வன்னியில் போர் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்தது. யாழ் குடாநாட்டு இடப்பெயர்வால் மக்கள் பெரும் அவல வாழ்வை எதிர் கொண்டிருந்தனர். வன்னியிலும் தொடர் இராணுவ நடவடிக்கைகளால் மக்கள் மீண்டும் மீண்டும் நிலைகொள்ள முடியாத இடப்பெயர்வுக்கு ஆளாகி அவல வாழ்வுச் சூழலில் அகப்பட்டனர்.
அனைத்துலக ஆதரவுடன் சந்திரிக்கா மூர்க்கமாக யுத்தத்தை முன்னெடுத்தார். தனித்து விடப்பபட்ட புலிகள் இயக்கம் அரசியல், இராணுவ பொருளாதார ரீதியாக தொடர் பின்னடைவைச் சந்தித்து வந்தது. சிறிலங்கா அரசை அக மோதலுக்குள் சிக்க வைப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டு சந்திரிக்காவை பலவீனமான தலைவராக கருதி எடுத்த அரசியல் தீர்மானத்தினால் இந்நிலை உருவாகிற்று.
வரலாற்றுச் சிக்கலான நெருக்கடிக்குள் போராட்டம் அகப்பட்ட போதும் விடுதலைப்புலிகளின் தலைமை தனது செயல் மூர்க்கத்தாலும், போர் வல்லமையாலும், யுத்தத்திறன் ஆற்றலாலும் வன்னிப்போரின் இறுதித்தருணத்தில் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப்பாதை திறக்கும் அரசின் போர் நடவடிக்கை ஒரு கனவு போல் சிதைந்தது.
இதற்காக ஈழத்தமிழர் வன்னியில் கொடுத்த விலை சாதாரணமானதல்ல. ஒரு மக்கள் படையை உருவாக்கி குடிமக்களை ஆயுதம் ஏந்தி களத்தில் போரிடவைத்து அரசின் போர் நிகழ்ச்சி நிரலைத் தவிடுபொடியாக்க முடிந்தது புலிகளால். அரசியல் தீர்மானத்தில் ஏற்பட்ட தவறினால் கண்ட பின்னடைவை தம் செயல் ஓர்மத்தால் ஓரளவு நிவர்த்தி செய்து கொண்டனர் புலிகள்.
இந்த யுத்தத்தின் தொடர்ச்சியில் வடக்கின் முக்கியத்துவம் மிக்க இராணுவக் கேந்திரமான ஆனையிறவுக் கூட்டுத்தளத்தையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். இலகுவில் கைப்பற்ற முடியாத, நிலைகொள்பவருக்கே சாதகமான புவியியல் அம்சத்தைக் கொண்டிருந்த ஆனையிறவுத் தளத்தைப் புலிகள் தமது சிறந்த போர் தந்திரத்தாலும், அசாத்திய திறனாற்றலினாலும் கைப்பற்றிக் கொண்டமை ஒரு யுத்த சாகசமே. புலிகளின் சந்தேகத்திற்கிடமற்ற யுத்த ஆளுமையே.
போரின் இறுதிக்கட்ட நெருக்கடிக்குள் இருப்பதாக நம்பப்பட்ட புலிகள் மிகக்குறுகிய காலத்திற்குள் நிகழ்த்திய அபாரப் போர் வெற்றி அரசைக் கிலிகொள்ள வைத்தது. தவிரவும் யாழ்ப்பாணத்திற்கான பிரதான நுழைவாயிலான ஆனையிறவும் மற்றும் தாளையடி, பூநகரி, சங்குப்பிட்டி ஆகிய பிற நுழைவாயில்களையும் புலிகள் கைப்பற்றியதோடு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த நாற்பதாயிரம் வரையிலான இராணுவத்தினரின் இருப்பு நிச்சயமற்றதாகியது. யாழ்ப்பாணம் கைமாறுவதும் உறுதியென்று எண்ணியது அரசு. புலிகளின் போர் மூர்க்கம் அரச தரப்பை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியது.
தென்திசையில் சிங்கள மக்களின் குடியிருப்பினைப் பாதுகாக்கும் பொருட்டு மதவாச்சியில் முன்னேற்பாடான காவலரண் தொடரை அமைக்க அரசு முடிவு செய்தது. இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்கவும் சம்மதிக்காத பட்சத்தில் திருகோணமலையை இந்தியாவிற்கு கையளிப்பதை பேரமாகக் கொண்டு உதவிகோருவது என்றும் கூட அரசதரப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் உண்டு. இந்தளவிற்கு அரசு புலிகள் தொடுத்த போரில் அச்சம் கொண்டிருந்தது. இத்தருணத்தில் தான் சிறிலங்கா அரசு புலிகளுடன் இரகசிய உடன்பாடு காணவேண்டி சில முயற்சிகளை எடுத்தது.
ஜரோப்பாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளோடு அரசு தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இராணுவத்தினரைத் தாங்கள் பின்வாங்கிக் கொள்வதாகவும் இதற்கான அனுமதியையும் உத்தரவாதத்தையும் கேட்டது. களத்தில் போர் தீவிரம் பெற்றிருந்த சமயம் இத்தொடர்பாடல் நிகழ்ந்தது. இச்செய்தி புலிகளின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது அவசரமாக.
இங்கு விளங்க வேண்டியது என்னவென்றால் அரசாங்கம் யாழ்ப்பாண இராணுவத்தினரின் உயிர்களில் அக்கறை கொண்டு புலிகளோடு பின்வாங்கும் உரையாடலுக்கு வரவில்லை. தனக்கு ஏற்படப்போகும் அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே இத்தகைய உரையாடலுக்கு வந்தது.
புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் தொடுத்தால் பெருமளவு இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டே தீருவார். இச்சிறைப்பிடிப்பு பெரும் அரசியற் குழப்பத்தை தெற்கில் ஏற்படுத்தும் தொடர் யுத்தத்தில் காணாமல் போனதாக கணக்கிடப்பட்ட இராணுவத்தினரின் உறவினர்கள் கொழும்பின் தெருக்களில் இறங்குவர் இதனை எதிர்க்கட்சி வாய்ப்பான தருணமாக பயன்படுத்திக் கொள்ளும். புலிகள் சிறைப்பிடித்த இராணுவத்தை பேரப்புள்ளியாக பயன்படுத்தினால் அரசு ஏற்கவும் மறுக்கவும் இயலாத நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இதற்கு மாறாக பிற (மிகுதி) இராணுவத்தை மீட்டுக் கொண்டால் ஒரு தந்திரோபாயப் பின்வாங்கலை அரசு செய்து கொண்டதாக வியாக்கியானம் செய்து கொள்ளலாம். இந்த இராணுவத்தைக் கொண்டு பிறிதொரு பிரதேசத்தில் குறிப்பிடக்கூடிய இராணுவ வெற்றியை பெற்று அதனை பெரிது படுத்தி அரசியலாக்கவும் வாய்ப்புண்டு. இந்த நோக்கம் கருதியே அரசு இந்த உரையாடலுக்கு வந்தது.
இங்கு சந்திரிக்கா தன் அரசியலைப் பாதுகாக்க வேண்டி வந்தாரே அல்லாமல் இராணுவத்தினரின் உயிர்களைப் பாதுகாக்க அல்ல. இந்த உள்நோக்கத்தைப் புலிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. இதனால் ஏற்பட்ட தீர்மானத் தவறு பெரும் பின்னடைவுக்கு வழி திறந்தது.
சந்திரிக்காவின் இந்த இரகசிய வேண்டுகோளுக்கு, இராணுவத்தினர் தமது படைத்தளபாடங்கள் அனைத்தையும் விட்டுச் செல்ல வேண்டும் எனப் புலிகள் பதிலளித்தனர். அதாவது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் என்பதாக நிபந்தனை விதித்தனர். இதற்கு சந்திரிக்கா சம்மதித்தால் அது பின்னடைவுக்குச் சமமானது. சரணடைவு என்ற கருப்பொருள் தரக்கூடிய விளைவு இராணுவத்தோல்வி என்பதைவிடவும் அரசியல் அவமானமாகவே அர்த்தப்படும். இதற்கு சந்திரிக் சம்மதிக்க ஒரு போதும் வாய்ப்பில்லை. ஏனேனில் அவர் காப்பாற்ற நினைத்த தன் அரசியல் இதற்கு சம்மதித்தால் அரசியல் தற்கொலையாக முடியுமே அன்றி வேறெதுவாகவுமல்ல.
விடுதலைப்புலிகள் இந்த அரசியல் கணக்கை சரிவரப்புரிந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு விவேகமற்ற நிபந்தனையை விதித்திருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை உண்மையாக விடுதலைப்புலிகளால் அரசாங்கம் பயந்தது போல் யாழ்ப்பாணத்தை சுலபமாகக் கைப்பற்றக்கூடிய இயலுமை இருந்திருக்குமென்றால் புலிகளுக்கு பல வாய்ப்பான கதவுகளை அது திறந்திருக்ககூடும். ஆனால் விடுதலைப்புலிகளின் அக நிலைமை அப்படியும் இருக்கவில்லை.
தொடர் போர் நடவடிக்கைகளால் புலிகள் வெற்றிமேல் வெற்றியைக் குவித்துக் கொண்டாலும் அதனால் இழக்கப்பட்ட ஆளணியை நிவர்த்தி செய்ய உடனடியாக புலிகளால் இயலவில்லை. ஆளணி வளப்பற்றாக்குறை மிகப்பாரதூரமாக இருந்தது. சிறு அவகாசம் இராணுவத்தினருக்கு கொடுத்தாலும் திருப்பித் தாக்கும் நிலையை இராணுவம் அடைந்தால் கைப்பற்றிய இடத்தை தக்கவைப்பதற்கே புலிகளிடம் ஆளணி வளம் இருக்கவில்லை.
தவிரவும் இராணுவத்திற்கு தப்பியோடுவதற்கு ஒரு தரைவழிப் பாதையும் இருக்கவில்லை. பின்வாங்க வழியில்லாத இராணுவத்தினர் இறுதிவரை போரிடுவதை உயிர்பிழைப்பதற்கான தெரிவாகக் கொண்டால் அந்த யுத்தம் மூர்க்கமாக இருக்கும். அதை எதிர்கொள்வதோ, அதில் வெற்றியைப் பெறுவதோ கூட அப்போதைய நிலைமையில் சாத்தியமும் இல்லை.
இதற்கான புற நிலைமையாக அரசு அனைத்துலக உதவியை நாடி நின்றது. இந்தியாவிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்வதில் தீவிர முயற்சி எடுத்தது அரசு. இந்தியா யாழ்ப்பாணம் புலிகள் கையில் விழுவதை விரும்பப்போவதும் இல்லை.
அரசு நாடிய இரகசிய உடன்பாட்டின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டிருந்தாலோ, அல்லது தமது அக நிலைமையை கருத்தில் எடுத்திருந்தாலோ, அல்ல புற அரசியல் நிலைமையை கணித்திருந்தாலோ புலிகள் இப்படியோரு நிபந்தனையை விதிக்காமல் பின்வாங்கலுக்கு இராணுவத்தை அனுமதித்திருக்க முடியும்.
தப்பான அரசியல் கணக்கால் எடுத்த தீர்மானத்தினால் எல்லாமே தலைகீழாகிப் போனது. இராணுவத்தினரின் உயிர்காக்க வேண்டி ஆயுதங்களை அரசு விட்டுச்செல்ல உடன்படும் என எண்ணியிருந்தால் அவ் அரசியல் கணக்கின் தவறு சாதாரணமானதல்ல. இதனால் யாழ்ப்பாணம் என்ற ஈழப்போராட்டத்தின் அரசியல் கேந்திரம் அன்று கைதவறிப் போனது.
மட்டுமல்ல புலிகளால் கைப்பற்றப்பட்ட யாழ் தென்மராட்சிப் பிரதேசத்தை இராணுவம் சுலபமாக மீளக்கைப்பற்றிக் கொண்டது. இது புலிகளிடம் இருந்த ஆளணிவளம் பற்றாக்குறையை ஊர்ஜிதம் செய்கிறது. தவிரவும் வடக்கின் இராணுவக் கேந்திரத்தை (ஆனையிறவு) தக்க வைப்பதற்காக புலிகள் தமது படைவளத்தை பளைப்பகுதியில் ஒருமுகப்படுத்த வேண்டியாயிற்று. இது புலிகளை பிற போர் நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாதவாறு வளத்தை உறிஞ்சும் நிலமாயிற்று.
பின்நாளில் உருவாகிய சமாதான முயற்சியின் போது யாழ்ப்பாணம் கைவசம் இல்லாத தமது நிலை பலவீனமானதென்றும் புலிகள் எண்ணத் தலைப்பட்டனர். யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின் பேச்சு வார்த்தையை முன் கொண்டு செல்ல முடியும் என்றும் எண்ணினர். சமாதானம் முறிந்து போனதற்கு இதுவும் முக்கிய காரணமாகியது. ஆக போரின் இறுதித் தோல்விக்கு அன்று அரசின் இரகசிய உடன்பாட்டை புரிந்து கொண்டு தீர்மானம் எடுக்காமையும் காரணம் ஆகிற்று எனலாம்.
தொடரும்..(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar