ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 09


எதிரியின் கழுத்தில் இருந்த சுருக்கை கழட்டி கையில் கொடுத்து கழுத்தையும் நீட்டிய கதை - குணா.கவியழகன்
ஒரு போராட்டத்தின் பாதுகாப்பு சொந்தப் பலத்தினால் மட்டும் கிடைப்பதில்லை. அது எதிரியின் பலவீனத்தினாலும் கிடைக்கக்கூடியது. தம்மைப் பலப்படுத்துவது மட்டுமல்ல எதிரியின் பலவீனத்தைப் பலப்படுத்துவதும் கூட மிகச்சிறந்த இயலுமைதான்.

பிறேமதாசா அரசாங்கத்தோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இந்தியா என்ற தன் மிகப்பெரும் பலவீனப்புள்ளியை சிங்கள அரசு அகற்றிவிட்டது. இந்திய பேச்சு முயற்சியில் ஈழத்தமிழர் தரப்பிற்கு குறிப்பிடக்கூடிய யாதொரு பேரப்புள்ளியும் இருந்திருக்கவில்லை. தவிரவும் சிங்கள அரசு சமரச முயற்சியில் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் உள்நோக்கத்தையும் பேச்சு முயற்சியில் கொண்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகளும் சமரச முயற்சியில் தீர்வுக்கான அடைவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையில் பேச்சில் ஈடுபடவும் இல்லை.

விடுதலைப்புலிகளின் உள்நோக்கம் இந்தியாவை களத்தில் இருந்து அகற்றிவிட்டு சிங்கள அரசுடன் போரைத் தொடர்வதாகத்தான் இருந்தது. அதற்கு வசதியாக, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி வைத்து தளப்பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் பேணுவதற்கான கள ஏற்பாட்டைத்தான் பேச்சுக் காலத்தில் ஏற்படுத்தினர். போர் என்பதே விடுதலைப் புலிகளின் பேச்சுக்கான உள்நோக்கமும் முன் தீர்மானமுமாக இருந்தது.

போரைத் தொடர்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு அனைத்துலக சக்திகளின் ஆதரவும் இருந்திருக்கவில்லை. தொடங்கப்போகும் போரிற்காக விடுதலைப்புலிகள் எந்தவொரு சிறப்பான பலத்தையும் கொண்டிருக்கவுமில்லை. சொந்த நிலத்திலும் சொந்தப் பலத்திலும் தான் போர் தங்கி நிற்கப்போகின்றது. ஆனால், இத்தருணத்தில் அரசாங்கம் மிகச்சிறப்பான பலவீனத்தைக் கொண்டிருந்தது. அது ஒன்று தான் பிரகாசமான ஒரு பலமாக போராட்டத்திற்கு இருந்தது. போரைப் போதுமானளவு எதிர்கொள்ள முடியாத அரசின் பலவீனம் போராட்டத்திற்கு ஒரு பலம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

கொழும்பு இந்திய இராணுவத்தை வெளியேற்றி விட்டாலும் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்து நிற்கும் ஜே.வி.பி கொழும்பின் மிகப்பெரும் பலவீனமாகும். ஜே.வி.பி.யின் இலட்சியம் ஜ.தே.க வை ஆயுதப் புரட்சியின் மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதே.

அரசின் இரண்டாவது பலவீனம், ஜ.தே.கட்சிக்குள் இருந்த உட்கட்சித் தலைமைத்துவப் போட்டி. காமினி திஸநாயக்கா, லலித் அத்துலத் முதலி போன்ற ஜ.தே.கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் தலைமைத்துவப் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். ஜ.தே.க உள்நிலையில் குழுமோதல்களைச் சந்தித்திருந்தது. இதனால் கட்சிக்குள்ளும் பிறேமதாசா தலைமைத்துவ நெருக்கடியைச் சந்தித்திருந்தார்.

ஜே.வி.பி.யால் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அப்போது இருக்கவில்லை. சிங்கள இளைஞர்களின் ஆதரவு, ஆட்பலம், ஓரளவு ஆயுதபலம் என்பவற்றைக் கொண்டிருந்த போதும் தொழிற்திறன், அனுபவம், அரசியற்புறநிலை போன்ற புரட்சியை சாத்தியமாக்கும் காரணிகளை அந்தளவுக்கு கொண்டிருக்கவில்லை.

[ஈழப்போராட்டம் வென்று அதனால் ஏற்படும் தெற்கின் அரசியல் மாற்றத்திற்காக ஜே.வி.பி காத்திருக்க வேண்டியிருந்தது.] இது பிறிதான் ஓர் ஆய்வு இங்கு அது அவசியமற்றது.

புரட்சியை சாத்தியமாக்கும் சூழல் இல்லை என்பது மட்டுமே இங்கு தேவையான பொருள். ஆக, ஜே.வி.பி புரட்சியை முன்னெடுக்க பலம் கொண்டிருந்தது. புரட்சியை வெல்ல பலம் கொண்டிருக்கவில்லை.

மறுபக்கத்தில் உட்கட்சி தலைமைத்துவ போட்டி பிறேமதாசாவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது. பிறேமதாசாவின் இன்னொரு பலவீனப்புள்ளி இது. ஆயினும் கூட சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையில் போட்டித்தலைமைத்துவங்களால் ஆறு ஆண்டு ஆட்சிக்காலம் முடியுமுன்பு அதிபரை கவிழ்க்க முடியாது. ஆக தலைமைத்துவத்திற்கு தொல்லை கொடுக்கலாம். நெருக்கடி கொடுக்கலாம் பிறேமதாசாவை பதவியில் இருந்து உடனடியாக அகற்ற முடியாது.

இந்தப் புறநிலையில் சிறிலங்கா அரசு கொண்டிருக்கக்கூடிய படையியல், அரசியல் பலவீனத்தில் ஈழத்தமிழரின் ஆயுதப்போர் மிகக் கணிசமானளவு முன்னேறியிருக்கலாம்.

பேச்சுவார்த்தையில் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் பெரும் பகுதி தென்பகுதிக்கு மீளப் பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அம் முகாம்களை வெற்றி கொள்வது விடுதலைப்புலிகளுக்கு கடினமாக இருந்திருக்காது. ஈழத்தமிழர் தாயகத்தின் பெரும் பகுதிகள் மீட்கப்பட்டிருந்தால் அதனை மீளக்கைப்பற்றுவதற்கான ஒரு படைப்பலத்தை அரசு பெற்றிருக்கவும் முடியாது.

இந்தியாவைப் பகைத்துக் கொண்ட அரசாங்கம் இந்திய உதவியை நாடவும் முடியாது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு பிறிதொரு நாடு இலங்கைக்கு நேரடிப்படை உதவியை வழங்கவும் முடியாது.

அறிவின் கண் கொண்டு பார்த்திருந்தால் ஈழத்தமிழ் மக்களிற்கான ஓர் அற்புதக்கனி அரசியல் மரத்தில் தொங்கியிருந்ததை அதுவும் தானாகக் கனிந்ததை பக்குவமாகப் பறிக்கத் தெரியாமல் பாழாக்கிக் கொண்டது ஆயுதப்போராட்டம்.

ஜே.வி.பியை வளர்ப்பதற்குப் பதிலாக ஜே.வி.பியை ஒழிப்பதற்கு விடுதலைப்புலிகள் பிறேமதாசா அரசாங்கத்தோடு ஒத்துழைத்தனர். ஜே.வி.பியை ஒழிக்கும் விதமாக பேச்சு என்ற பேரில் அரசோடு நட்பு பாராட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் மிகமூர்க்கத் தனமாக பிறேமதாசா சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்கினார். அந்த வெற்றி அரசிற்கு நம்பிக்கையும், பலத்தையும் கொடுத்தது. பிறேமதாசாவின் பிடரியின் பின்னால் ஒளிவட்டம் சுற்றியது.

அடுத்து இருந்தது உட்கச்சி தலைமைத்துவ போட்டி அதையும் கூட பின்வந்த காலத்தில் ஒழித்துக்கட்ட விடுதலைப்புலிகள் துணைபோயினர். பிறேமதாசா கட்சிக்குள்ளும் புறமும் சர்வ பலம் பெற்றார்.

பின்வந்த காலத்தில் ஆயுதப்போர் சந்தித்த பின்னடைவுகளுக்கும் இறுதித் தோல்விக்கும் இதுவே முக்கிய திருப்புமுனை ஆயிற்று எனலாம். கண்களால் உருவாவது காட்சிகளே பார்வை அறிவால் உருவாவது தேவைப்பட்டது பார்வையே அல்லாமல் காட்சிகள் அல்ல.

தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar