ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 07


அகப்பட்டது ஏணிப்படிகள் பயன்பட்டது இறங்குவதற்கே – குணா.கவியழகன்
கையில் இருக்கும் சீடடுக்குள்தான் மேசையில் விளையாட்டிருக்கும். இல்லாத சீட்டுக்கு விளையாட்டைக் கற்பனை செய்தால் தோல்விதான் இருக்கும்.

இந்தியா தனது இராணுவத் தலையீட்டால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கி விட்டது. யதார்த்தம் இது தான். ஆக அடுத்தது என்ன? இந்த யதார்த்தத்தைக் கையாள்வதில் சிங்கள இராஜ தந்திரமா ஈழத்தமிழர் இராஜதந்திரமா இறுதி வெற்றி காணப் போகின்றது என்பது தான் கேள்வி.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையின் பெயரால் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் பங்களிப்பு இல்லாமலேயே. தமிழ்த்தரப்பின் தார்மீக தலைமைத்துவமாக இந்தியாவே இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஈழத்தமிழர் தலைமைத்துவத்தை இந்தியாவிடம் தாரை வார்த்துக் கொடுத்தது தவறான கொள்கைத் தீர்மானமன்றி இதற்கு வேறென்ன காரணம் கற்பிக்க முடியும்.

திம்பு பேச்சில் ஒருவர் தரப்பாக இருந்த இந்தியா இப்போது ஈழத்தமிழர்களின் தரப்பாக தானே செயற்பட்டது. இங்கு ஒரு தரப்பு என்பதற்கான தகமையையும் தமிழர்கள் இழந்துபோனமை துயரமானதே. இந்தியாவின் இச்செயல் கூறுவது என்ன?

இவ்வொப்பந்தம் இந்திய நலனிற்கானது. தமிழர்களின் இலட்சியத்தின் பேரால் இந்திய நலன்நோக்கிய நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட இயலாது என்பதே. இது தான் ஈழத்தமிழர் போராட்டம் உணர்ந்திருக்க வேண்டிய யதார்த்தம். இந்த யதார்த்த அரசியலை தமிழ் தலைமைத்துவத்தை விட சிங்களத் தலைமைத்துவம் சரியாகப் புரிந்து கொண்டது. அதனடி கொண்டு ஒப்பந்தத்தை அது கையாளத் தொடங்கியது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அரசியல் கவனத்தை ஈர்க்கும் பிரதான அம்சங்கள் :

அ) வொய்ஸ் ஒவ் அமெரிக்கா, இலங்கையில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
ஆ) சீனன் குடா எண்ணைக்குதம் இந்தியாவிடம் கையளிக்கவேண்டும்.
இ) அந்நிய நாட்டுப் போர்க்கப்பல்களை இந்தியாவின் அனுமதியின்றி இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கக்கூடாது.
ஈ) யுத்த காலத்தில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியப் பயன்பாட்டிற்கு கையளிக்க வேண்டும்.
ஐ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இலங்கை அனுசரிக்க வேண்டும்.

இவை அப்பட்டமாக இந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரத்துக்கள்.

தமிழ் மக்களின் பெயரால் தலையிட்ட இந்தியா ஒப்பந்தத்தில் உருவாக்கியது என்ன?
மாகாண சபைத் தீர்வுத் திட்டம். இதில் கவனத்தை ஈர்ப்பது :

01. வடக்கு கிழக்கு ஒரு மாகாண அலகாக இணைக்கப்பட வேண்டும்.
02. மாகாண சபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
.
மேற் சொன்ன அனைத்துமே சிங்கள அரசால் சகித்துக் கொள்ள முடியாத சரத்துக்கள். ஆனால் அனைத்துலக அரசியல் புறநிலையில் தன்னை இந்தியாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேறுவழியில்லை என்பதைப் புரிந்து கொண்டது ஜே.ஆர் அரசாங்கம். தன்னை படையைக் கொண்டு வந்து மிரட்டிய பகையாளியை பகைத்துக் கொள்ளாமல் பணிந்து கொண்டது அது.

மேற்சொன்ன சரத்துக்களால் முழுப்பாதிப்பை அடைகிறது சிங்கள அரசு. ஆனால் ஈழத்தமிழர் தரப்பிற்கு அவ்வாறில்லை.

மேலும், ஈழத்தமிழர் பிரச்சினையின் தீர்வாக வரையப்பட்ட மாகாணசபைத் திட்டம், ஒப்பந்தத்தின் பேரால் இது ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்கிறது.

வடக்கு, கிழக்கு ஒரு அலகாக்கப்பட்டதன் மூலம் நடைமுறையில் ஈழத்தமிழர்களின் தாயகக்கோட்பாடு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மாகாணசபைக்கான அதிகாரங்கள் தமிழர்கள் தம்மைச் சிங்களத் தரப்பிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளப் போதுமானவை இல்லை என்பது நிஜம். ஆனால் ஏற்றுக் கொள்ளாததால் ஏற்படும் அரசியல் துர்விளைவை விட போராட்டத்தை பாதுகாத்துக் கொள்வது அவசியமானது அல்லவா!

மேலும், திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைப்பட்ட தமிழர்தேசியம், தமிழர்தாயகம், தன்னாட்சி உரிமை என்ற மூன்று விடயங்களில் நடைமுறை அர்த்தத்தில் இங்கு தேசியமும், தாயகமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

படையைக் கொண்டு வந்து தன் இறைமைக்கு பங்கம் விளைவித்து மிரட்டிய இந்தியாவை பகைக்காமல் பணிந்து கொண்டது சிங்கள அரசு. நாம் ஏன் எம்மை இந்தியாவின் பகையாளி ஆக்கிக்கொண்டோம்.

இந்த அரசியல் யதார்த்தத்தை மேவிய ஒரு வாய்ப்பு அப்போது ஈழப்போராட்டத்திற்கு இருந்திருக்குமென்றால் ஆயிரம் முறை இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தீர்மானத்தை தெரிவு செய்யலாம். அப்படி ஒரு யதார்த்தம் இருந்ததா? இல்லை யதார்த்தத்தை துப்பாக்கிச் சன்னங்களால் உருவாக்கிட முடியும் என்ற சந்தர்ப்பம் இருந்ததா?

போரில் முன்னேறுவதில் ஆயுதப் போராட்டம் கவனம் செலுத்திய போது. சிங்கள இராஜ தந்திரம் போரைவிட ஈழப்போராட்டத்தை பின்தள்ளுவதில் அக்கறை கொண்டது.

இதன் விளைவு, வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிளவு படுத்தப்பட்டது. கிழக்கின் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதன் இழப்பு போராட்டம் தகுதியற்ற தாயகக் கோட்பாடாகிவிடும் ஆபத்திலிருந்தது.

இவ்வொப்பந்தத்தில் தமிழர்களின் தாயத்தை முதற்கட்ட அர்த்தத்தில் பாதுகாத்துக் கொள்வதற்கு வழிசமைக்க முடியும். வலுப்பெறாதிருக்கும் தேசியத்தை ஓர் அலகு நிர்வாகத்தில் வலுப்படுத்த முடியும். தனிநாட்டுக்கான போராட்டத்திற்கு இது உறுதியான பலத்தையும், தளத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கும்.

ஒப்பந்தம் தமிழர்களுக்கான இறுதித்தீர்வென கட்டுரை வாதிடவில்லை. ஒப்பந்தம் தமிழர் நோக்கு நிலையில் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே வாதம். அப்போது ஆயுதப் போராட்டத்தால் கொடுக்கப்பட்ட விலைக்கு இந்த அடைவு கணிசமானதும் கூட.

தாயகத்தை பாதுகாத்து,தேசியத்தை வலுப்படுத்தி விட்ட போராட்டத்தால் சுயநிர்ணயத்தை நோக்கி முன்னேறுவது சுலபமானது அப்போது அதற்கான அரசியல் புறநிலை இல்லை. அரசியல் புறநிலை வாய்க்கும் போது இறுதி அடைவைக் காண்பது ஒப்பிட்டளவில் இலகுவானது.

ஒரு புதிய தேசத்தின் உருவாக்கம் போராட்டத்தின் பலத்தினால் அன்றி அனைத்துலக அரசியல் காரணிகளாலேயே நிச்சயிக்கப்படுகிறது என்பதை மீண்டும் இங்கு நினைவில் கொள்வோம்.

தீர்வை ஏற்றுக் கொண்ட பின் எதிர்காலத்தில் போராட்டத்தை எப்படித் தொடர்வது என்ற கேள்வி சிறுபிள்ளைத் தனமானது. அரசியல் என்பது நியாயத்தின் பேரால் நடப்பதல்ல. நலன்களின் பேரால் நடப்பது.

அனைத்துலக சக்திகளின் நலன்கள் தமிழர் சுயநிர்ணயத்துடன் ஒத்துப்போகும் போது அது தன் பேரிலேயே நியாயம் பெற்றுவிடும். தவிரவும், இந்தியாவுடன் மோத ஒரு நிமித்த காரணத்தை உருவாக்க முடியுமானால் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் எதிரியுடன் மோத ஒரு நிமித்த காரணத்தை உருவாக்க முடியாதா என்ன?

இந்தியா படையோடு வந்தால் இலங்கை பணிந்து போகும் என்பதே யதார்த்தம். அழுத்தத்தை பிரயோகிக்கும் தரப்போடு சமரசம் கண்டால் தன்னுடன் சமரசம் கண்ட தரப்பை பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடேயல்லாமல் சண்டித்தனம் செய்யும் தரப்பையல்ல.

இந்தியாவுடன் சிங்களத் தரப்பு மட்டும் சமரசம் கண்டு, ஈழத்தமிழது தரப்பு பகைமை கொண்டால் போராட்டம் அழிவை நோக்கும். இந்தியாவுடன் சிங்களத் தரப்பு சமரசங்கண்டு, தமிழ்த்தரப்பும் சமரசங்கண்டால் போராட்டம் பாதுகாக்கப்படும்.

போராட்டம் பாதுகாக்கப்பட்டால் சிங்களத்தரப்பு தன்னியல்பில் இந்தியாவிடம் பகைமை கொள்ளும் அப்போது தமிழர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடப்பாடு மட்டுமல்ல அதன் நலனுமாகும். இந்த அடிப்படை போராட்டத் தலைமையால் புரியப்படாமல் போனது. ஒரு துர் விளைவே.

சிங்கள இராஜதந்திரம் தன் நிஜ எதிரியையும் கருவி எதிரியையும் மோதவிட்டுக் கொண்டதில் திருப்தி கண்டது. ஈழத்தமிழர் இராஜ தந்திரம் தன் பேரப்புள்ளியை பலவீனப் புள்ளியாக்கிக்கொண்டது.

சிங்களத் தரப்பு பலவற்றை கொடுக்கத் தயாராகி எதையும் இழக்காது பாதுகாத்தது. தமிழ்த்தரப்பு சிலவற்றைப் பெற தயாராகாததால் இருந்ததையும் இழந்து போனது.

இந்தியாவுடனான யுத்தத்தால் போர் நுணுக்கங்கள் செழுமை அடைந்திருக்கலாம். ஆனால் போராட்ட இலட்சியம் பாழடைந்தது.

தொடரும்..

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar