ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 12


சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும் - குணா.கவியழகன்
1991ன் பின்னரான மிகச்சிக்கலான ஆயுதப்போராட்டச் சூழலில் சிங்கள அரசாங்கம் பல வெற்றிகளைக் கண்டது. வவுனியா மன்னார், முல்லைத்தீவுக் கரையோரங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வந்தன.

யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதைகள் கைப்பற்றப்பட்டு யாழ் குடாநாடு இராணுவ பொருளாதார முற்றுகைக்குள்ளானது. இப்பின்னணியில் யாழ்ப்பாணம் முழுமையாக கைப்பற்றப் படுவதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருந்தது.

யுத்த ரீதியாக ஒப்பு நோக்கினால் போரை எதிர் கொள்வதற்கான வளப்பற்றாக்குறைக்குள் புலிகள் இயக்கம் சிக்கிக் கொண்டது.

தமிழ்நாடு என்னும் பின்தளம் அறுந்து போராட்டம் ஈழத்திற்குள் முற்றுகைப்பட, வடக்கின் எல்லைகளைக் கைப்பற்றிய இராணுவம் வடக்கை முற்றுகையிட்டு, மேலும் குடாநாட்டின் தரைவழிப் பாதைகளை அடைத்து இறுகிய முற்றுகைக்கு ஆளாகிற்று. வடக்கு பொருளாதார முற்றுகையால் திணறிக்கொண்டுமிருந்தது.

அரசு ஏவப்போகும் போர் நடவடிக்கையை மதிப்பீடு செய்த விடுதலைப்புலிகள் தம் இயலுமையுடன் கணக்கிட்டு மாற்றுவழியின்றி இப்போரை எதிர்கொள்ள இயலாதென்பதை தெரிந்து கொண்டனர். எதிர் நிலையாளரின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே அவர்களின் ஒரே தெரிவாகிற்று.

1992ல் சிறிலங்கா இராணுவத்தலைவர்கள் போர் ஏவப்படுவதற்கு முன்னதான சூழலை இறுதி (உறுதி) செய்வதற்காக தீவுப்பகுதியை பார்வையிட வந்தபோது துல்லியமான வேவு கொண்ட தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் அவர்களைக் கொன்றனர். ஆனால் வெகுநாள் தாக்குப்பிடிக்க அது போதுமானது அல்ல. எனவே அரசியலில் நிகழ்ச்சியை குழப்பும் பொருட்டு பிறேமதாசாவை படுகொலை செய்யும் தீர்மானத்தை விடுதலைப்புலிகள் எடுத்தனர்.

இப்பின்னணியில் 1994 வந்த பொதுத்தேர்தலில் ஜ.தே.கவின் தலைமைத்துவம் பலவீனப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக சந்திரிக்கா ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு சமாதானத்தை மையக்கருப்பொருளாக்கி ஆட்சியைக் கைப்பற்றினார்.

புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது. நாடு முழுவதும் சந்திரிக்காவின் சமாதானம் பெரும் கவர்ச்சியை உருவாக்கிற்று.

சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய போதும் அதிபராக எதிர்க்கட்சியை சார்ந்தவரே இருந்தார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதே சந்திரிக்கா நாடிய சமாதானத்தின் உடனடி உள்நோக்கம் எனலாம்.

தான் அமைத்த அரசாங்க காலத்தில் புலிகள் போர் வெற்றியெதனையும் பெற்றால் அதிபர் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரும். விடுதலைப்புலிகள் மாவீரர் நாளையொட்டி பெரும் தாக்குதலைத் செய்வது வழமை. ஆதலால் அத்தாக்குதலை நிறுத்த வேண்டிய தேவை சந்திரிக்காவிற்கு உடனடித்தேவையாகியது.

தவிரவும் சமாதானத்தை கவர்ச்சிப் பொருளாக்குவதே அவரால் அப்போதைக்கு முன்னெடுக்கக்கூடிய அரசியலாகவும் இருந்தது. இதைவிடவும் சிறுபான்மையினர் ஆதரவின்றி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதும் மிகக்கடினமானது. இக்காரணங்களுக்காக விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பும் சமாதானமும் சந்திரிக்காவிற்கு தேவைப்பட்டது. மறுவளத்தில் சந்திரிக்காவைப் பலவீனமான தலைவராகக் கணக்கிட்ட விடுதலைப்புலிகள் அவரைப் பதவிக்கு கொண்டுவர ஒத்துழைத்தனர்.

அப்போதைய அனைத்துலக அரசியல் நிலைமையைக் கணக்கிட்டால், மேற்கு நாடுகள் இலங்கையில் அமைதி உருவாக வேண்டும் என்ற நலனை கொண்டிருக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

பனிப்போரின் பின்னான காலத்தில் புலிகள் மேற்கால் ஆதரவளிக்கப்படாவிடினும் இடையூறு செய்யப்படாது விடப்பட்டனர். காரணம் பனிப்போரின் பின்னான மேற்குத் தலைமை கொண்ட உலக ஒழுங்கில் இந்தியா கடைப்பிடிக்க உள்ள அரசியல் கொள்கை தெளிவாகும் வரை புலிகள் அமைப்பிற்கு இடையூறு விளைவிக்க மேற்கு விரும்பவில்லை எனலாம்.

இந்தியாவில் நரசிம்மராவ் அரசாங்கம் தனது அரசியல் பொருளாதாரக் கொள்கையை மேற்கின் நட்பு நோக்கித் திருப்புவதற்கான அடியை எடுத்து வைத்தது. அதிலிருந்து மெல்ல புதிய உலகப்போக்கைப் புரிந்து கொண்டு இந்தியா மேற்குடன் ஒத்துழைக்கும் அரசியற் கொள்கையைக் கடைப்பிடிப்பது தெளிவாகிற்று. இந்நிலை உருவானதும் புலிகளின் தேவை சிறிதளவும் அப்போது மேற்கிற்கு இல்லாது போயிற்று எனலாம்.

இதைவிட முக்கியமாக சீனாவின் எழுச்சியும், கொங்கொங் மீண்டும் சீனாவின் கைகளுக்கு செல்ல இருந்தாலும் கொங்கொங்கிற்கு மாற்றீடாக இப்பிராந்தியத்தில் ஒரு பொருத்தமான விநியோகத் தளமாக இலங்கையையே மேற்கு அடையாளம் கண்டிருந்தது. மேலும் வரவிருக்கும் சீனாவின் வளர்ச்சியை முடக்கும் நிகழ்ச்சி நிரலில் தென்னாசியப் பிராந்தியம் அதிமுக்கியத்துவம் மிக்கதாயிற்று. எனவே இலங்கையில் யுத்தம் முடித்து வைக்கப்பட்டு அமைதியான இலங்கையில் மேற்கு சார்பு அரசாங்கம் உருவாக்கப்படும் தேவை மேற்குலகிற்கு அப்போதே உருவாகிற்று.

உருவாகும் பாதகமான அனைத்துலகப் புறநிலையை விடுதலைப்புலிகள் ஆரம்பத்திலேயே கணக்கிடத் தவறினர். போராட்டத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான அரசியற் கொள்கையை பின்பற்றத் தவறினர் என்றே தோன்றுகின்றது.

மேற்கு போராட்டத்திற்கு எதிர் நிலையில் தன் ஆதரவை வழங்கப்போகிறது என்பதும் அதனால் எழக்கூடிய கடினமான சூழலையும் கணக்கிடத் தவறினர். கணக்கிட்டிருந்தால் அதிபர் தேர்தலை விடுதலைப்புலிகள் வேறு விதமாக கையாண்டிருக்க முடியும்.

நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய சந்திரிக்காவால் அதிபர் பதவியை கைப்பற்ற முடியாமல் போயிருந்தால் தெற்கில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியும், நிறைவேற்று அதிபராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் இருக்கும் பட்சத்தில் இலங்கை அரசியலே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி சிங்களத் தரப்பை அகமோதலுக்கு உட்படுத்தி இருக்கும். இது போராட்டத்திற்கு நல்வாய்ப்புக்களைப் பெற்றுத்தந்திருக்கும்.

போராட்டத்தைப் பாதுகாக்கவும் முன்கொண்டு செல்லவும் வாய்ப்பான வாசல் உருவாகும் ஏதுநிலை இருந்தது. நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு புலிகளின் ஒத்துழைப்பு சமரசம் இன்றியமையாததாக இருந்திருக்கும். புலிகள் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இராணுவ பொருளாதார நெருக்குவாரங்களை குருதி சிந்தாமல் விடுவித்திருக்கலாம்.

ஆனால் விடுதலைப்புலிகளின் எதிர்மறையான கொள்கைத் தீர்மானத்தினால் சந்திரிக்கா அதிபராகப் பதவிக்கு வந்தார். 17 ஆண்டுகளின் பின் ஜ.தே.கவிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியைப் பாதுகாக்க ஒரு கவர்ச்சி மிக்க அரசிலைக் காட்சிப்படுத்த வேண்டிய தேவை சந்திரிக்காவிற்கு இருந்தது.

ஆனால் பொருளாதார நிலைமைகள் கவர்ச்சியான அரசியலுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இங்கு சந்திரிக்காவிடம் இருந்த தெரிவு சிங்கள மக்களின் கவனத்தை யுத்தத்தின் பக்கம் திருப்புவதும் யுத்தத்தின் வெற்றிகளை அரசியல் கவர்ச்சியாக்குவதுமே ஆகும். எனவே அரசாங்கத்தின் முழுப்பலப்பிரயோகமும் போராட்டத்திற்கு எதிராக திரும்ப இது வழிகோலிற்று யுத்தம் மிகவும் மூர்க்கமாக மாறிற்று.

சந்திரிக்கா யுத்தத்தை மக்கள் மயப்படுத்தினார். வடக்கைக் கைப்பற்றுவதே அவரின் கவர்ச்சி மிக்க அரசியல் முன்னெடுப்பு. அதற்காக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் வெற்றியும் கண்டார். போராட்டத்தில் கேந்திர மையம் ஒன்று இழக்கப்பட்டு பெரும் பின்னடைவைப் புலிகள் சந்தித்தனர்.

அனைத்துலகப் புறநிலை புலிகளுக்கு சாதகமில்லாத சூழலைச் சரிவரப்புரிந்து கொண்ட சந்திரிக்கா மேற்குலகின் ஆதரவையும் அனுசரணையையும் யுத்தத்திற்காக பெற்றுக்கொண்டார். மேற்கு நாடுகள் புலிகளைத் தடைசெய்தன. இராணுவ ரீதியாகவும் அரசுடன் கைகோர்த்து நின்றன. வன்னியில் முடக்கப்பட்ட புலிகள் மிகஇக்கட்டான போரை சந்திக்க வேண்டியாயிற்று.

விடுதலைப்போர் கண்ட தோல்வியின் திருப்புமுனைப் புள்ளி இங்கிருந்து தான் உருவாகியது. இதை முன்னுணர்ந்து தீர்மானம் எடுப்பதில் நிகழ்ந்த தவறு பெரும் அனர்த்தங்களுக்கு வழிதிறந்துவிட்டது.

தொடரும்..

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்,
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar