ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 03


வஞ்சக அரசியல் கதவுகளை மூடுவதாக எண்ணி அரசியல் வெற்றிடத்திற்கு கதவு திறந்தார்கள் – குணா.கவியழகன்*
வன்முறை அரசியலுக்கு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உருவாகிற்று. அரச வன்முறையால் ஆத்திரம் கொண்ட மக்களுக்கு இது வடிகாலாகியதும் அப்போதைய ஈழத்தமிழரின் தலைமைத்துவம் இதற்குரிய மகிமைமிகு பரப்புரை வழங்கியதும் இதற்குரிய காரணங்களாகின.

இதனால் வன்முறைக்குழுக்கள் மெல்ல வன்முறை இயக்கங்களாக அமைப்பு வடிவம் பெறக்கூடிய சூழல் உருவாகிற்று. அமைப்பு வடிவம் பெறும் இயக்கங்கள் தன்னியல்பில் தமக்கென அரசியலையும் உருவாக்கத் தொடங்கின.

இயக்கங்களின் இம்முயற்சியால் இதுவரை வன்முறைக் குழுக்களுக்கு அரசியல் அர்த்தத்தில் மறைமுகத் தலைமைத்துவம் வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் சிதையைத் தொடங்கியது. இது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் உருவாகிய வன்முறை இயக்கங்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தன. ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தலைமைத்துவம் கொடுப்பது யார் எனும் போட்டி இங்கு தலைதூக்கிற்று.

ஏற்கனவே தேசவிடுதலைப் பயணத்திற்கு முதலில் துரோகத் தனத்தை களைய வேண்டும் என கூட்டணி உருவாக்கிய பரப்புரைக்கு இப்போது கூட்டணியே பலியாக வேண்டியாயிற்று. சுயநல அரசியலை கொண்டிருந்த கூட்டணி மீது எலவே உருவாக்கப்பட்ட கருத்துப் பதிவினால் வன்முறை அமைப்புக்கள் தம் போட்டித் தலைமைத்துவமாக இருந்த கூட்டணியைத் தகர்க்க வாய்ப்பளித்தது.

ஆயுத அமைப்புக்கள் மிதவாத அரசியல் தலைமையையும் நாடாளுமன்ற அரசியலையும் புறக்கணித்தார்கள், தடைசெய்ய முற்பட்டார்கள். தலைமறைவு இயக்கங்களாக இருந்த இவை நாடாளுமன்ற அரசியலில் பங்களிக்க முடியாது. எனவே தலைமறைவு அமைப்புக்கள் தலைமைத்துவம் வழங்க வேண்டுமெனின் நாடாளுமன்ற அரசியல் தலைமைத்துவத்தை ஓரங்கட்ட வேண்டியது தவிர்க்க இயலாதது.

இதன் விளைவு, தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் நாடாளுமன்ற அரசியலை இழந்தது, அல்லது பலவீனப்பட்டது. இதனால் ஆயுதப்போராட்டத்திற்கு பாதுகாப்பாகவும், அரசை பலவீனப்படுத்தவும் கூடிய நாடாளுமன்ற அரசியற் பலத்தை ஆயுதப்போராட்டம் இழந்தது. மட்டுமல்ல ஆயுதப்போராட்டத்தை ஒரு பயன்படுபொருளாக்கி செய்ய வேண்டிய அரசியலைச் செய்வதற்கு ஒரு முன்னணி அமைப்பு அற்றுப்போனது.

இதன் விளைவால் வன்முறைகளில் கண்டடையப் பெறும் வெற்றிக்கு எந்தப் பெறுமானத்தையும் அரசியலில் தேடிக்கொள்ள இயலவில்லை. அரசியல் அர்த்தமற்ற வன்முறைகளாகவே அவை பெரும்பாலும் அமைந்தது எனலாம்.

ஆயுதப் போராட்டத்தினால் சிங்கள அரசிற்கு எந்தப் பாதிப்பையும் வழங்காத பாதுகாப்பை ஆயுதப்போராட்டத்தின் இந்த அரசியற் கொள்கையே வழங்கியது. தன்னைப் பலவீனப்படுத்தியும் எதிரியை பாதுகாத்தும் கொண்டது இக் கொள்கை. இந்த அபத்தக் கொள்கை ஈழத்தமிழர் அறிவின், ஈழத்தமிழர் ஆளுமையின் வறுமையைக் காட்டியதே தவிர வல்லமையை அல்ல.

இந்த இடத்தில் வன்முறை அரசியல் தமிழ் மக்களிற்கு இக்காலத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தைப் பெற்றுக் கொடுத்ததே தவிர வெற்றியை அல்ல.

தொடரும்..

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar