|
|

மாற்றுவழிகளை பரிசீலிக்காத தாவீது தன் கூழாங்கற்களுடன் போரில் நின்றான் - குணா.கவியழகன் அனைத்துலக
சக்திகளுடன் உருவாக்கிக் கொண்ட அரசியல் பகை, ஆயுத விநியோகத்தைப்
பெறமுடியாமை, சொந்த மக்களுடன் ஏற்பட்ட உறவு விரிசல், அமைப்புக்குள் ஏற்பட்ட
குழப்பம், யுத்தத்தில் அனைத்துலக நாடுகள் எதிரணியில் நிற்க
வேண்டியிருந்தமை, கருணாவால் முடிச்சவிழ்க்கப்பட்ட இரகசியங்களினால்
காலாவதியாகிப் போன யுத்த தந்திரம் என எல்லாம் இணைந்து புலிகளை
வெறுங்கையினராக ஆக்கியது.
எனினும் சமாதானத்தில் அச்சம் கொண்ட
புலிகள் யுத்தத்தின் மூலம் அகப்பலத்தை மேம்படுத்திவிட முடியும் என்று
நம்பிக்கை கொண்டனர். ஆயினும் மாற்றுவழிகளில் யுத்தத்தை முன்னெடுக்கவோ,
அல்லது போராட்டம் அழிவை நோக்கும் இறுதித் தருணங்களில் போராட்டத்தைப்
பாதுகாக்கத் தேவையான நகர்வுகளையோ மேற்கொள்வதில் போதிய அறிவை அல்லது முன்
ஆயத்தத்தை புலிகள் கொண்டிருக்கத் தவறினர்.
மகிந்த அரசாங்கத்தை
பதவிக்கு கொண்டு வந்த புலிகள் யுத்தத்திற்கு திரும்பாமல் சமாதானத்தை
தொடர்வதில் பற்றுறுதியோடு இருந்திருந்தால் மகிந்த நெருக்கடிக்குள்
அகப்பட்டிருப்பார். அவர் யுத்தத்திற்கு முனைந்திருந்தால் மேற்கின் பகைக்கு
ஆளாகியிருப்பார்.
ஜெனிவா-2 பேச்சை முறிக்கும் நிலைக்குப்
போயிருக்காமல் தவிர்த்திருக்கலாம். புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு
நோர்வேக்குச் சென்று குற்றம் சுமத்தி சமாதானத்தை முறிக்கும் தொனியில் தம்
கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்கத் தேவையிருக்கவில்லை.
சிறிலங்கா
அதிபர் தேர்தலில் ஒரு தற்செயல் தவறை தாம் இழைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டு
மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்துழைக்கும் அறிவிப்பை விடுத்திருக்கலாம்.
இதன் மூலம் மேற்குலகுடனான உறவை சீர்செய்து வளர்க்க முடியும். மேற்குலகு
விரும்பாத மகிந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கோ, வழிக்குக் கொண்டுவருவதற்கோ
புலிகள் அவசியம். எனவே மேற்குலகுடனான பேரம் மேம்படும். இதனால் அனைத்துலக
உறவை மேம்படுத்தியிருக்கவும் மகிந்தவின் மேற்கு உறவை
பலப்படுத்தியிருக்கவும் முடியும்.
சரி யுத்தம்
தொடங்கப்பட்டுவிட்டது. தொடங்கப்பட்ட சில காலத்திலேயே கேந்திர மையங்கள்
எதனையும் உடனடிக்குக் கைப்பற்றும் வாய்ப்பு இல்லை என்பதை கணித்திருக்க
முடியும்.
ஐ.தே.க அனைத்துலக அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியைக்
கவிழ்க்க காத்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவோ அரசாங்கத்திற்குள்ளும்
குடும்ப அரசியலால் உட்பகையைக் கொண்டிருக்கிறார். மகிந்த யுத்தத்தில்
வெற்றிமுகம் கண்டு அரசியலைப் பலப்படுத்துவதை ஐ.தே.க விரும்பாது. எனவே
ஐ.தே.கவுடன் ரகசிய உடன்பாட்டிற்கு போயிருக்க முடியும். ஆட்சியைக்
கவிழ்ப்பதற்கு தேவையான முயற்சிகளை தாம் எடுப்பதாகவும் ஐ.தே.கவை மீண்டும்
பதவிக்குக் கொண்டுவர தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கலாம்.
அவ்வாறு
முனைவதற்கு சித்தமாக இருந்திருந்தால் அனைத்துலக சமூகம் ஆட்சி
கவிழ்க்கப்படுவதற்கு தேவையான அரசியல், பொருளாதார, ஊடக முயற்சிகளை தானே
எடுக்க முன்வந்திருக்கும் ஐ.தே.கட்சியும் அகநிலையில் ஆட்சி
கவிழ்க்கப்படுவதற்கு தேவையான விடயங்களில் ஒத்துழைத்திருக்கும். இத்தகைய ஒரு
முயற்சியில் மேற்குலகு மற்றும் ஐ.தே.க ஆகியவற்றிக்கு எதிரான புலிகளின்
பேரத்தையும் உயர்த்தியிருக்கும். அனைத்துலக நலன் சம்மந்தப்பட்ட இம்
முயற்சிக்கு அனைத்துலகம் முனைந்து நின்றிருக்கும்
இவ்விடத்தில்,
ஏலவே ஒப்பந்தத்தில் காணப்பட்ட அம்சங்கள், குறித்த காலத்தில் உடனடியாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு உத்தரவாதத்தை பெற்றிருக்க
முடியும். வடக்கு கிழக்கில் படைவிலகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு நிறைவேற்ற
இப்பேரத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஐ.தே.க மற்றும் அனைத்துலக ஆதரவுடன்
ஆட்சியைக் கவிழ்க்க தேவையான அரசியல் இராணுவ வெளி இருக்காமல் இல்லை.
இத்தகைய
ஒரு நிகழ்ச்சி நிரலில் யுத்த வழியில் அணுகினால் கூட மேற்கினதும்,
ஐ.தே.கவினதும் ஆதரவு கிடைத்திருக்கும். ஆனால் புலிகளின் ஆதரவின்றி
ஆட்சியைக் கவிழ்க்க அவர்களிற்கு எந்த வழியும் இருக்கவில்லை. யுத்தத்தின்
சத்தமின்றி, ரத்தமின்றி கேந்திர நிலங்களில் தமது அரசியல் அதிகாரத்தை
நிலைநாட்டியிருக்க புலிகளுக்கு வாய்ப்பிருந்தது. கெடுவாய்ப்பாக அது
நிகழாமல் போயிற்று. அதுமட்டுமல்ல யுத்தத்தில் தனிமைப்பட்டு உலகின் முழுச்
சக்திகளுக்கு எதிராகவும் களத்தில் போர்புரிய வேண்டியாயிற்று.
இப்போரில்
அனைத்துலக சக்திகள் புலிகளின் ஆயுத விநியோகத்தை முற்றுகையிட்டு
முறித்துவிட்டன. ஆட்பலமும் கிழக்கின் குழப்பத்தால் பலவீனப்பட்டது. போரின்
தொடக்கத்தில் முகமாலையில் அரசபடைகள் ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காகவும்,
புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகவும் நடந்த முதற்சமரிலேயே
மரபுசார் யுத்தத்திற்குத் தேவையான போதிய ஆயுத, ஆட்பல வளம் இன்றி
யுத்தத்தில் வெற்றி முகம் காண்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டிருக்க
முடியும். எனவே மரபுசார் போர்முறைக்குப் பதிலாக யுத்தத்தில் மாற்றுத்
தெரிவுகளை புலிகள் நாடியிருக்க வேண்டும். அதுவே பொருத்தமானதுங்கூட.
நாடளாவிய
ரீதியில் சிவில் சமூகத்திற்கு உயிர்ச்சேதம் இன்றி கேந்திர முக்கியத்துவமான
கொமாண்டோத் தாக்குதல்களை நிகழ்த்தும் போர் அணுகு முறையைப் புலிகள்
தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே இத்தகைய சில தாக்குதல்கள் மூலம் புலிகள்
தமக்கு அதில் உள்ள திறமையை வெளிப்படுத்தியும் இருந்தனர். இதற்கு புலிகளின்
ஆயுத, ஆட்பலம் போதுமானதும் கூட.
தெற்கில் நிகழ்த்தப்படும் சிறு
தாக்குதலும் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும். தெற்கைக்கூட பாதுகாக்க
முடியாத தலைவராக மகிந்த ஆகியிருப்பார். இதனால் அனைத்துலகமோ, ஐ.தே.காவோ
மறைமுக உற்சாகம் அடையுமே தவிர எதிராக நிற்கப்போவதில்லை. பெரும் அரசியல்
நெருக்கடிக்குள் அரசாங்கம் அகப்பட்டிருக்கும்.
கருணாவின் துணை
கொண்டும் இத்தகைய தாக்குதலுக்கு பாதுகாப்பு வியூகம் அமைப்பது கடினம். இதில்
அரசின் படைக்கவனம், பலம் தெற்கை நோக்கி திருப்பப்பட்டிருக்கும்.
இம்முயற்சி புதிய அரசியல் வெளிகளைத் திறந்திருக்கும். மேற்கு, மற்றும்
ஐ.தே.க வுடனான ரகசிய உடன்பாடுகள் மேலும் வலுச்சேர்த்து வாய்ப்புவெளிகளைத்
திறந்திருக்கும்.
மகிந்த அரசை தோல்வி அரசாக ஆக்கக்கூடிய வகையில்
கொழும்பை நிலைகுலைய செய்யக்கூடிய போதிய மாற்று முயற்சிகளை புலிகள்
கொள்ளவில்லை. அல்லது அதற்கான முன்னாயத்தங்களை புலிகள் செய்திருக்கவில்லை.
நிகழ்த்தப்பட்ட ஓரிரண்டு தாக்குதல்கள் கூட போதிய அரசியலாக்கப்படவில்லை.
இதனால் இத்தாக்குதல்கள் உதிரித் தாக்குதல்களாக ஆகியதே தவிர முழுமையான யுத்த
முயற்சியின் பகுதியாகவில்லை.
எந்த ஒரு தாக்குதலும் முழுமையான
யுத்த மூலோபாயத்தின் பகுதியாகவில்லை எனின், அது எந்த விளைவையும்
காணமுடியாமல் அர்த்தமிழந்து போகும். விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில
தாக்குதல்கள் இவ்வாறே விளைவைப் பெற முடியாமல் அர்த்தமிழந்தன.
மல்லாவி,
முழங்காவில் பகுதிகள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு கிளிநொச்சி ஏறத்தாழச்
சுற்றிவளைக்கப்பட்ட நிலைமையில் அதுவரையான புலிகளின் பாதுகாப்புச்சமர்
பொறிமுறை தோல்விகரமானது என்பதை உணர்ந்திருக்க முடியும். படையினரைத்
திசைதிருப்பும் பொருட்டேனும் ஒரு வலிந்த தாக்குதலை புலிகளால் செய்ய
முடியவில்லை.
இத்தருணத்தில் தான் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்திற்கு வந்தது. ஆளுங்கட்சிக்குள் குடும்ப அரசியல் காரணமாக
அகநிலைக்குழப்பங்கள் மேலோங்கியிருந்தன. ஜே.வி.பி இரு அணிகளாக பிரிந்தன.
மகிந்தவுடன் இணைந்த விமல்வீரவன்ச அணியை அரசியல் தோல்விகாண வைப்பதற்காக
சோமவன்ச அணி ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஊக்கம் கொள்ளும் என்பது யதார்த்தமானது.
ஐ.தே. கட்சியிலிருந்து பிரிந்து ஆளுங்கட்சிகளுடன் இணைந்த ஜி.எல்.பீரிஸ்,
மிலிந்த மொறகொட அணியிலேயே அரசாங்கம் தொங்கி நின்றது. புலிகள் கூட்டமைப்பின்
துணைகொண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு இவ்வணியினரைப் பயன்படுத்தியிருந்தால்
ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பிருந்தது.
மேற்குலகுடனான உடன்பாடு
ஒத்துழைப்பு, மற்றும் ஜ.தே.கட்சியுடனான ரகசிய உடன்பாடு இவ்
ஆட்சிக்கவிழ்ப்புக்கு உறுதுணை வழங்கியிருக்கும். அவற்றின் பலமான இயலுமைகள்
ஆட்சிக் கவிழ்ப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கும். ஆனால் மாற்று
அணுகுமுறைக்கு அரசியல் வெளிகளைப் பயன்படுத்த புலிகள் முனையவில்லை. ஒருவேளை,
ஒப்பந்தத்தை மீறி அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நோர்வேயை வெளியேற்றி யுத்தம்
செய்ததனால் யுத்தத்திற்கு முன்னான நிலைமைக்கு படைகள் பின்வாங்கப்பட
வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வைக்கக்கூடிய கோரிக்கை கூட
சாத்தியப்பட்டிருக்கும். ஆட்சி மாற்றத்தில் அனைத்துலகம் அத்தகைய கேந்திரமான
நலனைக் கொண்டிருந்தது. ஆனால் புலிகள் அத்தகைய ஒரு அரசியல் வெளியை
பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இராணுவம் கிளிநொச்சியைக்
கைப்பற்றியதும் அதுவரை அனைத்துலக சமூகம் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்திற்கு
மறுபடி திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை மாற்றி புலிகள் ஆயுதங்களைக்
கைவிட்டு சமாதானத்திற்கு வரவேண்டும் என அறிவித்தன. இந்தியாவும் இதே
அறிவிப்பை விடுத்தது. இந்தியாவின் ஆதரவையும் பாதுகாப்பையும் பலமாகக் கொண்டு
நடத்தப்பட்ட இவ்யுத்தத்தில் இந்தியாவும் மேற்குலகமும் ஒரு கோட்டில்
சந்தித்த தருணம் இது.
கிளிநொச்சியும் இழக்கப்பட்ட நேரத்தில்
யுத்தத்தில் சாதகமான புதிய திருப்பங்களை நிகழ்த்துவது சாத்தியமான ஒன்றல்ல
என்பது புலிகளால் புரிந்துகொள்ளப்படாமல் இருந்திருக்காது. இத்தருணத்தில்
அனைத்துலக சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்குவதாக அறிவித்து சமாதானத்திற்கு
திரும்ப இணங்கியிருக்கலாம். யுத்தத்தை உடனடியாக நிறுத்த அதாவது படைகளின்
மூர்க்கமான முன்னேற்றத்தை நிறுத்த இவ்வழி சிறந்த பாதுகாப்பு பொறிமுறையாக
விளங்கியிருக்கும்.
சமாதானம் பற்றிய பேச்சு வார்த்தைகளில்
உருவாகும் புதிய நிலைமைகளில் புதிய வழிகளைக் கையாண்டிருக்க பின்வரும்
நிலைமைகள் உதவியிருக்கும். இத்தகைய வெளித்தரப்பு வேண்டுகோளுக்கான புலிகளின்
பதில்கள் போதிய இராஜதந்திரத்துடன் அமையவில்லை. வறட்டுத்தனமான கௌரவங்களை
காப்பாற்ற முனைந்த அணுகுமுறைகள் அவமானகரமான தோல்விமுகம் நோக்கிப்
போராட்டத்தை கொண்டு சென்றது. அரசியல் வெளியில் கிடைத்த அரிதான ஒரு
யுத்தப்பாதுகாப்பு பொறிமுறையை புலிகள் தவறவிட்டுவிட்டனர்.
இதற்கு
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதோடு அரசாங்கம் படை நடவடிக்கையை
நிறுத்திக்கொள்ளும். ஏனெனில் புலிகளின் அழிவு இந்திய நலன்களை பாதுகாக்குமே
தவிர சிங்கள பௌத்த நலன்களை அல்ல என்ற புலிகளின் கணக்கு காரணமாயிருக்கலாம்.
வன்னியில் இருந்த புலிகளின் ஆதரவு பெற்ற அரசியல் அவதானியால் இக்கருத்து
புலிகளுக்கு ஊட்டப்பட்டிருந்தது.
இந்தியாவே மகிந்த
அரசாங்கத்தினதும், யுத்தத்தினதும் பாதுகாவலன். எனவே இந்திய நலன்கள்
யுத்தத்தில் முக்கியமானவை. தவிரவும் மகிந்தவின் அரசியல் ஆளுமை ஒற்றைச்
சிந்தனையுடையது. தன் வம்ச அரசியலை பாதுகாக்கும் பொருட்டு அரசியல் மூர்க்கம்
கொண்டிருந்தாரே தவிர அரசியல் விவேகம் கொண்டிருக்கவில்லை. தவிரவும்
சமாதானத்திற்குத் திரும்பினால் மேற்குலகு தன் ஆட்சியைக் கவிழ்க்காமல்
விடாது என்பது திட்டவட்டமாக அவரிற்கு தெரிந்திருந்தது. இவற்றை புலிகள்
சரியாக புரிந்துகொள்ளவில்லை.
தர்மபுரத்தை கடந்து படைகள்
முன்னேறியபோது ஆனையிறவும் புலிகளால் கைவிடப்பட்டிருந்தது. யுத்தம்
திகைப்பான ஒரு நெருக்கடியை புலிகளுக்கு தந்தது. இதன் பின்னரான நிலைமையில்
வெல்லமுடியாத ஒரு யுத்தத்தில் புலிகள் இயங்கிக் கொண்டிருப்பதே
யதார்த்தமாகிற்று.
வள்ளிபுனம், சுதந்திரபுரம் பகுதிகளை மக்களுக்கான
பாதுகாப்பு வலயமாக அறிவித்த அரசு மக்களுக்கு பேரவலத்தையே அங்கு கொடுத்தது.
நான்கு மாவட்ட மக்கள் அப்பகுதிக்குள் நெருக்கப்பட்டனர். இத்தகைய
பாதுகாப்பு வலய அறிவிப்புக்கள், யுத்த தந்திர கண்கொண்டு அறிவிக்கப்பட்டதே
தவிர மனிதாபிமானக் கண்ணோட்டம் எதுவும் இங்கு சிறிதளவேனும் இருக்கவில்லை.
இது அரசாங்கத்திற்கு அரசியல் பரப்புரைக்கும் உதவிக்கொண்டது.
பீதிகொண்ட
மக்கள் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தேவையற்று இடம்பெயர்ந்தனர்.
புலிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை. புலிகளின் தோல்விமுகம் மற்றும்
அரசின் மக்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல் என்பவை மக்களை பாதுகாப்பு வலயம்
என்ற மாயப் பிரதேசங்கள் மீது இடம்பெயர ஊக்குவித்தன. இதனால் படைத்தரப்பு
மேலும் இலகுவாக பிரதேசங்களைக் கைப்பற்றி முன்னேற முடிந்தது.
பாதுகாப்பு
வலயங்களில் மக்கள் படைத்தரப்பின் திட்டமிட்ட தாக்குதலால் மோசமான
அழிவுகளைச் சந்தித்தனர். அங்கு ஒதுங்கிய மக்கள் அரசை நம்பவில்லை ஆனால்
அனைத்துலக சமூகத்தை நம்பினர். இது ஓர் அப்பாவித்தனமான நம்பிக்கை என்பதை
விளங்க மக்களுக்கு சக்தியிருக்கவில்லை.
கடைசியில் அதையும் கைவிட்டு
தம் காவலர்களான புலிகளுக்கு பின்னால் ஓடினர். எஞ்சியிருந்த நிலப்பரப்பான
இரணைப்பாலை மாத்தளன் பகுதியில் தஞ்சம் கொண்டனர். மக்களைப் பாதுகாக்கும்
பொறுப்பு மட்டுமல்ல தமிழ் மக்களின் முப்பது ஆண்டு போராட்டத்தைப்
பாதுகாக்கும் பொறுப்பும் புலிகளிடமே இருந்தது. இத்தருணத்தில் யுத்தம் இறுதி
நிலையிலும் இருந்தது.
இப்போது தான் இந்தியா புலிகளின் தமிழ்நாட்டு
ஆதரவுத் தலைவர் ஒருவரூடாக தகவல் அனுப்பியது. இந்தியாவிடம் இருந்து என்ன
உதவி வேண்டும் என்பதே அத்தகவல். அதாவது இந்தியாவின் பேராண்மையை புலிகள்
ஏற்றுக்கொள்கின்றனரா? இல்லையா? என்பது தான் அதன் அரசியல் பரிபாசை. உணவும்
மருந்தும் அவசரமாக வான்வழியாக கிடைக்க வழிசெய்யவும் என பதில் தகவல்
அனுப்பியிருந்தால் இந்தியாவின் மேலான்மையை அங்கீகரிக்கிறோம். முன்னர் விட்ட
தவறை திருத்திக் கொள்கிறோம் என்பதற்கான பரிபாசையாக அது அமைந்திருக்கும்.
கேடுகாலமாக புலிகள் அதனைச் செய்யவில்லை.
புலிகளின் அரசியல் தலைவர்
ஐ.நா செயலாளருக்கு வணங்காமண் கப்பலை உதவி கொண்டுவர அனுமதிக்குமாறு அப்போது
கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தியாவின் இத்தகவல்கள் புலிகளின்
தலைவருடன் பகிர்ந்து கொள்ளப்படாமலே அரசியல் பொறுப்பாளரால் கையாளப்பட்டதாகவே
சில தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. அரசியல் அறிவுச் சூனியத்துடன்
அணுகப்பட்ட இந்தியாவுடனான தொடர்பாடல் இறுதி அழிவை நோக்கி மக்களையும்,
போராட்டத்தையும் தள்ளிற்று.
கடந்த அரை நூற்றாண்டில் இந்த உலகம்
கண்டிராத யுத்த அவலத்தை, மனித அழிவை தமிழ் மக்கள் கண்டனர். உணவில்லாமல்,
மருந்தில்லாமல் மக்கள் வீணே இறந்தனர். உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால்
மக்கள் உயிரழிவைச் சந்தித்தனர். மனிதாபிமானம் நாகரீக உலகில்
அர்த்தமற்றதாகியது.
புலிகளின் இந்தியாவுடனான தவறான தொடர்பாடலால்
மேற்குலகு யுத்தத்தை நிறுத்த ஏப்ரல் கடைசியில் எடுத்த முயற்சியை மகிந்த
அரசு இந்தியாவின் துணை கொண்டு ஓரம் கட்டியது.
யுத்தத்தின்
இறுதிவாரத்தில் தெருக்களில் பிணங்களும், மக்களும் அநாதைகளாக நின்ற இறுதி
உப்பு நிலத்தில் காலம் இறுதி அரசியல் வெளியை புலிகளுக்கு வழங்கியது. ஐ.நா
செயலாளர் யுத்தத்தில் அகப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டி அனைத்துலக
சமூகத்தின் அழுத்தத்தை வழங்கிய போது அரசாங்கம் மக்களை பாதுகாப்பாக
வெளியேற்ற தாம் தயார் என பதில் வழங்கியது. கோத்தபாய இத்தவறை விட்டார் என்றே
சொல்லலாம். புலிகளும் இதற்கு தாமும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தயார்
என அறிவித்திருந்திருந்தால் தலையிடக் காத்திருந்த அனைத்துலக சமூகத்திற்கு
இந்தியாவையும் தாண்டி ஒரு கதவைத் திறந்திருக்கலாம்.
புலிகளின்
இறுதி அழிவு பொருத்தமான தெரிவல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த
மேற்குலகத்திற்கு இக்கதவைத் திறந்துவிட்டிருக்க முடியும். மக்களை
வெளியேற்றுவது என்ற பேச்சை மூன்றாம் தரப்பான அனைத்துலக சமூகத்துடன் தொடக்கி
நிலைமைகளை வளர்த்துச் சென்றிருக்க வாய்ப்பிருந்தது. கேடுகாலம் இதனை உணரவோ,
கையாளவோ கூடிய சூழலோ, அறிவோ இல்லாமல் புலிகள் திகைத்து நின்றனர்.
நந்திக்கடல்
கரையில் எல்லாத் தவறுகளினதும் விளைவாக ஈழப்போராட்டம் ஆயுதவழிப் போரின்
இறுதி அழிவைச் சந்தித்தது. இலட்சியத்திலிருந்து கடைசிவரை விலகாத
நேர்மையுடனும் வீரத்துடனும் தலைவர் பிரபாகரன் வீழ்ந்தார் என வரலாறு
தகவலாக்கிக் கொண்டது.
ஆனால் வரலாற்று அறிவு தமிழர்களை தம் பயண வழியை மறு பார்வைக்கு வற்புறுத்திற்று.
தொடரும்.. |
(நன்றி-
குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar