ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 08


நண்பனைப் பகைவனாக்கி பகைவனுக்கு நண்பனாகிய பாதையில் குருதி வழிந்தபடி வெற்றியைத் தேடிய பயணம் - குணா.கவியழகன்
இந்திய இராணுவம் ஈழமண்ணில் நிலைகொண்ட போது தான் விடுதலைப்புலிகள் ஜரோப்பாவில் தமது கால்களை பரவலாக பதியவைத்தனர். ஜரோப்பிய நாடுகளில் புலிகள் நிறுவனமயமாகச் செயற்படத் தொடங்கியது இக்காலகட்டத்தில் தான்.

அப்போதைய பனிப்போர் அரசியலின் போட்டி காரணமாக இந்திய இராணுவம் ஈழத்தில் புரியும் அநீதியை உலகளவில் பரப்புரைப்படுத்த மேற்குலகம் தன் ஊடகக் கதவுகளை திறந்தது.

எதிர்ப்பரசியலின் காரணமாக திறக்கப்பட்ட இக்கதவுகளுக்கு புலிகள் தேவைப்பட்டனர். இப்பின்னணியில் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்து இயங்கவும், புலிகளின் தளபதி கேணல் கிட்டு பிரான்ஸ்சில் இருந்து இயங்கவும் முடிந்தது.

மேற்கில் புலிகள் காலூன்றியதும் தமக்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்கியதும் ஊடகத்தளத்தை உருவாக்க முடிந்ததும் ஈழத்தமிழர் போராட்டத்தில் ஒரு சாதகமான அடைவு தான் ஆனால் இதன் வெற்றி தோல்வி, கனிந்த இந்த சாதகத்தில் யார் யாரைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் தான் தங்கி இருக்கின்றது.

சந்தர்ப்பத்தைக் கையாள்வது தான் அரசியல் தந்திரோபாயம் ஆனால் எந்த தந்திரோபாயமும் மூலோபாயத்தை அடைவதற்கான மார்க்கமாக இருந்தாலேயன்றி அது அறிவுள்ள தந்திரோபாயம் ஆகாது.

மேற்கின் கதவுகள் திறக்கப்பட்டது இந்தியாவிற்கு எதிராயேயன்றி புலிகளுக்கு ஆதரவாகவல்ல. இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு நிலை நீங்கிவிட்டால் கதவுகள் மீண்டும் மூடப்படும். எனவே திறக்கப்பட்ட கதவுகள் ஊடாகச் சென்று போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டால் அது இராஜதந்திரம். இல்லையெனில், காலத்தால் கருவியாக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட நிலையாகிவிடும் இப்போராட்டம்.

இந்த அர்த்தத்தில் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட தளம் மேற்கில் புலம்பெயர் தமிழர்களிடையேயன்றி மேற்குலக சமூகத்துடன் அல்ல. ஐரோப்பிய அரசுகளின் ஆதரவையோ, உறவையோ கூட புலிகள் ஏற்படுத்தி இருக்கவில்லை. அதற்கான ஊடகச் செயற்பாடும் இருந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் அந்நாட்டு மக்களிடம் கூட செல்வாக்கு செலுத்த முனையவில்லை புலிகள்.

உள்நாட்டில் இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலை சிங்கள பௌத்த மனங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா வரலாற்று எதிரி என்பதே அவர்களின் நிலைப்பாடு.

இச்சந்தர்ப்பத்தில் தான் ஜே.வி.பி [Janatha Vimukthi Peramuna – JVP] தன் இரண்டாவது புரட்சிக்கு தயாரானது. அதற்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலே. இந்திய எதிர்ப்புக் முழக்கத்தைக் கைப்பந்தத்தில் மூட்டிக் கொண்டு ஜே.வி.பி அதை சிங்கள மனங்களில் பற்ற வைத்தது. காட்டுத்தீயென பரவியது இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி அசுர வளர்ச்சி பெற்றது இத்தீயின் ஒளியில்.

இதன் மூலம் ஜே.வி.பி சாதிக்க விளைந்தது எதுவெனில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி [UNP] மீது மக்களுக்கு வெறுப்பேற்றி புரட்சியை சாத்தியமாக்கிக் கொள்வதே.

இத்தருணத்தில் தான் ஜ.தே.கட்சிக்குள் உட்கட்சி தலைமைத்துவ போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆர் பிறேமதாசா நிலைமைகளை சரியாக எடை போட்டார். ஜே.வி.பி இன் தீப்பந்தத்தைத்தானே கையெடுக்க முடிவு செய்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தம் என வியாக்கியானம் செய்தார்.

மக்கள் மத்தியில் ஜே.வி.பி உருவாக்கிய ஜ.தே.க எதிர்ப்பை ஜே.ஆர் அடிபணிவு அரசியல் என விமர்சித்து தன் உட்பகையாளியை வென்றும் ஜ.தே.க வை காப்பாற்றியும் கொண்டார் பிறேமதாசா.

அத்துடன், இந்திய எதிர்ப்பலைக்கு தானே தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தார். தான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவேன் என முழங்கினார். விளைவு, ஜே.வி.பி ஒரு கையில் பிடித்த இந்திய எதிர்ப்பு தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் மறுகையில் ஏந்திய அரிவாளால் ஜ.தே.க வை அறுக்கக் காத்திருந்தது. ஆனால் பிறேமதாசா ஜே.வி.பி விதைத்ததை தனது தலைமைத்துவ வெற்றியாக அறுவடை செய்தார்.

இந்த அறுவடைக்காக அவர் நாடியது விடுதலைப்புலிகளை. லண்டனில் இருந்த புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு ரகசிய உடன்பாடு கண்டார். புலிகளின் வெற்றிகரமான இராஜ தந்திரமாக இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பிறேமதாசா - புலிகள் ரகசிய உடன்பாடு கருதப்பட்டது.

உண்மையில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற ஒத்துழைப்பதாகச் சம்மதித்து பிறேமதாஸ பதவிக்கு வந்ததும் அதற்கு ஒத்துழைப்பதற்கு மாறாக இந்தியாவுடன் அனுசரித்து புலிகள் ஒரு ரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

தெற்கில் இந்திய எதிர்ப்பலைக்கு பிறேமதாசா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். விடுதலைப் புலிகளின் உதவியின்றி அவரால் இந்தியாவை உடனடியாக வெளியேற்ற முடிந்திருக்காது.

இந்நிலையில் ஜே.வி.பியின் கை ஓங்கியிருக்கும். தெற்கில் அரசியல் குழப்பங்கள் தலைதூக்கி இருக்கும். ஜே.வி.பி இந்திய இராணுவத்திற்கெதிரான வன்முறைகளில் ஈடுபடும். அதனை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பிறேமதாசா அரசாங்கம் திணறும். இந்திய எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டு அவரால் அரசியல் செயலாற்றவும் முடியாது போயிருக்கும்.

இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கு ஈழத்தில் நிலைகொள்ள புலிகளின் இன்றியமையாத ஆதரவின்றி வேறு ஆதாரம் இருந்திருக்காது. இரு தரப்பு எதிர்ப்புடன் இந்தியாவால் நிலைகொள்ள முடியாது.

இந்த இடத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான புலிகளின் பேரச்சக்தி உச்சம் பெற்றிருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் தன் இராஜீக தோல்வியை, அவமானத்தை தடுப்பதற்கு புலிகளுடன் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. இத்தகைய அடிப்படையில் இந்தியாவுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் அத்தகைய இராஜதந்திரம் ஒப்பற்ற நல்விளைவுகளை போராட்டத்திற்கு ஏற்படுத்தியிருக்கும்.

புலிகள் இந்தியாவின் இன்றியமையா நண்பனாகவும், இலங்கை அரசு தீராப்பகையாளி ஆகவும் ஒரு அரசியல் யதார்த்தம் தோன்றியிருக்கும். வடக்கு கிழக்கையும் தமிழர்களையும் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பும், நலனுமாயிருக்கும். நடைமுறையில் சிங்களத்தரப்பு ஏற்படுத்திய பகையினால் ஈழத்தமிழரின் மாகாண அலகு இந்தியாவின் பாதுகாப்பில் தனி அலகாக செயற்பட நேர்ந்திருக்கும். நடைமுறையில் இதற்கு தனித்துவமான உரிமைகள் வந்து சேர்ந்திருக்கும் அதன் பாதுகாவலனாக தவிர்க்க முடியாமல் இந்திய இராணுவம் இயங்க நேர்ந்திருக்கும். இப்படி நேர்மறையான விளைவுகள் தொடர வாய்ப்பிருந்தது.

இதன் விளைவால் ஏலவே ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட தாயகத்தில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி தனக்கான உரிமைகளை அறுவடை செய்வதை நோக்கி அரசியல் யதார்த்தத்தை நகர்த்தி இருக்க முடியும் போராட்டம் கணிசமான விளைவை அறுவடை செய்திருக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிரல் புலிகளின் இராஜதந்திரம் ஆகலாம். ஆனால் நிகழ்ந்தது என்ன.

ஒடுக்குமுறை சிங்கள அடக்குமுறையாளர்களின் நிரந்தரப்பகையாளியை அவர்களின் தேவைக்காக வெளியேற்ற நாம் துணைபோனதன்றி வேறென்ன. இந்திய இராணுவத்தின் வருகையால் நெருக்கடிக்குள்ளான இலங்கை அரசியல், பின்னடைவுகளைக் கண்ட சிங்கள இராஜ தந்திரம் கேள்விக்குறியான இலங்கையின் இறைமை மீட்க எதிரிக்கே ஒத்துழைத்த தேயன்றி வேறென்ன.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவை தமிழர்களின் போராட்ட நிரந்தர எதிரியாக உருவாக்கத் தேவையான அடித்தளத்தையும் எம்மைக் கொண்டே உருவாக்கிக் கொண்டது சிங்களத் தலைமைத்துவம்.

இந்த இடத்தில் சிந்திக்கத் தூண்டுவது யார் யாரைக் கையாண்டனர்? மேற்குலகம் புலிகளைக் கையாண்டதா? புலிகள் மேற்குலகத்தைக் கையாண்டனரா? புலிகள் பிறேமதாசாவைக் கையாண்டனரா? பிறேமதாசா புலிகளைக் கையாண்டாரா? இறுதி விளைவில் இருந்து வாசகர்களே இதன் வெளிச்சத்தைக் காண இயலும்.

போராட்டத்தின் அரசியல் கொள்கையானது கையில் கிடைத்த துரும்புச்சீட்டை ஜோக்கர் ஆக்கி விளையாடியது இந்த விளையாட்டின் வெற்றியை கடவுளாலும் தரமுடியாது.

தொடரும்..


*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar