அறிவையும் உழைப்பையும் விலையாகக் கேட்கிறது மூன்றாம் கட்டம் - குணா.கவியழகன்
முடிவுரை:
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் கடந்த நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த மாபெரும் ஆயுதப்போராட்டம்.
தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்னுதாரணங்களைக் கொடுத்த போராட்டம். தேசிய விடுதலைக்கான ஆயுதப் போருக்கு புதிய போர் உத்திகளை, நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்த போராட்டம்.
அரசியலில் பேரப்பலம் இல்லாதவிடத்து போர் வல்லமையை வளர்த்து பேரத்தை உருவாக்கிட முடியும் என்ற ஒரு நம்பிக்கையை கொடுத்தது ஈழப்போராட்டம் தான்.
போராட்டத்திற்கு எழும் அரசியல் இடையூறுகளை போர் வலிமையாலும் அதற்கான அர்ப்பணிப்புக்களாலும் கடந்திட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதும் இப்போராட்டந்தான்.
ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை போர்வல்லமையினால் அனைத்துலக பெறுமானத்திற்குக் கொண்டுவந்திட முடியும் என்ற யதார்த்தத்தை உருவாக்கியதும் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தான்.
அனைத்துலக அரசியல், விடுதலைக்கு எதிர்க்காரணியாகின்றபோது அது சமன் செய்யப்படாது விடின் அதன் எல்லா இயலுமைகளும் இரக்கமற்று முறியடிக்கப்பட்டுவிடும் என்பதை நவீன வரலாற்றில் கற்றுத் தந்த போராட்டமாகவும் இது அமைந்துவிட்டது.
இது இன்றைய உலகில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற கேள்விக்கு விடைகாண்பதற்கான மறு ஆய்வுக்கு உட்பட்டிருக்கிறது.
தேசிய அரசுகள் உருவாகிய நவீன வரலாற்றில் ஒரு புதிய தேசம் உருவாவது அனைத்துலக அரசியல் காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதேயன்றி உள்நாட்டு அரசியற் காரணிகளால் அல்ல.
அனைத்துலக அரசியற் காரணிகள் உலகின் சக்திமிக்க நாடுகளின் நலன்களால் உருவாகும் உறவுகளினால் மலர்பவை. இவ்வுறவே உலகின் அரசியற் போக்கைத் தீர்மானிக்கிறது.
கொலணித்துவ நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற உலகின் எல்லா அரசுகளினதும் இனப்பரம்பல், தேச எல்லை என்பவை உலகை ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டிருந்த அரசுகளின் எதிர்கால நலன்களுக்கமைவாகவே உருவாக்கப்பட்டவை. இவற்றின் எல்லைகள் இனம், மொழி, கலாச்சாரம் என்ற எந்தவொரு அடிப்படையிலும் இயல்பாக முகிழந்தவையல்ல.
தன்னியல்பில் முகிழாததும் ஆதிக்க அரசுகளின் நலன்களுக்கமைவாய் வகுக்கப்பட்டதுமான இத்தேசிய அரசுகளின் எல்லைக்குள் தேசியப் பிணக்குகள் இருப்பது தவிர்க்க இயலாததே.
தேசிய இனங்கள் அழிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருவதற்கான மூலகாரணி இத்தேசிய அரசுகளின் எல்லைகள் தன்னியல்பானவை அல்ல என்பதே.
உள்நாட்டு அரசியற் சூழலுக்கேற்ப இவைகள் நசுக்கப்படுவதன் விகித அளவீடுகள் மாறுபடலாம். பிணக்குகளின் தன்மையும் வேறுபடலாம். ஆனால் பிணக்குகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஒடுக்கப்படும் இனம், அழிக்கப்பட்டுவரும் இனம் தன் விடுதலைக்காக போராடுவது இயல்பான பிரக்ஞையே. ஆயினும் தனித்துவமான ஒரு தேசத்தை உருவாக்குவது என்பது, உலக அரசியல் போக்கில் மாற்றம் நிகழ்ந்து, வல்லாண்மை நாடுகளின் நலன்களில் அத்தேசம் உருவாவதற்குரிய தேவை எழுந்தாலேயொழிய தேசிய விடுதலை சாத்தியமானதல்ல.
உருவாகிய புதிய தேசங்கள் எல்லாமே, மாற்றமுறும் உலக உறவுகளின் குழந்தைகளாய்த்தான் பிறந்தன. அவற்றின் உள்ளார்ந்த முயற்சிகள், இயலுமைகள் மட்டும் விடுதலையை ஒரு போதும் சாத்தியப்படுத்தியிருக்கவே இல்லை.
பனிப்போர் உலகப்போக்கின் முடிவோடு செங்கடலின் முக்கியத்துவம் கருதி எதியோப்பியாவிடம் இருந்து பிரித்து எரித்திரியா தனி நாடாக்கப்பட்டது.
சீனா போட்டித் தலைமைத்துவமாக தலையெடுத்துவரும் நிலையில், மேற்குலகினுடைய கீழைத்தேசப் பங்காளியான அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக் கருதி, பெரும் முஸ்லீம் நாடான இந்தோனேசியாவிடம் இருந்து கிழக்குதீமோர் பிரித்து தனிநாடாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் தடுப்பரணாக்கப்பட்டது.
மேற்கின் போட்டித் தலைமைத்துவ நாடுகள், ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து ரஷ்யாவின் இராணுவ வலிமையை பயன்படுத்தி ஐரோப்பாவை அச்சுறுத்தக்கூடாது என்பதற்காக ஐரோப்பாவின தடுப்பரணாக கொசோவோ தனிநாடாக்கப்பட்டது. இவை கடந்த நூற்றாண்டில் இறுதி உதாரணங்கள்.
இவை எவற்றினதும் விடுதலை அந்நாடுகளின் உள்நாட்டுக் காரணிகளாலோ, போராட்ட அமைப்பின் இயலுமைகளாலோ தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக உலகப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களின் தவிர்க்கவியலாத பிறப்பாகவே உருவாகின.
ஒடுக்கப்படும் இனம் தன் உரிமையை நிலைநாட்ட அரசியலில் வேறு அரசியல் பேரம் இல்லாதவிடத்து வன்முறையைத் தெரிகிறது. வன்முறை ஒரு அரசியல் வடிவமாகிறது. இவ்வடிவம் பேரத்தை உருவாக்குவதற்கான மார்க்கமாகவே கொள்ளப்படவேண்டும்.
உள்நாட்டு அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு உருவாக்கப்படும் பேரத்தின் அளவுக்கேற்ப அரசியல் அடைவுகளை அதாவது அரசியல் வெற்றிகளை போராட்டம் அடைந்து செல்ல வேண்டும். ஆனால் எந்தவொரு அடைவும் விடுதலையை நோக்கிய படிநிலையாகவே அமைய வேண்டும். இவ் அடைவுகள் விடுதலையை அடைவதற்கான மூலோபாயத்தின் பகுதி ரீதியான வெற்றிகளை கண்டு செல்ல வேண்டும்.
உலகப்போக்கில் விடுதலையை சாத்தியப்படுத்தக் கூடிய தருணம் வாய்க்கும் வரை தேசிய இருப்பை பலப்படுத்தவும், போராட்ட பிரக்ஞையை தக்க வைக்கவும், பேரப் பலத்தை மேம்படுத்தவுங்கூடிய அடைவுகள் முன்னோக்கிய பாதையே.
இவ்வாறல்லாமல் சொந்தப் பலத்தினால் மட்டும் தேசிய விடுதலையை அடையும் இலட்சியத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தால் நீர்த்துப்போகும் கதிக்கு ஆளாகும். அல்லது, உலகப்போக்கின் பாதகமான மாற்றத்தினால் போராட்டமே அழிவுக்குள்ளாகும் நிலைக்கு ஆளாகலாம். காரணம், விடுதலையை சாத்தியப்படுத்தக்கூடிய உலகப் போக்கின் மாற்றம் என்பது கால நிர்ணயமற்ற நீட்சிக்குரியது.
ஈழவிடுதலைப் போராட்டம் அக அரசியல் காரணிகளால் ஆயுதப்போராட்டமாக பரிணாமம் பெற்ற ஒன்று. ஆயினும் மிகச்சிறந்த போர்க் கட்டமைப்புடன் போரியல் பலம் பெற்று, அசாத்திய போர் வளர்ச்சி பெற்றபோதும் அது போராட்டத்தின் வளர்ச்சிப் படிகளை நோக்கத் தவறிற்று.
போரின் முன்னேற்றம், வளர்ச்சி மூலம் விடுதலையை சாத்தியப்படுத்தி தேசிய அரசை உருவாக்கிவிட முடியும் என்ற பிழையான கருத்தாக்கம் தமிழர்களிடையே வளர்ந்ததனால் போரின் வளர்ச்சி போராட்டத்தின் வளர்ச்சியாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
முப்பதாண்டுகளுக்கும் மேலான போராட்டத்தில் போராட்டம் முன்னோக்கிய வெற்றிகளைக் காண வாய்ப்பு வாய்த்தபோதும் போரின் வளர்ச்சி மூலமே இறுதி வெற்றியை காணமுடியும் என்ற தவறான கொள்கையினால் வாய்ப்புக்கள் கை தவறிப்போயின.
போருக்கான மனோநிலை சிதைவடையும், போரை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போகும், போரற்ற காலம் விரையமான காலமாகும் என்ற அச்சங்கள் போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய படிநிலை வெற்றிகளை தவிர்க்க வைத்தன. அப் படிநிலைகளில் ஏறி முன்னேறுவதற்கான தீர்மானத்திற்கு துணிச்சலற்றும் போனது.
பல தடவைகள் தவறான இக்கொள்கைத் தீர்மானத்தினால் போராட்டம் மோசமாகப் பின்னோக்கிய போதும் போரை முன்னேற்றி அது போராட்டத்தின் முன்னேற்றமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இத்தகைய சரிவுகள் தோல்விகளாக புரிந்து கொள்ளப்படாமலும் போயின.
கொள்கைக் கோளாறுகள் காரணமாக ஆயுதப்போராட்டத்திற்கு அவ்வப்போது வாய்த்த வளத்துணைகளை கருவிகளாக்கிக் கொண்டு முன்னேற முடியவில்லை. தெற்கின் அரசியல் முரண், இலங்கை - இந்திய முரண், அனைத்துலக தலையீடு ஆகியன இதற்கான உதாரணங்கள். மாறாக போராட்டந்தான் பலமுறை பலருக்கு கருவியாகி வலுவிழந்துபோனது. விடுதலைக் கூட்டணிக்கு, இந்தியாவிற்கு, பிறேமதாஸாவிற்கு, மேற்குலகிற்கு என இது தொடர்ந்தது.
சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய சிறிய பலத்தைக் கூட போராட்டத்தின் தவறான கொள்கைக் கண்ணோட்டம் தன் பலவீனமாக்கிக் கொண்டது. தமிழ் மிதவாதிகள், மாற்று இயக்கங்கள், இஸ்லாமியமக்கள் தொடர்பான விடயத்தின் கொள்கைத் தளம்பல்கள் சொந்தப் பலவீனங்களாகின. மட்டுமல்ல எதிரிக்குப் பலம் சேர்த்தும் கொடுத்தன.
ஆயுதப் போராட்டம் எப்போதும் போராட்ட அமைப்பினுடையதாகவே இருந்து வந்தது. மக்கள் போராட்டத்தின் பங்காளர்களாக்கப்படவில்லை. மக்கள் போராட்டத்தின் வளத்துணையாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டார்களேயொழிய பங்காளர்களாக அல்ல. இதனால் தேசியப் போராட்டத்திற்குரிய அடிப்படை பெறுமானமான தேசியப் பிரக்ஞை முழுமையடையவில்லை.
ஆயுதப்போராட்டத்தின் திறமையான போர்க் கொள்கை போரில் வெற்றிகளைத் தந்தன. ஆனால் தவறான அரசியல் கொள்கைகளின் விளைவால் போர் வெற்றிகள் அரசியல் வெற்றிகளைத் தரத்தவறின.
ஈழவிடுதலைக்குரிய அனைத்துலக புறநிலை இன்று வரை வாய்க்கவில்லை. எனினும் சுயநிர்ணயத்தை நோக்கிய தாயகம், தேசியம், அகநிலைச் சுயநிர்ணயம் என்பவற்றை அடைவதற்குரிய அனைத்துலகப் புறநிலையில் வாய்ப்புவெளி அவ்வப்போது வாய்த்தபோதும் கொள்கைத் தளம்பல்களால் அவை அடையப்படவில்லை. அல்லது அவ்வழியிலான முயற்சித்தல் புறந்தள்ளப்பட்டது.
அரசியல் அர்த்தத்தில் முன்னேறி பலம் பெற்று விடுதலைக்கு காத்திருக்க வேண்டிய போராட்டம் பாரதூரமாகப் பலவீனப்பட்டு இறுதியில் சுய அழிவுக்கு ஆளானது.
நீண்டகால அரசியல் கண்ணோட்டத்தோடு போராட்டம் தன் அரசியல் நண்பன் யார்? பகைவன் யார்? என அடையாளம் கண்டு, தனக்கான வெளியுறவுக் கொள்கையினை வகுத்து முன்னேறத் தவறியது. இந்தக் கொள்கைக் குழப்பமே இருந்த நட்புச் சக்திகளை பகைச் சக்திகளாக்கி இறுதி அழிவுப்பாதை வரை போராட்டத்தைக் கொண்டுபோனது.
ஒரு சிறிய இனத்தின்மீது அனைத்துலக வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து தம் மறைகரங்களால் போரிட்டு அழிய வைத்ததும் இதனாலேயே. சிங்கள அரசு உலகின் போர்த்தர்மங்களை மீறியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் குரூரமாக தாக்கியும் இனப்படுகொலை புரிந்து போராட்டத்தை நசுக்க முடிந்ததும் இதனாலேயே.
மறுவளத்தில், ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்கும் மேல் தனக்கு எதிராக எழுந்த எல்லா வாய்ப்பற்ற சூழலையும் எதிர்த்துப் போராடி, தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து நின்றமை வியப்புக்குரியதே. துணிச்சல், அர்ப்பணிப்பு, விலைபோகாத நேர்மை இவற்றின் மூலம் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து போரில் முன்னேறி வந்தனர்.
கடந்த நூற்றாண்டின் இறுதிவரை, அரசியல் பாதகமான சூழல் குறுக்கீடு செய்யினும் போரில் பலம் பெற்று முன்னேறுவதன்மூலம் அப்பாதகமான அரசியல் சூழல்களைக் கடந்திட முடியும் என்பதற்கான ஒரு உலக முன்னுதாரணமாகக்கூட விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். அசாத்திய போராற்றல் இதற்குத் துணைபுரிந்திடும் என்றே நம்பிக்கையை வளர்த்தது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முன்னோக்குவதற்காகத் தான் எடுக்கப்பட்டன. எந்தத் தீர்மானமும் அநீதி இழைப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும், தீர்மானத்தில் நேர்மையிருந்தளவு அறிவார்த்தம் இருக்கவில்லை என இப்போது காலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தவறுகள் நேர்ந்தன் அதற்காக அவை குற்றங்கள் ஆகிவிடா.
பாதைகள் கடந்துவிட்டபின்பே பயணத்தின் வழுக்களை மறு ஆய்வுக்குட்படுத்தி மனித சமூகம் முன்னேறிவந்திருக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்களிலிருந்து தவறுகளை அடையாளம் காண்பது குற்றம் காண்பதாகாது.
அனைத்துலக அரசியல் போக்கில் ஏற்பட்ட 2001ம் ஆண்டிற்குப் பின்னான திடீர் மாற்றத்தில் போராட்டம் தன்னை சமன்செய்வதில் தவறியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட உலக அரசியல் சூறாவளியில் போராட்டம் தன்னை நிலைப்படுத்த முயற்சித்த தீர்மானத் தவறு சமநிலையை வேரோடு அறுத்தது. மேற்குலகு, சீனா, இந்தியா என்ற முக்கோண சுற்றிவளைப்புக்குள் ஈழப்போராட்டம் மூழ்கடிக்கப்பட்டது. இதுவும் உலகப் போராட்டங்களுக்கான நவீன முன்னுதாரணமாயிற்று.
கொள்கை நேர்மையுடன் இறுதிவரை புலிகள் போரிட்டு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தை உருவாக்கி, அனைத்துலக தலையீட்டைச் சாத்தியப்படுத்தி மடிந்து போனார்கள். அவர்களின் மகத்துவமான அர்ப்பணிப்பும் வீரமும் மாசற்றவை. நந்திக்கடல்வரை வீழ்ந்த உடல்கள் தமிழ்மக்களை நோக்கி “உங்களுக்காக நாங்கள் இங்கே வீழ்ந்துமடிகிறோம்” என்றே பறைசாற்றி நின்றன.
ஆரம்பகால தமிழ்மக்களின் சாத்வீகப் போரில் அரச ஒடுக்குமுறைதான் வெற்றிபெற்றது. சாத்வீகப் போர் தோற்றுப்போனது. ஆனால் அதன் போராட்டம் தோற்கவில்லை. ஒடுக்குமுறை பெற்ற வெற்றியே, ஆயுதப் போராட்டத்தை பெற்றெடுத்து அது வளர்வதற்குரிய அக - புறக் காரணிகளைத் தந்தது. இதுவே, பின்னாளில் தமிழ்மக்களின் போராட்டத்துக்கு அகப் பலத்தையும், போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தையும் பேரப்பலத்தையுங்கூட பெற்றுத் தந்தது. மிதவாதப் போரில் வென்ற அரச தரப்பு போராட்டத்தில் தோற்றுப் போன பாடம் இது.
இப்போது ஆயுதப் போரில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்; ஆனால் போராட்டத்தில் அல்ல. ஆயுதப்போர் தன் இயலுமைகளால், அர்ப்பணிப்புகளால் இறுதிப் பயணத்திற்கான முன்னேற்றப் பாதைகளை திறந்துவிட்டிருக்கிறது. மீதிப்பயணம் நிறைவேற வேண்டும்.
ஈழப்போராட்டத்தை அதன் பயணவழியின் அடிகொண்டு மூன்று கட்டங்களாக வகுக்கமுடியும்.
முதற்கட்டம், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டம். அது தமிழர்களிடையே தேசிய பிரக்ஞையை உருவாக்கி விடுதலைக்கான அரசியல் விழிப்புணர்வைத் தந்து ஆயுதப்போராட்டத்தை முகிழ்க்க வைத்தது.
அதனிடம் ஓடுகோலைப்பெற்ற ஆயுதப்போராட்டம் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டது. இதுவே இரண்டாம் கட்டம். இவ்வாயுதப் போராட்டமே இலங்கை இனச்சிக்கலை அனைத்துலகப் பெறுமானத்திற்கு தரமுயர்த்தி, தமிழர்களுக்கு பேரப்பலத்தைத் தந்தும் உலக அரசியலை இலங்கை இனப்பிரச்சினையை நோக்கி குவியவைத்தும் போனது.
இந்த ஓடுகோலைப் பெற்று தொடர்ந்து ஓடவேண்டிய ராஜதந்திரப் போராட்டமே மூன்றாம் கட்டம். இரண்டாம் கட்டம் அர்ப்பணிப்பையும் இரத்தத்தையும் விலையாகக் கேட்டது. மூன்றாம் கட்டமோ அறிவையும் உழைப்பையும் விலையாகக் கேட்கிறது.
அரசியல் அறிவு கொண்டு, அனைத்துலக அரசியலில் உருவாகும் வாய்ப்பான காரணிகளைக் கையாளவும், தேவையான அகப்பலத்தை உருவாக்கவும், பொருத்தமான பொறிமுறைகளை கட்டமைக்கவும் தமிழீழப் போராட்டம் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
படிநிலை வெற்றியை அடைவது எதுவும் இலட்சியத்திலிருந்து விலகிப்போனதாகாது. ஆனால் எந்தவொரு வெற்றியும் இறுதி இலட்சியத்திற்கான மூலோபாயத்தின் பகுதி ரீதியான வெற்றியாக அமைய வேண்டும். இல்லையெனில் அரை நூற்றாண்டுப் போராட்டத்தை அரைக்காசுக்கு விற்ற கதியே நேரும்.
மூன்றாம் கட்டம் முடிவை நோக்கும் கட்டம். அனைத்துலக அரசியல் சக்திகளின் போட்டி இலங்கை அரசியலுடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இனச்சிக்கலும் இந்தச் சக்திகளின் அரசியல் கருப்பொருளாகி உள்ளது. இவற்றிற்குள் தான் போராட்டத்திற்கான வாய்ப்புவெளி விரிந்துகிடக்கிறது. இதிலிருந்துதான் போராட்டத்திற்கான பயணவழியை கண்டுபிடிக்கவேண்டும். பேரத்தைப் பேணுவதற்கான அகப்பலத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டாளுமையையும் கூட்டு முயற்சியையும் மூன்றாம் கட்டம் முன் நிபந்தனையாக்கியுள்ளதை புரிந்துகொள்ளவும் வேண்டும்.
இறுதிச் சுற்றின் ஓட்டக்கோலைத் தாங்கி தமிழர்கள் வெற்றிகரமாக ஓடினால், ஓடுவதற்கான தலைமை சரியாக வழங்கப்பட்டால், இறுதிப் பயணத்தில் தமிழர் போராட்டம் வெற்றியை நோக்கும். அப்போது, சிங்கள பௌத்த இனவாத அரசின் இன்றைய போர் வெற்றியே நாளைய அரசியல் தோல்வி ஆவதை வரலாறு காலம் கடந்து கற்பிக்கும்.
தொடர் நிறைவுற்றது.
*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar