ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 11


விவேகத்திற்கு வசப்படக்கூடியதே இராஜதந்திரம் வீரத்திற்கு அல்ல - குணா.கவியழகன்
நீதி, அநீதியை அளந்து ஏற்படுத்திக் கொள்வதல்ல அரசியல் உறவு. தேவை நலனை ஆராய்ந்து உருவாக்கிக் கொள்வதே அரசியல் உறவு.

அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் உலக அளவில் தேசிய விடுதலைப்போராட்டங்கள் அநாதைகள் ஆகின. அல்லது சாதகமாகவோ, பாதகமாகவோ முடித்து வைக்கப்பட்டன.

ஈழப்போராட்டத்திற்கும் உலக அரசியல் புறநிலை வாய்க்கவில்லை. மேலும் உள்நிலைப் பகையாளிகளையும் தேடிக்கொண்டது போராட்டம்.

இந்த இடத்தில் முரண்பாட்டை தெரிந்து வகைபிரித்துக் கையாள்வதில் மற்றொரு குழப்பம் நிகழ்ந்தது.

இந்தியாவுடன் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்டது ஒரு நட்பு முரண்பாடு, அது பகை முரண்பாடல்ல. அந்த முரண்பாட்டை பகை நிலைக்குத் தள்ளாமல் சீர்செய்து கொள்வதே போராட்டத்தின் எதிர்காலத்திற்கு இருந்த பிரதான வழி.

ஈழப்போராட்டத்தில் பாதகமாக முடிவெடுக்க முடியாத இந்தியாவின் பலவீனம் தமிழ்நாடு. தமிழ்நாடு ஈழத்திற்கு அருகே உள்ள ஒரே இன ஒரே மொழி கொண்ட மாநிலம்.

ஈழப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரித்து நின்றனர். ஆயுதப்போராட்டத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போதும் கூட தமிழ்நாட்டு மக்கள் தம் அரசை ஆதரிக்கவில்லை. ஈழப்போராட்டத்தையே ஆதரித்தனர் இந்த யதார்த்தத்தை அனுபவரீதியிலும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இந்திய அரசுடன் ஆயுதப்போராட்டத்திற்கு ஏற்பட்ட முரண்பாட்டை சீர் செய்து கொள்வதற்கு தமிழ் நாடு ஒரு பாதையும் ஒரு பேரமுமாகும். இந்திய இராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட காலத்திலும் தமிழ்நாட்டைத்தான் போராட்டத்தின் பின் தளமாக புலிகள் பயன்படுத்தி வந்தனர். மருத்துவம், வெடிமருந்து, பரப்புரை, நிதிசேகரிப்பு என்பவை குறிப்பிடக் கூடியளவு தமிழ் நாட்டிற்கு ஊடாகத்தான் நடைபெற்றது.

1991ல் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் காரணமாகியதுடன் இந்திய உறவில் போராட்டத்திற்கு நிரந்தர விரிசல் ஏற்பட்டது. சமன் செய்ய முடியாத உறவாகிற்று.

முரண்பாடு பகைநிலையை அடைந்தது. அரசியல் நலனில் மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் இந்தியா புலிகளை எதிரியாக கருத வாய்ப்பளித்தது.

இந்திய இராணுவம் ஈழத்தில் புரிந்த அநீதி, இந்தியா புலிகளை ஒடுக்க அல்லது ஓரம்கட்ட எடுத்த முயற்சி இவற்றுக்கு பழிவாங்கும் ஒரு அரசியல் கொலையாகவே ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்தது.

தவிரவும், ராஜீவ் காந்தி அரசாங்கம் பதவியில் இருந்தால் மீண்டும் ஈழப்போராட்டத்தில் தலையிடும். அத்தலையீடு போராட்டத்திற்கு பாதகமானது என்ற மனப்போக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திடம் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

தமிழ்நாட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு நிகழ்த்தப்பட்ட இவ்வரசியல் கொலை போராட்டத்தின் எதிர்காலத்திற்கு நிரந்தர எதிர்மறை விளைவைக் கொண்டு வந்தது.

ஈழப்போராட்டம் குறித்த சுதந்திரமான தீர்மானத்திற்கு இந்தியாவின் குறுக்கீடாகவும், பலவீனமாகவும் இருந்தது தமிழ்நாடு தான். மத்திய அரசு தமிழ்நாட்டு அரசியலை புறமொதுக்க முடியாது அனுசரிக்க வேண்டியிருந்தது. இந்தப்படுகொலை மூலம் தமிழ்நாட்டு மக்களே அதிருப்தி அடைந்தனர். இந்திய அரசு சுதந்திரமாக தீர்மானம் எடுப்பதற்குரிய ஒரு வெளியை இது ஏற்படுத்திற்று.

தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவான எல்லாச் சக்திகளையும் முடக்கவும் தமிழ்நாட்டை புலிகள் பயன்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்தவும் மத்திய அரசு சட்டரீதியிலும், செயல்ரீதியிலும் நடவடிக்கை எடுத்தது.

ஈழத்திற்கு வெளியே ஒரு ஆதரவுச் சக்தி ஈழப்போராட்டத்திற்கு இருந்ததென்றால் அது தமிழ்நாடு ஒன்று தான். ராஜீவ் கொலை மூலம் இந்த இந்த ஆதரவுச்சக்தியை இழந்தது மட்டுமல்ல இலங்கைக்கு வெளியே ஒரு அந்நிய அரசு முதன்முதலாக விடுதலைப்புலிகளை தடைசெய்யவும் பாதையாகிற்று.

வாய்ப்பான உலக அரசியல் புறநிலையும் இன்றி, அகநிலையில் தேசிய சிக்கலையும் கண்டு, தமிழ் நாடென்ற பின்தளத்தையும் இழந்ததோடல்லாமல் போராட்டம் எப்போதும் இலங்கையின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய புவிசார் அரசியல் ஆளுமையைக் கொண்டிருந்த இந்தியாவை பகையாளியும் ஆக்கிக் கொண்டது.

பலவீனத்தில் மேல் பலவீனம் காணும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிறேமதாசா அரசாங்கம் பலத்தின் மேல் பலம் தேடிக் கொண்டது.

மாற்று இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் அவை இந்திய இராணுவ காலத்தில் இந்திய ஆதரவோடு இயங்கின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் எழுந்த சூழலில் பிறேமதாசா அரசாங்கம் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க முன்வந்தது. இதன் மூலம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிரான அரசியலுக்கும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இராணுவத் தேவைகளுக்கும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டது.

முன்னாள் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் போராட்டத்திற்கு எதிரான அரசியலுக்கு மட்டுமல்ல இராணுவத் தேவைகளுக்கும் ஒத்துழைத்த துரோகத்தனம் மன்னிக்க முடியாததே. ஆனால், மாற்று இயக்கங்கள் தொடர்பான கையாளல்களில் விடுதலைப்புலிகளின் தூரநோக்கற்ற பார்வையும் சகிக்க முடியாததே. அது தந்த எதிர்மறை விளைவுகள் சாதாரணமானதல்ல.

இந்திய விடயத்தில் ஏற்பட்ட கொள்கைத் தவறினால் இருந்த ஆதரவுத் தளத்தையும் இழந்து போனது ஆயுதப்போராட்டம். ஆனால் பிறேமதாசா அரசாங்கம் சிங்கள அரசுக்கு எதிராகப் போரிட்ட ஆயுத அமைப்புக்களை அரவணைத்துக் கொள்வதென்ற துணிச்சலான கொள்கையினால் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிரான ஆதரவுத் தளத்தை தேடிக்கொண்டது.

தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar