ஈழத்தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்கான மிதவாதப் போராட்டம் அரச வன்முறையால் அடக்கப்பட்டது. இந்த முன்னெடுப்பில் அரச அடக்குமுறை வெற்றிகண்டதே தவிர போராட்டம் வெற்றி பெறவில்லை.
வெற்றிபெறாததற்குரிய அடிப்படையான காரணம் ஈழத்தமிழரின் மிதவாதப் போராட்டத்தினால் ஒரு பேரச்சக்தியை உருவாக்கக்கூடிய வாய்ப்பு அப்போராட்டத்திற்கு இருக்கவில்லை. அப்போராட்ட முன்னெடுப்பினால் அரசை குறுக்கீடு செய்யக்கூடிய இயலுமை காணப்படவில்லை. ஏனெனில் வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரம் அரசை குறுக்கீடு செய்யக்கூடிய சக்தியை கொண்டிருக்கவில்லை. தவிரவும் அனைத்துலக அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகளை அது கொண்டிருக்கவுமில்லை.
ஒரு புறம் உள்நாட்டில் அரசை அடிபணிய வைப்பதற்குரிய அரசியல் பொருளாதாரத்தை ஈழத்தமிழ்ச்சமுகம் கொண்டிருக்காததினால் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்படும் போராட்டத்திற்கு அரசு அஞ்ச வேண்டியதில்லை.
மறுபுறம் அனைத்துலக அரசியலில் இப்போராட்டத்தை தத்தெடுப்பதற்கு எந்தவொரு நாட்டிற்கும் இப்போராட்டத்தினால் பெறக்கூடிய நலன் எதுவும் இருக்கவில்லை.
இந்த அடிப்படைக் காரணத்தினால் இப்போராட்டம் மிகவும் பலவீனமானதாகவும் ஒருவிதத்தில் அர்த்தம் இழந்ததாகவும் இருந்தது. இதனால் அரச ஒடுக்குமுறை வெற்றிகண்டதே தவிர போராட்டமல்ல. ஆனால் இது மறுவளத்தில் வன்முறையே போராட்டம் தெரிவு செய்வதற்குரிய வரலாற்றின் நியாய காரணி ஆயிற்று.
அரச வன்முறைக்கு எதிராக அங்காங்கே எதிர்ப்பரசியலாக வன்முறை வெடித்தது. ஈழத்தமிழ் இளைஞர்களே இதில் ஈடுபட்டார்கள். இவை மெல்ல வன்முறைக் குழுக்களாகின. இந்த வன்முறைகளை அப்போது தமிழ் மக்களின் தலைமைத்துவமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஊக்குவித்தது, பரப்புரைப்படுத்தியது. அதற்கு மகிமையும் தேடிக்கொடுத்தது. அதன் மூலம் நியாய அர்த்தத்தில் இந்த வன்முறைகளின் தலைமைத்துவமாக தமிழர் விடுதலைக் கூட்டணியே திகழ்ந்தது.
கூட்டணி இந்த வன்முறைகளை அரசிற்கு எதிராக மட்டுமன்றி தனது ஏகதமிழ்த் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டது.
விடுதலைக் கூட்டணியின் அரசியல் பரப்புரை மேடைகளில் துரோகத்தனத்திற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு துரோகிகள் களையப்படவேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலெழுப்பப்பட்டன. துரோகிகளாக சுட்டிக்காட்டப்பட்டவர்கள் விடுதலைக்கூட்டணியின் போட்டி அரசியலாளர்களே. இங்கு அவர்கள் துரோகத்தனத்தில் ஈடுபடவில்லையா என்பது வாதம் அல்ல. கூட்டணி எழுப்பிய முழக்கங்களும், சொல்தூண்டல்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ஏனேனில் கூட்டணி துரோகத்தனத்திற்கு அவர்களைவிட சளைத்ததாக பின்னர் இருக்கவில்லை.
போராட்டத்தில் இறங்கிய ஆயுதக்குழுக்கள் துரோகத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் போட்டியிட்டு கொண்டு செயற்பட்டன. ஏனெனில் கூட்டணியில் இதற்கு மகிமைத்துவம் தேடித்தரப்பட்டது. இதனால் இச்செயலைப் புரியும் ஆயுதக்குழுக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய முடிந்தது. இக்காரணம், ஆயுதக்குழுக்கள் தமக்கிடையே போட்டியிட்டு கூட்டணியின் போட்டி அரசியலாளர்களை இணையவோ முடக்கவோ தம் சக்தியை செலவழிக்க வைத்தது.
இந்த அகஅரசியற் பின்னணியில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் தலைமைத்துவமாக உருவெடுத்தது. 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி மாபெரும் வெற்றியை கண்டதுமட்டுமல்லாமல் இலங்கை அரசியலில் எதிர்க்கட்சியும் ஆகமுடிந்தது.
ஈழத்தமிழ் மக்களுக்கு தமது தேசியக்குரலை வெளிப்படுத்த ஏக தலைமைத்துவம் உருவாவது நன்மை தான் ஆனால் கூட்டணி அதை எதற்கு பயன்படுத்திக் கொண்டது என்பது தான் கேள்வி.
இந்த அரசுக்கு எதிரான வன்முறைகளை ஒரு பயன்படுபொருளாக உருவாக்கி அதனை ஒரு பேரச்சக்தியாக மாற்றிக் கொள்வதே அப்போதைய வன்முறை அரசியலின் வகிபாகம்.
அரசை அச்சுறுத்திய தமிழ் மக்களின் இந்த வன்முறைத் தெரிவை ஒரு அரசியல் சரக்காக்கி அரசுடன் பேரத்தில் ஈடுபட்டு போராட்டத்தை பேரத்திற்கு தகுதியான உரிமைகளைப் பெற்றுக் கொண்டு முன்னகர்த்துவதே அதற்கு தலைமைத்துவம் கொடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடமை.
ஆனால் தலைமைத்துவம் கொடுத்த விடுதலைக்கூட்டணி வன்முறைகளை ஒரு பேரப்புள்ளியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக ஈழத்தமிழர்களின் மாற்று அரசியலை அழிக்கப் பயன்படுத்திக் கொண்டது.
தமழீழத்திற்கு ஆணைபெற்ற விடுதலைக்கூட்டணி ஜெயவர்த்தன அரசாங்கத்தோடு இரகசிய சமரசங்கண்டு மாவட்ட அபிவிருத்தி சபையை தீர்வாக ஒப்புக் கொண்டது. மாற்றுத் தமிழ்த் தலைமைத்துவம் முடக்கப்பட்ட நிலையில் வன்முறையால் அடையப்பெற்ற பேரத்தை கூட்டணி சுயஇலாபத்திற்காக அடகு வைத்தது.
சிங்கள அரசாங்கம், தமிழ் மக்களின் சட்ட ரீதியான ஏக தலைமைத்துவம் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக்கொண்டது என்பதை நியாயப்படுத்துவதில் வெற்றிகண்டது. இவ்அபிவிருத்தி சபை தமிழ்த்தேசியத்தை கூறுபடுத்தி உடைப்பதற்கு வழிகோலுமே தவிர பலப்படுத்த அல்ல.
ஆயுதப் போராட்டத்தின் முதல் எத்தனிப்பும் கொடுக்கப்பட்ட விலையும் கூட்டணியின் கருவியாகி சுயஅழிவில் போய் முடிந்தது.
[தொடரும்..]
*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்,(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar