மேலாதிக்கத்தின் முன் மண்டியிடும் மதக் கடமைகள்

 essay
ஆதியில் மனித இனம் தோன்றிய ஆரம்ப காலகட்டங்களில் மனிதன் மிருகங்களை வேட்டையாடியும் காட்டில் கிடைக்கும் காய்வகைகள், கிழங்குகளை உண்டும் உயிர் வாழ்ந்தான்.


எனினும் புயல், வெள்ளம், சிலவகை மிருகங்கள், ஜந்துக்கள் போன்றவற்றால் உயிரிழிப்புகளும் அழிவும் ஏற்படும் போது அவன் அவற்றைக் கண்டு அஞ்சினான். அவற்றை ஆற்றுப்படுத்தும் முகமாக ஆடியும் பாடியும் உயிர்ப்பலியிட்டும் அவற்றை வணங்க ஆரம்பித்தான். காலப்போக்கில் தன்னை விட மேம்பட்ட சக்திகளை எல்லாம்வல்ல இறைவனின் வடிவங்களாகப் பார்த்தான். 
 
மனித குலம் படிப்படியாக முன்னேற ஆரம்பித்தபோது அந்தவழிபாட்டு முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டு வெவ்வேறு மதங்களாகவும் மதக் கோட்பாடுகளாகவும் விரிவடைந்தன.
 
பல்வேறு மதங்களதும் மூல நூல்களில் பலியிடுதல் ஒரு முக்கிய சடங்காக வகுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்துமத மூல நூல்களாகிய வேதங்களில் குறிப்பாக அதர்வண வேதத்தில் யாகங்களில் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. 
 
இவ்வாறே கிறிஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டில் ஒரு செம்மறியாட்டைப் பலியிடுவது முக்கிய வழிபாடாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இஸ்லாமிய மதத்திலும் குர்ஃபான் முக்கிய "ஹஜ்' கடமைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிலாபம் முனீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த பலிபூசை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான மதமேலாதிக்கவாதிகளின் காடைத்தனத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.
 
இந்து மக்களின் சிறு தெய்வவழிபாட்டு முறைகளில் கரகம், காவடி எடுத்தல், தீ மிதித்தல், மிருகபலி, பொங்கல், வழுத்தேற்றல், மடை பரவல், சாமியாடல் என்பன பாரம்பரிய சடங்குகளாகும். இந்தச் சடங்குகள் சிலாபம் முனீஸ்வரர் ஆலயத்தில் இடம் பெறவிருந்தவையே ஒழிய எந்தவொரு புத்த விகாரையிலோ பொது இடத்திலோ மேற்கொள்ளப்படவில்லை.
 
ஆனால் புத்தபிக்குகள் உட்படச் சில காடையர்கள் இந்துமத ஆலய வளாகத்துக்குள் புகுந்து பாரம்பரிய சடங்கை நிறுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோயில் நிர்வாகமும் கடவுளிடம் பழிபோட்டு விட்டு அந்த வருடப் பொங்கலையே நிறுத்திவிட்டனர்.
 
இது ஒரு புறமிருக்க சர்வதேச இந்துமத ஒன்றியத்தின் பேரில் ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபு சர்மா, முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருந்த மிருகபலியைக் கண்டித்து அறிக்கை விட்டுத் தனது அடிவருடித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது ஓர் இந்து மதகுரு அந்த மதத்தின் ஒரு பகுதியான சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்து பௌத்தமத மேலாதிக்க வெறியர்களைத் திருப்திப்படுத்தினார்.
 
இதேபோன்ற ஒரு கபடத்தனம் இப்போது இஸ்லாமிய மதத்தின் மீதும் பாய்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தொழுகைக்கு விடுக்கப்படும் அழைப்பாக ஓதப்படும் சலவாத் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பக் கூடாது என பௌத்த மத வெறியர்கள் கோஷமெழுப்பினர். பல இடங்களில் பலவந்தமாக தடுக்கப்பட்டுமிருந்தது. 
 
இந்த நிலையில் முஸ்லிம் அமைப்புக்கள் ஓடிச் சென்று ஜனாதிபதியிடம் முறையிட்டனர். உடனடியாகவே ஜனாதிபதி தொழுகை நேரங்களை அறிவிக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் சலவாத்தை ஒலிபரப்பும் படி கட்டளையிட்டார். ஜனாதிபதி வாழைப்பழம் என முழங்கையைக் காட்ட முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுகொண்டு அடங்கிவிட்டனர்.
 
அதன் பின்பு கடந்த வருடம் ஹஜ் கடமையின்போது "குர்ஃபான்' என்ற மிருகபலி நிறுத்தப்பட வேண்டும் எனப் பௌத்த மேலாதிக்க வாதிகளால் குரல் எழுப்பப்பட்டது. எனினும் பாதுகாப்புச் செயலரின் தலையீட்டால் அது நிறைவேற முடியவில்லை.
 
இந்த முறை ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்ஃபான் பற்றிய பிரச்சினையை அகில இலங்கை ஜம் இய்துல் உலாமா ஷெரிமா கவுன்சில் தானே கையில் எடுத்துக் கொண்டது. அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை போயா தினத்தில் ஹஜ் கடமையான குர்ஃபான், கடமையைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது. 
 
சிங்கள மக்களின் மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்  மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் ஓர் இஸ்லாமிய மார்க்க பாரம்பரிய கடமையை நிறுத்தும்படி அது கேட்டுள்ளது.
 
இஸ்லாம் மதம் உலகிலேயே இரண்டாவது பெரிய மதம். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமைகளை ஒரே மாதிரியாகவே பின்பற்றுகின்றனர். அதில் எந்த ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
 
அப்படியானால் ஜம்இயதுல் உலாமா சபை போயா நாளன்று "குர்ஃபான் கடமையைத் தவிர்க்கும்படி எந்த அடிப்படையில் கேட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதிக்கும்  ஒரு முனைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.
 
மதம் என்பது மனித மனங்களைச் செழுமைப்படுத்தி ஆன்மீக ஈடேற்றத்துக்கு வழிகாட்டுவது. ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிப்பிட்ட ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் நெறிப்படும் ஒரு மேன்மையான சமூக வாழ்வைப் பேணும் தன்மையுடையது. அந்த வகையில் மதக் கோட்பாடுகள் என்பது அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களின் கலாசார அடையாளமாகவும் விளங்கி வருகின்றன. எனவே மதக் கோட்பாடுகளோ, பாரம்பரியங்களோ கொச்சைப் படுத்தப்படும்போது இது ஒரு உணர்வுபூர்வமான விடயமாக மாறி விடுகிறது. 
 
அவற்றைப் பாதுகாக்க அம்மதம் சார்ந்த மக்கள் கொதித்து எழும் நிலை உருவாகிறது. அண்மையில் "அப்பாவி முஸ்லிம்கள்' என்ற வீடியோ படத்தை டுவிட்டர் இணையத் தளத்தில் வெளியிட்டபோது, அது முகமது நபியைக் கீழ்மைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் காரணத்தால் பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டு அதன் தூதர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். இலங்கையிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 
 
பங்களாதேஷில் ஒரு பௌத்தரின் இணையத் தளத்தில் எரிந்த திருக்குரானைக் காட்டியமைக்காக முஸ்லிம்கள் கொதித்தெழுந்து பௌத்த விகாரைகளை உடைத்தனர். அதேபோன்று  பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கையில் பௌத்தர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்களாதேஷ் தூதரகம் தாக்கப்பட்டது.
 
அதாவது இந்து மதமாக இருந்தாலென்ன இஸ்லாமிய மதமாக இருந்தலென்ன பௌத்த மதமாக இருந்தாலென்ன அந்த மக்கள் கொதித்து எழுவது உண்மை. அது நியாயமானதும் கூட. இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி சகல மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மத வழிபாட்டுச் சுதந்திரம் உண்டு. அதை மீறுவது அரசியலமைப்புக்கு விரோதமானது.
 
ஆனால் இலங்கையின் பௌத்த மத மேலாதிக்க சக்திகள் இந்த அரசியல் சாசன விதிகளை அப்பட்டமாகவே மீறி வருகின்றன. இந்து முஸ்லிம் மதங்கள் தொடர்பான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் கீழ்த்தரமான முறையில் தலையிடுகின்றனர். அவற்றின் மேல்  காடைத்தனங்களையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
 
புத்த மதம் அஹிம்சையைப் போதிக்கிறது. அது மிருக பலியை ஒரு வழிபாட்டு முறையாக ஏற்கவில்லை. அப்படி ஏற்கும் படி கூற எவருக்குமே உரிமையில்லை. அதேவேளையில் மிருக பலியை ஒரு வழிபாட்டு முறையாக ஏற்றுக் கொண்ட மதங்களின் சடங்குகளில் தலையிட பௌத்த மதத்தினருக்கு எவ்வித உரிமையும் இல்லை. இப்படித் திணிக்க முயல்வது ஒரு மதத்தின் கோட்பாடுகளை  இன்னொரு மதத்தில்  திணிக்கும் ஆக்கிரமிப்பு முறையேயாகும்.  
 
இந்த நிலையில் தான் ஜனாதிபதியின் இந்துமத ஆலோசகர்  பாபு சர்மாவும் ஜம் இல் உலாமா சபையும் பௌத்த  மேலாதிக்க சக்திகளின்  நோக்கங்களுக்குத் துணை போகும் நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர்.
 
போயா தினத்தன்று குஃர்பானைத் தவிர்ப்பதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேணும்படி உலாமா சபை கேட்டுள்ளமையானது மத மேலாதிக்க வாதிகளைத் திருப்திப்படுத்த எமது பாரம்பரிய மதச் சடங்கைக் கைவிடும் படி கேட்பதாகும். முஸ்லிம்கள் இலங்கையில் மட்டும் இல்லை. உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் குர்ஃபான் கடமையை நிறைவேற்றுகின்றனர். அதை நிறுத்தும்படி கேட்பது முஸ்லிம் மக்களையே அவமதிப்பதாகும்.
 
உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மதச் சடங்கைத் தவிர்க்கும்படி கேட்க கொழும்பில் உள்ள ஒரு நிறுவனம் அதே மதத்தின் பேரால் எப்படிக் கேட்க முடியும்.
 
இந்தக் கோரிக்கை மத நல்லிணக்கத்தின் பேரால் முன் வைக்கப்பட்டது. பௌத்த மதம், இந்து, முஸ்லிம் மதங்கள் என்பன தமது தனித்துவங்களை  இழக்காமல் ஒருவர் உரிமைகளில் ஒருவர் கை வைக்காமல் இருக்கும் போது மட்டும் தான் மத நல்லிணக்கம் உருவாக முடியும்.  ஒரு மதத்தின் மேல் இன்னொரு மதம் மேலாதிக்கம் செலுத்தும் போதோ அல்லது ஒரு மதம் இன்னொரு மதத்திடம் சரணடையும்படி தூண்டும் போதோ நல்லிணக்கம் உருவாக முடியுமா? அப்படியான நிலைமையில்  கசப்புணர்வு வளரவும் காலப்போக்கில் மோதல்களாக வடிவெடுக்கவும் சாத்தியம் ஏற்படும்.
 
இலங்கையில் பௌத்த சிங்கள மத இன மேலாதிக்கம் அரசியல் அதிகாரத்துக்கு எந்த விதத்திலும் குறைவு படாத விதத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் இன மத தனித்துவங்களைச் சிதைக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றுக்குள் இன மத நல்லிணக்கம் என்ற பெயரில் அதை நியாயப்படுத்த முயன்று வருகின்றன. இப்படியான கபடனத்தனங்களை தமிழ், முஸ்லிம் மக்கள் எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை.   
 
 
 
சந்திரசேகரஆஷாத்
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar