகள் தமது பூகோள அரசியல் நலன்களை முதன்மைப்படுத்தி அமைதி காப்பதால் சிரிய மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
 
ஆகவே கடந்த காலம் கடந்து விட்டதாயினும், கடந்த கால விடயம் தொடர்பில் சிறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். பாதுகாப்பு மற்றும் சமாதானம் என்ற பெயரில் மக்கள் படுகொலை செய்யப்படும் விடயத்தில் உலக நாடுகள் தொடர்ந்தும் தமது பூகோள அரசியல் சார் நலன்களை முதன்மைப்படுத்தி செயற்படும் நடைமுறையானது நீக்கப்பட வேண்டும்.
 
இவ்வாறு மக்கள் கொல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அமைதி காத்து, அந்த விவகாரத்தில் நாம் எமது கண்களை இறுக மூடும்போது, அப்பாவி மக்களின் இழப்புக்களில் நாம் பங்கேற்கிறோம் என்பதே கருத்தாகும். அமைதி காப்பதானது கொலைகளுக்கு வழிவகுக்கிறது.
 
 
(நன்றி: புதினப்பலகை)
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar