உதயன் மீதான தாக்குதலும் வெள்ளிபார்க்கும் புலம்பெயர் தமிழர்களும் – இரா.துரைரத்தினம்


தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது அரசியலை முன்னெடுக்க முடியவில்லை, வடக்கில் பேச்சு சுதந்திரம் இல்லை, தமிழ் மக்கள் சுதந்திரமாகக் கூடித் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை, போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இலங்கை அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கவில்லை. இது பற்றி யாரும் பேச முடியாத அச்சுறுத்தலே காணப்படுகிறது என யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபினிடம் கூறிய மறுநாள் காலையில் அச்செய்திகளை தாங்கி வந்த உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டிருக்கிறது. விநியோக ஊழியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகை விநியோகம் செய்யும் ஊழியர் வியாழக்கிழமை காலை தாக்கப்பட்டதுடன் அவரது உந்துருளியுடன் சேர்த்து விநியோகத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
விநியோக உந்துருளியை பின்தொடர்ந்து இரண்டு உந்துருளிகளில் வந்த நால்வரே இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று உதயன் பத்திரிகை நிர்வாகம் கூறுகின்றது. அதிகாலை 5.30 மணியளவில் நெல்லியடி சந்திக்கும் மாலி சந்திக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. தாக்கப்பட்டு படுகாயமடைந்த விநியோக ஊழியர் ம.பிரதீபன் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதலில் பிரதீபனின் கை முறிந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இராணுவப் புலனாய்வாளர்களும் ஒட்டுக் குழுவான ஈபிடிபியினரும் பின்னணியில் இருக்கின்றனர் என்று தான் நம்புவதாக உதயன் நிர்வாகியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நெல்லியடியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட அதேநேரத்தில், வல்வெட்டித்துறைக்கான பத்திரிகை விநியோகத்தை மேற்கொள்ளச் சென்ற மற்றொரு விநியோக நபர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒருவாறு அவர் அதிலிருந்து தப்பி விட்டார் என்றும் உதயன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதயன் பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதற்தடவையல்ல. என்னிடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட 15ஆவது தாக்குதல்; இதுவாகும். பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் உட்பட உதயன் நிறுவனத்தை சேர்ந்த 7பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.
1981ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை அலுவலகம் இராணுவத்தினரால் தாக்கி எரிக்கப்பட்டதில் இருந்து யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறையும் சுதந்திரமான கருத்தாடலுக்கான தடையும் ஆரம்பமாகிய போதிலும் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி யாழ். சுண்டிக்குழியில் வைத்து ஊடகவியலாளர் நிமலராஜன் ஈ.பி.டி.பியினராலும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் உச்சக்கட்டத்திற்கு வந்தது,
ஈழத்தமிழ் மக்களின் மையப்புள்ளியாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையே அடிக்கடி இலக்கு வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் அவலங்களையும் அடக்குமுறைகளையும் வெளிக்கொண்டுவர முற்படும் உதயன் மீது அரச பயங்கரவாதமும், அரசுடன் இணைந்துள்ள ஆயுதக்குழுக்களும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் ஒரு கட்டமாகவே கடந்த வியாழக்கிழமை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட 15க்கும் மேற்பட்ட தாக்குதலாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில் கடந்த வியாழக்கிழமை சம்பவமும் குற்றவாளிகள் கைது செய்யப்படாது மூடிமறைக்கப்பட்டு விடலாம்.
1991ஆம் ஆண்டு யாழ். நாவலர் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை காரியாலயத்தின் மீது சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதுடன் இருவர் கைகளை இழந்து அங்கவீனமடைந்தனர். உதயன் காரியாலயத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.
2002ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டி உதயன் பத்திரிகை காரியாலயம் அவசரகால சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் சண்டேலீடர் பத்திரிகையும் அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அப்பத்திரிகை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தடையை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் வெளிவர ஆரம்பித்த உதயன் பத்திரிகை மீது ஈ.பி.டி.பியினரும், சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் காலத்திற்கு காலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
2003ஆம் ஆண்டு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் ஈ.பி.டி.பியினரின் தாக்குதலுக்கு உள்ளானார். சம்பவதினம் அலுவலகத்திலிருந்து மோட்டார் சைக்கிளிலில் பின்னால் அமர்ந்து சென்ற கானமயில்நாதன் மீது பிக்கப் வாகனத்தில் வந்த ஈ.பி.டி.பியினர் மோதி தாக்குதலை நடத்தியிருந்தனர். இதனால் அவரது கால் எலும்பு முறிந்து நீண்டகாலம் சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு சரியாக இரு மாதங்களுக்கு முதல் கானமயில்நாதன் மீது தாக்குதல் நடந்த நாவலர் வீதியும் பலாலி வீதியும் சந்திக்கும் இலுப்பையடி சந்தியில் வைத்தே உதயன் முகாமையாளர் நந்தகுமார் இராணுவ வாகனத்தால் மோதி கொல்லப்பட்டார்.
2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வெள்ளவத்தையில் உள்ள உதயன் காரியாலயம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி உதயன் பத்திரிகை காரியாலயத்திற்குள் புகுந்து மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் இரவு 7.45மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் உதயன் காரியாலயத்திற்குள் புகுந்த 5 நபர்கள் இந்த தாக்குதல்களை நடத்தினர்.
முதலில் ஆசிரியர் பீடத்திற்குள் புகுந்த இந்நபவர்கள் செய்தி ஆசிரியர் குகநாதன், எங்கே என தேடிய போது அவர்கள் அங்கு இல்லாத நிலையில் சந்தைப்படுத்தல் பகுதிக்குள் புகுந்து உதயன் பத்திரிகையின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் 37வயதுடைய பஸ்டியன் ஜோர்ஜ் சகாயதாஸ் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் ஊழியர் 25வயதுடைய இராஜநாதன் ரஞ்சித் ஆகியோரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் எஸ்.உதயகுமார், மற்றும் என். தயாகரன் ஆகிய ஊழியர்களும் காயமடைந்திருந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் ஈ.பி.டி.பி இயக்கத்தை சேர்ந்தவர் என அங்கிருந்த ஊழியர்கள் மிகத்தெளிவாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். உதயன் அலுவலகத்தில் சுமார் அரைமணி நேரமாக நின்று தாக்குதல் நடத்தி 40 துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு சென்றனர். ஆனால் உதயன் அலுவலகத்திற்கு அருகில் இராணுவ காப்பரண் இருக்கின்ற போதிலும் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டு அவர்கள் அங்கு வரவே இல்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவத்தினர் பயன்படுத்தும் ரி 56ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் வைத்திருந்தனர் என ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இத்தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் இராணுவத்தினரும் இணைந்தே நடத்தியிருந்தனர் என்று எல்லோருக்கும் மிக தெளிவாக தெரிந்திருந்தது. ஆனால் இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூட இன்றுவரை கைது செய்யப்படவில்லை. இக்கொலை தொடர்பாக பொலிஸார் ஆக்கபூர்வமான எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவே இல்லை.
அத்தாக்குதல் நடத்தப்பட்ட 2006ஆம் ஆண்டிலிருந்து உதயன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், மற்றும் செய்தி ஆசிரியர் குகநாதன் ஆகியோர் 2009ஆம் ஆண்டு போர் முடியும் வரை உதயன் அலுவலகத்தை விட்டு வெளியே வராது அலுவலக வளாகத்திற்குள்ளேயே காலம் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
உதயன் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி இரு ஊழியர் கொல்லப்பட்டபின் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உதயன் பத்திரிகையின் விநியோக வாகன சாரதி 44வயதுடைய சதாசிவம் பாஸ்கரன் என்பவர் புத்தூர் சந்தி அச்சுவேலியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலை நகரில் வைத்து உதயன் மற்றும் சுடர்ஒளி பத்திரிகையாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி உதயன் செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மன் நல்லூரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார், மூன்று மாதம் கழித்து யாழ். பல்கலைக்கழக ஊடக பயிற்சி மைய பயிலுனரும் பகுதி நேர ஊடகவியலாளருமான சகாதேவன் டிலக்சன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி இரவு 11.10மணியளவில் உதயன் பத்திரிகை காரியாலயம் மீது கிரினட் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. வன்னியில் இராணுவ தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி தகவல்களை வெளியிடக் கூடாது என அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில் இக்கிரனட் தாக்குதல் நடத்தப்பட்டது.
2009ஆம் ஆண்டு யூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், தினக்குரல், வலம்புரி, பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டது. விநியோக ஊழியர் அனோஜன் தாக்கப்பட்டு காயமடைந்து சிகிச்சை பெற்றார்.
2009ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகிய பத்திரிகை காரியாலயங்களுக்கு ஆயுதங்களுடன் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினரும், ஈ.பி.டி.பினரும் எச்சரிக்கை கடிதங்களை வழங்கி விட்டு சென்றனர். மாவீரர்நாள் பற்றிய எந்த செய்திகளையும் பிரசுரிக்க கூடாது என்றும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றி எந்த செய்திகளையும் பிரசுரிக்க கூடாது என்றும் எச்சரித்திருந்தனர்.
இந்த அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு யூலை 29ஆம் திகதி உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டார்.   யூலை 23ஆம் திகதி யாழ். குடாநாட்டில் நடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் அவர்களுடன் இணைந்த ஈ.பி.டி.பியினரும் தோல்வியடைந்திருந்தனர். இதனை சகித்து கொள்ள முடியாத ஈ.பி.டி.பியினரே இத்தாக்குதலை நடத்தினர்.
சம்பவதினம் 2மணியளவில் உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு தொலைபேசி எடுத்த நபர் எத்தனை மணிவரை அலுவலகத்தில் நிற்பீர்கள், உங்களை சந்திக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 7மணிவரை அலுவலகத்தில் இருப்பேன், அதன் பின் வீட்டு சென்றுவிடுவேன் என குகநாதன் கூறியிருந்தார். அதன் படி இரவு 7மணியளவில் நல்லூர் வீதி வழியாக மனோகரா சந்தியில் வீட்டிக்கு நடந்து செல்லும் போது பின்னால் வந்தவர்கள் குகநாதன் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். தலையில் மிக பலமான காயமடைந்த குகநாதன் சிகிச்சையின் பின் இப்போது நாட்டில் வாழமுடியாத அச்சுறுத்தலால் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்திருக்கிறார்.
குகநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 200மீற்றர் தூரத்தில் தான் இராணுவ காப்பரண் உள்ளது. இவ்வாறான உயர்பாதுகாப்பு பகுதியில் வைத்துதான் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவம் பிரவேசித்து தேடுதல் நடத்திய போது அங்கு சென்ற உதயன் பத்திரிகை ஆசிரியர் பிறேம் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தார்.
உதயன் பத்திரிகை மீதும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதல் வெறும் தனிநபர் பழிவாங்கல்கள் அல்ல. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடு இதுவாகும்.  வடக்கில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறித்து அவர்களைத் தொடர்ந்து அரசியல் அநாதைகளாக தக்க வைக்கவே இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதலை ஊடகங்களின் மீது பேரினவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.
உதயன் பத்திரிகை நெருக்கடி மிகுந்த கடந்த 30வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. யாழ். குடாநாடு வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காலத்திலும் போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்திலும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு தகவல்களை சொன்ன பத்திரிகைகளில் உதயன் முக்கிய இடத்தை பெறுகிறது.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இராணுவ அடக்கு முறைகளையும் காணிஅபகரிப்பு உட்பட இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் காலத்திற்கு காலம் வெளிப்படுத்தி வந்திருக்கிறது.  வடபகுதி மக்களை ஆயுதமுனையில் அடக்கி வைத்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதயன் போன்ற ஜனநாயக குரல்கள் சவால்நிறைந்ததாகவே உள்ளது.
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மௌனமாக்கி விட்டு காட்டாட்சி ஒன்றை உருவாக்குவதற்கு முற்பட்டிப்பவர்களாலேயே கடந்த வியாழக்கிழமை உதயன் பத்திரிகை தீயிடப்பட்டதுடன் அதன் விநியோக ஊழியரும் தாக்கப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் ஜனநாயக குரல் வளையை நெரித்து விடலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
இது ஒரு உதயன் நிறுவனத்தின் மீதோ ஒரு ஊழியர் மீதோ நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனநாயக ரீதியான கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனநாயகத்திற்காகவும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் அனைத்து தரப்பும் இந்த ஜனநாயக விரோத சக்திகளை இனங்கண்டு அவர்களை முறியடிக்க முன்வர வேண்டும்.
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar