ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 04


அரசியல் தகமையை பெற வேண்டிய போராட்டம் அரசியல் அநாதையாகியது – குணா.கவியழகன்

இரண்டாம் உலகமகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து உருவாகிய உலக அரசியல் பனிப்போர் ஒழுங்கிற்கு உட்பட்டிருந்தது. பனிப்போர் உலக ஒழுங்கு தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு பொற்காலமாக இருந்தது.

சோவியத்யூனியனதும், அமெரிக்காவும் தலைமைத்துவத்தைக் கொடுத்த இரு அணிகளின் போட்டி அரசியலே அனைத்துலக அரசியலாக இருந்தது. இக்காலம் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வளரவும், கனியவும் இனிய காலமாக இருந்தது.

ஆசிய ஆபிரிக்க முன்னாள் கொலணித்துவ நாடுகளில் மேற்குலக நலனிற்கேற்ப வரையப்பட்ட நாட்டின் எல்லைகளில் பல தேசிய இனங்கள் நசுக்கப்பட்டிருந்தன. இவை தம் விடுதலைக்குப் போராட இவ்விரு சக்திமிக்க முகாம்களில் ஒன்றின் ஆதரவையும், ஊட்டத்தையும் பெற்றுக் கொண்டன.

உலக அளவில் முனைப்புப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தான் ஈழ விடுதலைப் போராட்டமும் உருவாகிற்று. அமைப்பு வடிவம் பெறும் வன்முறைக் குழுக்கள் பெரும்பாலும் சோசலிச சித்தாந்தத்தை தமது கொள்கை அரசியலாக வெளிப்படுத்தின. சில எதிர்மறையாக இருந்தன. ஈழத்தில் சோசலிச சித்தாந்தத்தையே அமைப்புக்கள் பற்றிக் கொண்டன.

விடுதலைப் புலிகள் இயக்கமும் தமது முதற் கொள்கை அறிவிப்பு வெளியீடாக ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற கைநூலை வெளியிட்டது. இயக்க சத்தியப் பிரமாணத்திலும் பொதுவுடமையை வளர்த்துக் கொண்டது.

ஈழத்தில் சோசலிய கொள்கையை வெளியிட்ட எல்லா இயக்கங்களும் அடிப்படையில் சோசலிய வாதிகளாக இருக்கவில்லை. எல்லாமே தேசியவாதம் கொண்டவையாகவே இருந்தன.

மேலும், தமிழீழத்தில் பாட்டாளி வர்க்கமோ, முதலாளி வர்க்கமோ அதற்குரிய சமூகப்பொருளாதார அமைப்போ இருந்திருக்கவில்லை. வர்க்கப்பிரச்சினை இங்கு கிடையாது. சமூக ஒடுக்குமுறையாக சாதியப்பிரச்சினை இருந்ததே தவிர வர்க்கப்பிரச்சினை இருந்திருக்கவுமில்லை.

ஆயின் எதற்காக இயக்கங்கள் சோசலிச சித்தாந்த்தத்தை வரித்துக் கொண்டன. தேசிய விடுதலையை அடைவதற்காக பனிப்போரில் ஈடுபட்ட சோவியத் முகாமின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அன்றி வேறு அரசியல் அர்த்த பரிமாணத்தை இதில் தேட முடியாது.

இலங்கை என்பது இந்திய உபகண்ட மண்டலத்திற்கு உட்பட்டது. இந்தியா அப்போது தன்னை அணிசேரா நாடென அறிவித்துக் கொண்டாலும் நடைமுறைகளில் அது சோவியத்தின் பங்காளித்துவ அரசியலையே அனைத்துலக அரசியலில் கொண்டிருந்தது.

ஆயினும் கூட இந்தியா உள்நாட்டிலோ தன் மண்டலத்திற்குட்பட்ட அண்டை நாடுகளிலோ தன் கம்யூனீஸ்டுக்கள் தலையெடுப்பதை விருப்பவில்லை. சோவியத்யூனியனிற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இணைபிரியா நட்புச்சக்தியாக இந்தியா இருந்தது.

இந்தியாவின் இப்பிராந்திய நலன்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல சோவியத்யூனியனுக்கு முக்கியமானவை, புறக்கணிக்க முடியாதவை இந்தியாவைத் தவிர்த்து ஒரு அரசியலை இப்பிராந்தியத்தில் சோவியத் யூனியனால் சிந்திக்கக்கூட முடியாது.

இந்தியா இலங்கை இரு நாடுகளாகப் பிளவுபடுவது தன் நலனிற்கு அச்சுறுத்தலானது என வகுத்துக் கொண்டது. அதிலும் ஈழத்தமிழர்கள் தனிநாட்டை அடைவது அயலில் உள்ள தமிழ் நாட்டிலும் தென்மாநிலங்கள் பிறவற்றிலும் தனிநாட்டுக் கொள்கை ஊக்கம் பெறும் என இந்தியா அஞ்சியது. ஏற்கனவே திராவிட நாட்டுக் கொள்கையால் இந்திய ஆளும் வர்க்கம் கதிகலங்கிய அனுபவம் இந்தியாவை இன்னும் அச்சப்படுத்தியது.

தவிரவும் இரு நாடுகளாக பிளவுபட்டால் பகையுணர்வு கொண்ட இரண்டும் ஒருமித்து இந்தியாவுடன் எதிர்காலத்தில் நட்பு பாராட்டவும் மாட்டாது. எனவே ஒன்று எதிர் நிலைக்குப் போவது தவிர்க்க இயலாது. ஆக, ஈழத்தில் தனிநாடு என்று ஒன்றை இந்தியாவால் சகிக்க முடியாது.

இந்த விளக்கத்தை அப்போதே விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளிடம் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அப்போதைய அரசியல் அவதானிகள் இக்கருத்தினை வலுப்படுத்தினர். இக்கருத்துக்கள் நூலாகவும் வெளிவந்தன.

இந்தியா தனிநாட்டு கொள்கைக்கு எதிரானது என்ற மனப்பதிவு அப்போதே விடுதலைப்புலிகளின் தலைமைக்கு இவர்களால் உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த அவதானிகள் இந்தியாவிற்கு அப்பால் ஈழப்போராட்டத்திற்கான அரசியல் இல்லை என்பதைக் கண்டு கொள்ளத் தவறினர். இப்பிராந்தியத்தில் இந்திய நலனை அனுசரிப்பதே சோவியத்யூனியனின் நலன். ஆயின், சோவியத் கொள்ளையை வகுத்துக் கொண்ட ஆயுதப் போராட்டம் பனிப்போர் ஒழுங்கில் எங்கிருந்து தமக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வது?

அடிப்படையில் சோசலியவாதிகள் அல்லாதவர்கள் அக்கொள்கையை எந்தக் காரணத்திற்காக வகுத்துக் கொண்டனரோ அது ஒரு அபத்த அரசியல் ஞானம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

அக்கொள்கை வகுப்பால் போராட்டம் அநாதரவாகும் சூழல் இருந்ததே தவிர ஆதரவு பெறும் சூழல் இருந்திருக்கவில்லை. ஆயினும் கூட அனைத்துலக அரசியலில் அப்போதைய சிங்கள அரசாங்கத்தின் அரசியல் போக்கினால் ஆயுதப்போராட்டத்திற்கு செழுமை தரும் சூழல் உருவாகிற்று

1977ம் ஆண்டு ஜெயவர்த்தனா அரசாங்கம் பதவிக்கு வந்தது. அது இலங்கையின் வெளியிறவுக் கொள்கையை முழுமையான மேற்கு சார்பு அரசியலாக மாற்றியது. பிராந்திய நட்புக்கு அதில் இடமிருக்கவில்லை. மேற்குலக செல்வாக்குட்பட்ட நாடாக இலங்கை உருமாறி வந்தது.

இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே இது சோவியத்யூனியனுக்கும் அச்சுறுத்தலானதே ஜெயவர்த்தனாவின் இவ்வரசியல் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழுந்தது. சோவியத்யூனியன் இதை ஊக்குவித்தது.

இந்தியா இதற்காக எடுத்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போக ஆயுதப்போராட்டத்தை ஒரு அழுத்தப்புள்ளியாக இலங்கை மீது பிரயோகிக்க தீர்மானித்தது. இந்தியாவின் இவ்வரசியல் தெரிவு ஆயுதப்போராட்டம் அனைத்துலக அரசியலில் பிராந்திய முக்கியத்துவம் பெறத்தக்க காலத்தை கனிய வைத்தது.

இதுகூட சிங்கள அரசாங்கத்தின் கொள்கைப் போக்கினால் உருவானதே தவிர ஆயுதப்போராட்டத்தின் கொள்கை வகுப்பினால் அல்ல.

1983ல் நிகழ்ந்த இனப்படுகொலையை தொடர்ந்தும் இலங்கை இந்தியாவை அனுசரித்து நடக்காததால் இந்தியா ஆயுதப்போராட்டத்தை தத்தெடுக்க தீர்மானித்தது தனது நலனிற்காக. ஆயுதப்போராட்டம் இந்திய ஊட்டம் பெற்று முக்கியத்துவமும், செழுமையும் அடைந்தது. ஆயுதப்போராட்டத்தை அழுத்தப்புள்ளியாக பயன்படுத்தும் இந்தியத் தெரிவினால் இது வரை களமுனையில் காட்டப்பட்ட வெற்றிக்கு அளவாய் அரசியல் விளைவைப் பெறமுயலும் தருணம் உருவாகிற்று.

இந்தியா ஈழப்போராட்டத்தை இலங்கை மீதான அழுத்தப் புள்ளியாக பாவித்தாலும் ஈழப்பிரச்சனையின் பேரால் தான் அதனால் தலையிட முடியும். வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகமாக ஏற்றுக்கொள்வதில் இந்தியாவிற்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தமிழர் தாயகத்திற்கு இந்திய மாநிலங்களிற்கு உரித்தான அதிகாரங்கள் வழங்கப்படுவதிலும் இந்தியாவிற்கு எந்த நலன்கேடும் இருக்கவில்லை.

ஆக, இலங்கையில் தலையிடும் இந்தியாவின் முடிவே ஆயுதப்போராட்டத்தால் அப்போது அடையப்பெற்ற களவெற்றிக்கு கிடைத்த பேரப்புள்ளியாகும். இந்தியா ஆயுதப்போராட்டம் தனது ஆளுகைக்கு உட்பட்டது என இலங்கைக்குக் காட்டியே பேரத்தை உருவாக்கியது.

எனவே ஆயுதப்போராட்டம் தன் பேரத்தை இலங்கைக்கு எதிராக மட்டுமல்ல இந்திய நலனை பாதிக்காத அடைவு வரை இந்தியாவிற்கு எதிராகவும் வைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு பேரச்சக்தியாகப் பயன்படுத்தி தமிழர் தாயகம் என்ற முதல் அடைவை நோக்கி முன்னேறக் கூடிய ஏதுநிலைகள் அப்போது அரசியல் அரங்கில் இருந்தது.

இதற்கப்பால் ஒரு அடைவை எட்டக்கூடிய எந்தவொருவாய்ப்பும் போராட்டத்திற்கு அகப்புற அரசியலில் இருந்திருக்கவே இல்லை. ஆனால் இந்தியா தனிநாட்டுக் கொள்கைக்கு எதிரானது ஆக, இந்தியா போராட்டத்திற்கு எதிரானது என்ற மனோபாவம் குருட்டு அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தூண்டியது.

அப்போதே ஆயுதப்போராட்டச் சக்திக்கு இணையான அரசியல் விளைவை பெற்றுக் கொள்ளக்கூடிய இயலுமைச்சூழல் இருந்த போதும் அரசியல் வங்குரோந்துக் கொள்கையால் அது கைதவறிப்போனது.

திம்புப் பேச்சுவார்த்தை குழப்பத்தைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டத்திற்கு கிடைத்த இந்திய ஆதரவு ஊட்டம் நிறுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டம் அரசியல் அநாதையாகியது. அரசியல் கொள்கையால் வழிநடத்தப்படாத போர்க் கொள்கை போராட்டத்தை அநாதையாக்கியதே தவிர, போரின் பயனான அரசியல் அடைவைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

தொடரும்..

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar