இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மிக மோசமான
பிரதமர் அவருடைய மகள் இந்திராகாந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர்
சாஸ்திரி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களைக் கூட மதிக்காமல், எமர்ஜென்ஸி
காலத்து இந்திரா காந்தியின் அட்டூழியங்களை எவராலும் மறக்க முடியாது!
பிரதமர்
பதவி பலமுறை தேடி வந்த போது மறுத்தவர் காமராஜர், எத்தனை பெரிய தியாகம்?
"எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்து விட்டு வந்து காமராஜரை சென்னையில்
சந்தித்தேன்.
அப்போது இந்திரா காந்தியை பிரதமர்
பதவிக்கு தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு, என்
எதிரிலேயே நான்கு முறை தலையில் கைகளால் அடித்துக் கொண்டார். அந்தக்
குற்றவுணர்வு அவருயிரை சீக்கிரமே பறித்துக் கொண்டது'' பேசியவர் "குல்தீப்
நய்யார்'. 70 ஆண்டு கால ஊடகப்பணித்துறை அனுபவம் கொண்ட 92 வயதான இன்னமும்
எழுதுமை நிரவல் மட்டம் குறையாத முதிர் பேனா. "மகாத்மா காந்தியின் ஆங்கிலேய
நட்புகள்'', "நேருவின் காதல் கடிதங்கள்'' , "லால்பகதூரின் மர்ம சாவு'',
இந்திராவின் எமர்ஜென்ஸி ரகசியங்கள்...'' சுதந்திரத்துக்கு முன், பின்
இந்தியாவைத்தன் "ஸ்கூப்''களால் பரபரக்க வைத்த பத்திரிகையாளனின் சமீபத்திய
பேட்டியொன்றில் சுட்டது கீழ்வருவது!
"2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில்
லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்திய அரசும், வட
இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?''
"இலங்கைப் போர் இந்த நூற்றாண்டில்
மாபெரும் சோகம், என்று இங்கிலாந்து ஊடகங்கள் சொல்லுகின்றன. ஆனால் ,
"பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?' என சனல்4 என்னிடம்
கேட்ட கேள்விக்கு இன்று வரை சரியான பதிலைக்கண்டுபிடிக்க முடியவில்லை.
"நம்முடைய மௌனமும், மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை,
கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளை கொன்றிருக்கின்றது' என்கின்ற
உறுத்தல், மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு பத்திரிகையாசிரியனையும்,
ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக் கொண்டேயிருக்கும்.
போரின் போது தமிழர்களிடையே எழுந்த
எழுச்சியை இந்தியா முழுக்க பரப்ப தமிழக அரசியல் வாதிகள் தவறிவிட்டதாகவே
நினைக்கின்றேன். "இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில்
சுயமரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகின்றது.
அதைத் தமிழர்கள் கேட்கும்போது
காலங்காலமாக காட்டுமிராண்டித் தனமான வன்முறைக்கு ஆளாகின்றார்கள்.
அதனால்தான் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உண்மையில் பல்வேறு தியாகங்களை செய்த
புலிகள் தோற்றுப் போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான்.
(குரல் கம்முகின்றது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!''
இன்றைய தனது 92 ஆவது வயதிலும், 14
மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாத கட்டுரையாளனான,
சாதாரணமான நாளொன்றில் 27 செய்தித்தாள்களின் வாசகனான, பகலில் இரண்டு மணி
நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே தூங்குகின்ற "குல்தீப்
நய்யார்' என்கின்ற பக்கத்து வீட்டுப் பழுத்த அவதானியின் பதிவுகள்,
அழிவுளுக்கான காரணத்தொகுதியில் தானும் ஓர் அங்கமாகி விட்டதற்காக ஆழ
வருந்துகின்ற இதயமொன்றின் கழிவிரக்கமாகவே தெரிகின்றன.
"தோற்றுப் போன நம்மவர்கள்'' பற்றிய
புறப்பார்வையின் இறுதிக் கட்டம் என்ற ஒன்று என்றைக்குமே இழந்து விடாதவாறு,
அந்த ""முன்னாள் புரட்சியாளர்கள்'' பற்றிய களத்தை பரபரப்பாகவே வைத்திருக்க
விரும்புகின்றது அடக்கு முறையின் இழிபுத்தி.
"தடுப்புக் காவலில் உள்ள 60 மூத்த
புலிப் போராளிகள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள்'' என்பது வெறுமனே
வாசித்த பின்னர், சாப்பாட்டுப் பொதிக்கு பாவிக்கின்ற தாளில் கட்டம்
கட்டப்பட்ட செய்தியல்ல! பாதிக்கப்பட்ட தேசிய இனமொன்றின் பகை மறப்புக்கு
எக்காலத்திலும் இடம்கொடுத்து விடாத தரித்திரப் பழிவாங்கல்!
ஐ.நா. மீதான நம்பிக்கை குறைந்து
வருவதாக தெரிவித்து வருந்துகின்ற இலங்கையின் வெளிவிவகாரத்துறை
அமைச்சகத்தின், மோசமான அழுகுணி அளாப்பல் விளையாட்டு யுக்திகளில் ஒன்றே இந்த
புதுவகைக்குரிய போர்க் குற்றச்சாட்டுக்கள்.
"அரசியல் தீர்வு', "மீள்குடியேற்றம்',
"புனர்வாழ்வு', "ஆணைக்குழுவின் பரிந்துரைகள்' என்று சிறுபான் மையினருக்கான
தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தந்திரோபாய நெருக்கடிகளைத் தவிர
வேறெதனையும் உருப்படியாக சாதித்து விடாதவை தான் இலங்கை அரசுக்கெதிரான
போர்க்குற்றச்சாட்டுக்கள்.
காயப்பட்ட இனமொன்றின் முழுமையான
பிரதிபலிப்பான, "அவலத்தை மீளளிக்கும்'' தண்டனையொன்றினையோ,
உயிரிழப்புக்களுக்கு பிரதியீடான உச்சபட்ச நீதியொன்றையோ என்றைக்கும் சர்வதேச
நாடுகள் தமிழனுக்கான தீர்வாக தந்துவிடப்போவதில்லை என்பது விரும்பியோ
விரும்பாமலோ பதினாறரைக் கோடி உலகத் தமிழனும், சுய இன மதிப்பீட்டின் மூலம்
ஆய்ந்துணர வேண்டிய உண்மை.
மறுதலையாக, "ஐயகோ! அநீதி இழைத்து
விட்டோமே! அவலச்சாவுகளுக்கு காரணமாகி விட்டோமே!'' யென்று புலம்பிச்
சித்தங்கலங்கி செத்துப்போகும் கவரிமான்களும் இல்லை, "ராஜபக்ஷே அன்ட்
கோ''வினர்.
வெளித்தெரிகின்ற இன்றைய தமிழினத்தின்
பாதிப்புகளுக்கு சற்றேனும் ஆறுதல் தருகின்ற நட்ட ஈடுகளை மீளளித்து,
தீர்வுக்குள்ளான தமிழர்களின் "வாழ்வாதாரம்' , "கல்வி', "சுகாதாரம்' ,
"குறைந்தபட்ச சுதந்திரம்', "கொஞ் சமாவது அரசியல் உரிமை' போன்றவற்றை
தயங்கித் தயங்கியாவது பெற்றுக் கொடுக்க முடியும் என்கின்ற வாசகங்களையே
தத்தமது தற்போதைய இலங்கையுடனான வெளிவிவகாரக் கொள்கையாக திருத்தி
எழுதியுள்ளன ஐ.நா. வின் சார்பில் தமிழினத்துக்காக பரிந்து பார்க்கின்ற
நாடுகள்!
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான
விவாதங்களின்போது பூதமாக கிளம்பக் கூடும் என எதிர்வு கூறப்பட்ட முன்னாள்
இராணுவத் தளபதியை வாக்குரிமை பிடுங்கப்பட்ட "டம்மிப்பீஸாக'' வெளியே விட்ட
ஆட்சியாளர்கள், எந்தப் பொல்லாத உலகமும் தமக்கெதிராக பாய்ந்து கடித்து விடப்
போவதில்லை, குரைப்பதோடு மட்டும் நின்று விடுவார்கள் என இன்னமும்
தீர்க்கமாக நம்புகின்றவர்களே! இங்கே பரிதாபம் தமிழனுடையது என்னவென்றால்,
அவர்களின் நம்பிக்கை, துளியும் பொய்த்து விடப் போவதில்லை என்பதால்!! சனல் 4
உள்ளிட்ட பல்லூ டகங்களிலும் போர்க் குற்றச்சாட்டுக்களின் களக் கருவிகளாக
காட்டப்பட்ட ஓர் இராணுவத்தினையேனும் இலங்கை அரசின் அனுமதி கிடைத்தாலும்கூட
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வந்து பேச வைத்துவிட முடியாது.
அப்படியே யாரோவொரு உண்மை விளம்பியை
புலத்தமிழர்களின் பெருமுயற்சியின் பயனாக உலக சபைகளில் சாட்சிப்படுத்துகின்ற
பொழுதும் கூட குறித்த நபர் "மழைக்குக் கூட'' இலங்கை இராணுவ முகாம்
களுக்குள் ஒதுங்கியவரல்ல என்று அழிச்சாட்டியம் செய்து பிரமாஸ்திரங் களையும்
முறித்துப் போடும் ஆதிக்க வல்லமை ""இலங்கை அரசு'' என்கின்ற கட்டமைப்புக்கு
உண்டு. ஆனால், போரில் பங்கெடுத்துள்ள இரண்டு தரப்புகளுமே, மனித உரிமை
மீறல்களை செய்துள்ளமைக்கான போதிய ஊகங்கள் உள்ளன'' என அறிக்கையிடப்பட்டுள்ள
ஐக்கியநாடு களின் மனித உரிமைகள் சபையின் ஒரேயொரு வசனத்திலுள்ள சந்தேகத்தின்
பயனை, ஆதாயமாகக் கொண்டு புலிப் போராளிகள் மீது சுமத்தப்படப் போகின்ற
போர்க் குற்றச்சாட்டுகள் என்ன வகை விளைவுகளை தரப் போகின்றன?
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
இணைந்து கொண்ட திகதி'', ""பயிற்சி பெற்ற காலம்'', ""பயிற்சி பெற்ற
இடங்கள்'', ""பங் கெடுத்துள்ள சண்டைக் களங்களும், காலங்களும்'',
""கட்டளையிட்ட, வழி நடத்திய தளபதிகளின் பெயர்கள்'', ""இறுதிப் போருக்கு
முன்னதாக பங்கெடுத்த தாக்குதல்கள்'', ""இறுதிப் போரில் பங்கெடுத்த விதம்'',
""பாவித்த ஆயுதங்களின் விவரங்கள்'' போன்ற உதாரண விடயங்கள் தொகுக்கப்பட்ட
ஒப்புதல் எழுத்துருவ வாக்குமூல ஆவணங்களுடன் நேரில் அழைக்கப்பட்டு
விசாரிக்கப்படும் அபாயத்துடன் தயார் செய்யப்படும் முன்னால் போராளிகளின்
மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள், காணொலிகளிலும், புகைப்படங்
களிலும் இடைக்கிடை முகம் காட்டு கின்ற இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக
வைக்கப்பட்ட உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலும் பார்க்க எத்தனை மடங்கு
பலமானவை? குடும்பத்தினர் மீதான உயிர் அச்சுறுத்தல்களுக் காவோ, பேசப்பட்ட
பேரங்களுக்கா கவோ 2009 இன் இறுதி மூன்று மாதங்களில் அகதிகளாக எத்தி
விளையாடப்பட்ட தமிழர்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய மைக்கான ஒப்புதல்
வாக்குமூலங் களை மனப் பாடம் செய்வதற்கான ஆயத்தங்களுக்குள் தள்ளப்பட்டுள்ள
இந்த இளைஞர்களின் மீதான புற அழுத்தங்கள் எவரால் கண்காணிக் கப்பட முடியும்?
இன்றைய பொழுதில் மீதித் தமிழர்கள்
மானசீகமாக நன்றி சொல்ல வேண்டுமாயின், அது போர்க் களத்திலேயே தம் உயிரை
இழந்த அல்லது இழக்கச் செய்யப்பட்ட போராளிகளுக்கு மட்டுமே! அவலம் நிறைந்த
சாவினையும் கூட, அவதா னம் நிறைந்த முன்னேற்பாட்டுடன் எதிர்கொண்டு
மௌனித்துப் போன மற ஆத்மாக்களுக்கு என்ன கைமாறு செய்துவிடப் போகின்றோம்.
குறைந்த பட்ச உரிமைகளுக்கான வரிப்பாக
உலக நாடுகளினால் கடி வாளமாகப் பயன்படுத்தப்படுகின்ற போர்க்
குற்றச்சாட்டுகளை முறியடிப் பதற்கான புதைமணற்குழிகளாக இலங்கை
ஆட்சியாளர்களினால் முன் நிறுத்தப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் இளைஞனின் வீட்டில்
மட்டுமல்லாது எல்லா தேசிய தமிழ் உள்ளங்களிலும் அவர்கள் என்றைக்கும்
கதாநாயகர் களே! ஏற்கனவே காட்டிக் கொடுத்து, ""எல்லாமும்'' பெற்றுப்
பெரியவர்க ளாகி விட்டவர்களின் தற்குறித்தனத் தின் முன்னால், "இயலாமை'யின்
இறுதிப் பிடிக்குள் நெருங்கிப் பலியாகும் உங்களின் நினைவுகளை நெஞ்சழுந்தச்
சுமப்போம் என்றும்! பொல்லாத் தமிழர்களே அவர்களின் புண்ணான மேனிகளை
தினவெடுத்த சொல்லம்பு களால் சுட்டுவிடாதீர் மீளவும்.
"வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கின்றாயே
சிறகுகள் வலிக்கவில்லையா?'
என விசாரித்தபடி கடந்து சென்ற
ஒரு பெரும் பறவையை
விநோதமாக பார்த்தபடி
காற்றில் மிதந்து கொண்டிருந்தது
பட்டம்''
காற்றின் வல்லமை யாவர்க்கும்,
சமாந்தரமாகின்ற போதிலும், ""நூலின்'' ஆதிக்கம் பட்டங்களை, பறவைக ளுக்கு
நிகராக எல்லை உடைக்க விடுவதில்லை என்கின்ற "கவிஞர் மகா' எண்ணங்களால்
எம்முடன் நெருங்கி நிற்கின்றார். அறுந்து தீரட்டும், அதிகாரத் தளைகள்.
|
Ingen kommentarer:
Legg inn en kommentar