ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10

உடைவாளையுருவி எதிரியிடம் எறிந்து விட்டு போருக்கு ஊதிய சங்கு - குணா.கவியழகன்
முரண்பாட்டை கையாள்வது தான் அரசியல் சாணக்கியத்தின் அடிப்படையும் ஆயுதமும் ஆகும். முதலில் முரண்பாட்டை சரியாக கண்டடைய வேண்டும். அதில் நட்பு முரண்பாடு எது பகை முரண்பாடு எது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக கண்டடைந்தால் அரசியல் முன்னெடுப்பு பின்னடைவைக் காணும். பகை முரண்பாட்டை நட்பு முரண்பாடாக கண்டு கொண்டால் அரசியல் வஞ்சகத்திற்கு ஆளாகும்.

தன் பலவீனங்களைக் களைவதற்கும் மேலும் தன்னை ஆயுத, ஆட்பல ரீதியில் செழுமைப் படுத்திக் கொள்வதற்கும் விடுதலைப்புலிகளைக் கருவியாக்கிக் கொண்டார் பிரேமதாசா.
விடுதலைப்புலிகளோ தம் எதிரி தன்னை தன் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் வரை பொறுத்திருந்தது போல் நடந்து கொண்டனர். அரசு தன் அகச்சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டதும் புலிகள் போரைத் தொடங்கினர்.

அரசு தன் கவனத்தை கிழக்கில் குவித்தது. ஈழத்தமிழர்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைப்பதற்கு போராட்டத்தின் பலவீன அங்கமான கிழக்கைக் கைப்பற்றுவது இன்றியமையாததும் இலகுவானதும் ஆகும்.

கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியது. கிழக்கில் போராட்டம் காடுகளுக்குள் பதுங்க நேர்ந்தது. கிழக்கில் போரை முன்னெடுப்பதற்கும் போராட்டத்தை வளர்ப்பதற்கும் ஒரு தளப்பிரதேசம் அற்றுப் போனது.

ஜ.தே.க அரசாங்கம் வகுத்துக் கொண்ட இராணுவ மூலோபாயக் கொள்கை இந்த இடத்தில் முக்கியமான விடயம். கிழக்கைக் கைப்பற்றி இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் பேணுவது. எஞ்சிய இராணுவ பலத்தின் இயலுமைக்கேற்ப வடக்கில் போர் முயற்சிகளை வளர்த்து வெற்றி காண்பது. இதன் மூலம் வடக்கில் புலிகள் சில சமர் வெற்றிகளைக் கண்டாலும் அது போரில் புலிகள் முன்னேறி வருவது போல் தோற்றினாலும் நீண்ட கால நோக்கில் போராட்டத்திற்கு அடிப்படையான அழிவைக் கொடுத்துவிட முடியும் என்பதே இந்த இராணுவக் கொள்கையின் நோக்கம்.

கிழக்கை நிரந்தரமாக இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்படுத்தி இனப்பரம்பலை மாற்றியமைக்கும் போது தாயகக்கோட்பாடு சிதைக்கப்பட்டுவிடுகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு அனைத்துலகச் சக்தி போராட்டத்தை ஆதரித்தாலும் கூட தாயகக்கோட்பாட்டிற்கு ஈழத்தமிழர்கள் தகுதியற்றவர்களாக கிழக்கை மாற்றியமைப்பதே இந்த மூலோபாயத்தின் அரசியல் நோக்கம்.

இந்த நூட்பமான அரசியல் கொள்கையால் வழிநடத்தப்பட்ட சிங்கள இராணுவக்கொள்கை பூரண வெற்றியைக் கொடுத்தது.

சிங்கள அரசு அரசியல் உள்நோக்கத்திற்கேற்ப இராணுவக் கொள்கையை வகுத்து செயலில் இறங்கிய போது விடுதலைப்புலிகள் இஸ்லாமிய தமிழர்களை விடுதலைப்போராட்டத்தின் தடைச் சக்திகளாகவோ, பகைச் சக்திகளாகவோ கண்டடைந்தனர். இஸ்லாமியத் தமிழர்களுடன் ஏற்பட்ட நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக எண்ணி விடுதலைப்புலிகளை கையாள வைத்ததில் சிங்கள அரசு மிகப்பெறுமதியான வெற்றியைக் கண்டது.

அரசாங்கம் விரித்த வலையில் ஆயுதப்போராட்டம் இலகுவாக வீழ்ந்தது. தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கான அடுத்த மார்க்கம் முஸ்லிம்களை தனி இனமாக உணரவைப்பதே. அதற்கு முதல் தேவையானது தமிழ்-முஸ்லீம் பகையை உருவாக்குவது.

‘தந்தை’ செல்வநாயகத்தின் அரசியல் முனைப்பில் ஏற்பட்ட ஒரு தளமான தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்ற தேசிய நிலைப்பாட்டை ஆயுதப் போராட்டத்தைக் கொண்டு சிதைக்கத் தூண்டியது சிங்கள அரசு.

தமிழ்த்தேசியத்தின் அங்கமான இஸ்லாமியர்களை மதத்தின் பேரால் பிறிதொரு இனமாக நடக்கவும், நடத்தவும் தூண்டிய அரசின் சதிவலைக்குள் அகப்பட்டு புலிகள் முஸ்லீம்களை தமது கட்டுப்பாட்டு நிலப்பரப்புக்குள் இருந்து வெளியேற்றினர். இதன் மூலம் இலங்கையில் முஸ்லீம் அரசியல் தனி அரசியலாவதற்கும், முஸ்லீம் மக்களையும், முஸ்லீம் அரசியலையும் தமிழ் போராட்டத்திற்கு எதிராக திருப்புவதிலும் அரசு வெற்றி கண்டது.

முஸ்லீம் மக்களின் தலைமைத்துவம் தூரநோக்கற்றும், சுயநலம் கொண்டும் தம் மக்களின் தலையில் தாமே மண்ணை வாரி இறைத்தனர். ஆனால் அது இங்கு முக்கியமல்ல ஆயுதப்போராட்டத்தின் தவறுகளே இங்கு அவதானிப்புக்கு உரியவை.

ஆயுதப் போராட்டத்தலைமை எடுத்த இத்தீர்மானம் மூலம் தன் சவக்குழியை தானே வெட்டிக் கொண்டது.

இதன் பின் கிழக்கு இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசம் மட்டுமல்ல கிழக்கு என்பது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் வாழும் பல்லினச் சமூகத்தின் வாழிடம் என்றாகிறது. மேலும் வடக்குக் கிழக்கில் பரந்து வாழும் முஸ்லீம்களை போராட்டத்தின் எதிர்நிலைச் சக்திகளாக அரசு பயன்படுத்தவும் வழியமைத்தது.

தமிழ்த் தேசியத்தை இரண்டாகப்பிளக்கும் திட்டத்திற்கு தன் எதிரிக்கு தானே அரிவாள் எடுத்துக் கொடுத்தது ஆயுதப் போராட்டம். எதிர்காலத்தில் போர் முன்னெடுப்புக்கள் கிழக்கில் சிக்கலாகவும், போரும் போராட்டமும் வடக்கிற்குள்ளும், தமிழர்களுக்குள்ளும் சுருங்கிப் போகவும் இது அடிகோலியது.

எற்கனவே ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் உதவியை நாடாத இப்போராட்டம். இப்போது மேலும் பலவீனமாகிற்று. மலையக அரசியல், முஸ்லீம் அரசியல் என இவையாகி சிங்கள அரசியலில் பக்கத்துணையாகின.

ஆனால் சிங்கள மக்களுக்குள் இருந்த சிங்கள பௌத்தத்தின் கிறிஸ்தவ முரண்பாட்டை ஆயுதப்போராட்டம் கையாளவில்லை. சிங்கள தேசத்தில் தொடங்கப்பட்ட ஆயுதப்புரட்சியையும் கையாளவில்லை. சிங்கள இடதுசாரி மிதவாத அரசியலையும் பயன்படுத்தவில்லை.

அரசியல் கொள்கையினால் வழிநடத்தப்படும் போரிற்கும், போரின் தேவைகளுக்கு உட்பட்டு கையாளப்படும் அரசியலுக்கும் உள்ள வினைதிறன் இடைவெளியை இங்கு காணலாம்.

தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar