கொள்கைக் கோளாறுகள் கொண்டு சேர்க்கும் இடம் அரசியல் கழுமரம் – குணா.கவியழகன்
இந்திய நலனை அனுசரிக்காததனால் ஆயுதப் போராட்டம் இந்தியாவைப் பகைத்துக் கொண்டது. சொந்த நிலத்தில் தனித்து நின்று போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஈழப்போராட்டத்திற்கு உருவாகிற்று. சரியாகச் சொன்னால் மிகப்பெரும் பின்னடைவை ஆயுதப்போராட்டம் அரசியல் அர்த்தத்தில் கண்டது. ஏதிரியை பலப்படுத்தியும் போராட்டத்தை பலவீனப்படுத்திய கொள்கையாகவும் இது போய் முடிந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்புக் கொண்டிருந்த கட்டுக்கோப்பும் செயல் ஆற்றலும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய ஆயுத அமைப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை எடுத்தது. இத்தீர்மானத்திற்கான அரசியல் பின்புலம் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாமல் புறக்கணித்ததன் விளைவாகவே உருவானது.
இந்தியா ஏனைய இயக்கங்கள் மூலமாக போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஏதுநிலை இருப்பதை உணர்ந்து கொண்டது விடுதலைப்புலிகளின் தலைமை.
ஏனைய இயக்கங்களை இந்தியா அரவணைத்து ஆதரவளித்தால் களத்தில் தனித்துவிடப்பட்ட விடுதலைப்புலிகள் பலவீனமடைய வேண்டிய நிலை ஏற்படும். அரசியல் முக்கியத்துவத்தையும் இழக்க நேரிடும். இதனால் மக்கள் மத்தியில் புலிகளின் செல்வாக்கு இழக்கப்படலாம் இந்நிலை, ஆயுதப் போராட்த்திற்கான தலைமைத்துவம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த புலிகளிடம் இருந்து கைமாற வைக்கும். இவ்வாறு அஞ்சிய விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை தடை செய்தது.
அநேகமாக ஏனைய இயக்கங்கள் மக்களிடம் பரந்தளவில் நற்பெயரைப் பெறுவதில் மிகவும் பலவீனமாக இருந்தன. கட்டுக் கோப்பான அமைப்பை உருவாக்குவதில் அவை போதிய வெற்றியை காணவில்லை. இதில் ஈரோஸ் ஓரளவு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொண்டது. விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் எவையும் களத்தில் யுத்த செயற்திறன் கொண்ட அமைப்புகளாக இருக்கவில்லை. இதனாலும் விடுதலைப்புலிகள் மீது மக்களிற்கு கவர்ச்சி இருந்தது. இத்தகைய பின்புலத்தைப் பயன்படுத்தி புலிகளால் ஏனையவற்றைத் தடை செய்ய முடிந்தது.
ஆனால், எமது ஒட்டுமொத்த ஆயுதப்போராட்டத்தை பரிசீலித்தால் ஈழத்தமிழர் ஆயுதப்போராட்டம் இதனால் பலவீனம் கண்டது. அதன் ஆட்தொகை பலமடங்கால் வீழ்ச்சி கண்டது. உள்நிலைக் குழப்பங்கள் உருவாகிற்று. ஒவ்வொரு இயக்கங்களும் காலூன்றி நின்ற மக்கள் சமூகம், பிரதேசம் என்பன குழப்ப நிலைக்கு உள்ளாகின.
பொதுவான வெகுசன உளவியலிலும் கூட இயக்கங்கள் தமக்குள் மோதிக் கொள்கின்றன என்ற அதிருப்தியைத் தோற்றுவித்தது. எனவே பிராந்திய வல்லரசின் ஆதரவை பகைத்து தனித்த ஆயுதப்போராட்டம் தமக்குள் மோதிக்கொண்டதால் தம்மைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல் சொந்த மக்களுக்குள்ளே அதிருப்தியை உருவாக்கி மேலும் பலவீனப்பட்டது.
பல இயக்கங்களைக் கொண்ட அப்போதைய ஆயுதப்போராட்டத்தின் நிலவரப்படி வசப்பட்ட தந்திரோபாயத்தை கருத்தில் எடுப்பதே முக்கியம். அதன்படி ஒவ்வொரு இயக்கமும் திரட்டும் ஆட்தொகை, மற்றும் இராணுவத் தாக்குதல்கள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அரசுக்கெதிராக இதனை ஒரு பேரப்புள்ளியாக பயன்படுத்தி அடையக்கூடிய சாத்தியமான அரசியல் உரிமையை அறுவடை செய்வது தான் போராட்டத்திற்கான பாதுகாப்பினையும் பலத்தையும் தேடும் முதற்கட்ட தந்திரோபாய நடவடிக்கையாகும். வேறு அரசியல் பலமுமற்ற போராட்டத்திற்கு தன்னைப் பாதுகாத்து முன்னேறக்கூடிய தெரிவாக இதைக் கொள்ளலாம்.
ஆனால் ஏனைய இயக்கங்களைத் தடைசெய்து உருவாகிய அகப்புற நிலைமைகளால் அத்தகைய கட்டி வளர்க்கப்பட்ட பேரச்சக்தி சிதைந்து சின்னாபின்னமாகியது. ஆயுதப்போராட்டம் இந்தியாவின் தேவையைக் கவர்ந்து உருவாக்கிய தம் பலத்தையும் பேரத்தையும் இழந்து போன நிலையில் தமக்கென இருந்த குறைந்த பட்ச இராணுவப் பலத்தால் உருவாகிய பேரச் சக்தியையும் இழந்து போனது.
ஆக அரசியலில் விடுதலைப் புலிகள் பலப்பட்டிருக்கலாம் ஆனால் புற அரசியலில் போராட்டம் பலவீனப்பட்டது.
இப்படி அரசியல் அர்த்தத்திலும், இராணுவ அர்த்தத்திலும் தனிமைப்பட்டு பலவீனப்பட்டுப்போன ஆயுதப்போராட்டம் எதிரிக்கு போதுமான பலத்தையும் நம்பிக்கையையும், சந்தர்ப்பத்தையும் வழங்கியது.
அப்போது ஓரளவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி கட்டுப்படுத்த முடிந்தது யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே. மிகச்சரியான சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர் ஆயுதப்போராட்டத்தின் அரசியல், மற்றும் இராணுவத் தலைமையமாக பயன்பட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
‘ஓப்பரேசன் லிபரேசன்’ என அழைக்கப்பட்ட இம்முயற்சியின் முதல் எத்தனிப்பிலேயே வடமராட்சிப் பிரதேசம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இது போர் நடவடிக்கையை இராணுவத்தால் முழுமைப்படுத்த முடியும் என்ற நிலையை உணர்த்தியது.
இயக்கங்களை தடைசெய்ததால் ஆட்பலத்தையும், இந்தியாவைப் பகைத்துக் கொண்டதால் ஆயுத விநியோகத்தையும் புலிகள் இயக்கம் இழந்து நின்ற தருணம் அது. கொள்கைக் கோளாறுகளினால் பலவீனப்பட்ட போராட்டம் தோற்கடிக்கவோ, பெரும் பின்னடைவை சந்திக்கவோ கூடிய ஏதுநிலையே அப்போதைய யதார்த்த நிலவரம் ஆகிற்று.
ஆனால் இலங்கை அரசு விட்ட இந்திய எதிர்ப்பு என்ற கொள்கைத் தவறினால் இந்தியா இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்க தன் சொந்த நலனிற்காக தலையிட்டது. இந்தியாவின் நேரடித் தலையீடு தன் சொந்த நலனுக்கேயாயினும் ஆயுதப்போராட்டம் பெரும் பின்னடைவையோ தோல்வியையோ சந்திப்பதிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் ஈழப்போராட்டம் பற்றிய இந்திய நோக்குநிலையால் இத்தருணத்தில் போராட்டம் பாதுகாக்கப்பட்டதே தவிர ஆயுதப்போராட்ட சக்தியால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஏதுநிலை போதியளவு இருந்திருக்கவில்லை.
இந்தியாவை அனுசரித்த பின் இந்நடவடிக்கையை இலங்கை அரசு செய்திருந்தால் அப்போதைய ஆயுதப்போராட்டம் சுய அழிவைச் சந்தித்திருக்கும் அல்லது பெரும் பின்னடைவைக் கண்டிருக்கும்.
தொடரும்..
*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar