ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 18


இன்று போய் போருக்கு நாளைவா எனச் சொல்லலாம் கேட்க முடியாது - குணா.கவியழகன்
யுத்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. புற அரசியல் யுத்தத்திற்குப் பாதகமாக இருந்தபோதும், புற அரசியல் யுத்தத்தில் எதிரிக்கே ஆதரவு தரும் என்று ஆகிவிட்டபோதும் கூட யுத்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இந்த யுத்தத்தில் அகப்பலம் ஒன்றே புலிகளுக்கு எஞ்சியிருந்த ஒரே ஒரு துணை சொந்த மக்கள். ‘மக்கள் யுத்தத்திற்கு சாதகமாக இருந்தாலேயொழிய யுத்தத்தின் வெற்றி நிச்சயமானதல்ல' என்பது ஒரு போரியல் விதியும் கூட. ஆனால் புலிகளின் முனைப்புக்கள் தம் சொந்தக்களப்பலத்தை மோசமாகச் சீரழிப்பதாகிற்று.

கிழக்கில் மட்டு அம்பாறைத் தளபதி கருணாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கிழக்கின் படைபலம் கணிசமானளவு இழக்கப்பட்டு விட்டது. புலிகளின் ஆளணிப்பலத்தை மேம்படுத்தும் கிழக்கின் படைபலம் பெரும் பலவீனமாகிற்று.

தவிரவும் கருணா தப்பியோடி அரசியல் தஞ்சம் அடைந்ததும், அரசு கருணாவை அரசியல் இராணுவ விடயங்களில் இணைத்து இயங்க முடிவு செய்ததும் மேலும் சிக்கலாகிற்று.

இதனால் கருணா தன் பிரிவுக்கு பிரதேசவாதத்தை காரணமாக கற்பிக்கவும் பிரதேசவாதத்தை தூண்டவும் முடிந்தது. போராட்டத்தில் கிழக்கு அரசியல் பலவீனமாகிற்று கிழக்கு மக்கள் குழப்பத்திற்குள்ளாகினர். அமைப்புக்குள்ளும் படைசார் பலவீனம் மட்டுமல்ல உளவியல் பலவீனமும் வருவாகிற்று.

சந்திரிக்கா அரசாங்கம் முன்னெடுத்த வன்னிப்போர் காலத்தில் உக்கிரமானதும் மீகநீண்ட தொடர் சமரிலும் புலிகள் முகம்கொடுத்து இறுதி வெற்றியை தமதாக்கினர். வரலாற்றில் இது ஓர் அசாத்திய வெற்றி, படையியல் சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த யுத்தத்தில் ஒப்பீட்டு ரீதியில் புலிகள் போதிய மரபுப்போருக்குரிய ஆயுத வளத்தையோ, ஆளணி வளத்தையோ கொண்டிருக்கவில்லை. புலிகளிடமிருந்த நூதனமான போர்த்தந்திரோபாயமே புலிகளின் பிரத்தியேக பலமாயிற்று. இல்லாத ஆயுத ஆட்பல இடைவெளியை புரிந்து கொள்ள முடியாத புலிகளின் போர்த்தந்திரமே இட்டுநிரப்பி வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அப்பாதுகாப்புச் சமரின் ஒருங்கிணைப்பு கட்டளைத் தளபதியாகவும் புலிகளின் பிரதம தளபதிகளில் ஒருவராகவும் இருந்த கருணா இப்போது அரச அணியில் அங்கம் வகிக்கின்றார். அவரின் துணை கொண்டு பல முடிச்சுக்களை அரசால் அவிழ்க்க இப்போது முடியும்.

மரபு சார் போர் கற்கை நெறிகளுக்கு உட்படாததும் மரபு சார் போர் அறிவினால் புரிந்து கொள்ள கடினமானதுமாக இருந்து புலிகளின் போரியல் உத்தி கருணாவினால் முடிச்சவிழ்க்கக் கூடியதாகிற்று.

எனவே புலிகளின் நூதன பலத்திற்கு எதிராக வியூகம் அமைப்பது இப்போது அரசபடைகளுக்கு கடினமானதல்ல. விநியோகங்களுக்கு ஏற்பட்ட முற்றுகையால் ஆயுதபலமும் இன்றி, ஆட்பலமும் போதியளவின்றி இருந்த நிலையில் பிரத்தியேக போர் நுணுக்கமும் பலம் இல்லை என்றாகியது.

கருணாவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை போராட்டத்தின் நன்மை கருதி தற்காலிகமாகவேனும் சீர்செய்து கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. புனிதங்களின் பேரால் பலவீனப் படுவதைவிட நலன்களுக்காக சமரசம் கண்டிருக்க வேண்டியது அவசியப்பட்டது. ஆனால் கெடு வாய்ப்பாக அது நிகழாமல் போயிற்து.

ஆட்பலத்தை மேம்படுத்தும் பொருட்டு புலிகள் தம் தளப்பிரதேசமான வன்னியில் கட்டாய இராணுவ சேவையை அறிவித்தனர்.

நடந்த சமாதானத்தில் புலிகள் மீதான முக்கிய குற்றச்சாட்டாக அனைத்துலகம் சிறுவர் ஆட்சேர்பையே முன்னிறுத்தியது. புலிகளுக்கு அங்கிகாரம் வழங்க புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பை கைவிட வேண்டும் என வற்புறுத்தியது.

அனைத்துலக முரண்பாட்டுப் பட்டறிவில் சிறுவர் ஆட்சேர்ப்பைத் தடுத்தால் அரசு சார போராட்ட அமைப்பு பலவீனப்படும் என்பது அவற்றின் பட்டறிவு ஞானம். ஊலகளாவிய ரீதியில் அரசுகளே படைக்கு ஆட்சேர்க்கும் விடயத்தில் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. இராணுவப்பள்ளிகளை நிறுவி சிறுவயதிலேயே அதற்குள் உள்வாங்கி பின் பதினெட்டு வயதில் படைப்பயிற்சியை அளித்து வருகின்றன வல்லரசுகள் கூட.

புலிகள் கட்டாய இராணுவ சேவையை அறிவித்தபோது சமாதானத்தின் இணைத்தலைமை நாடுகள் கூட எதிராக அழுத்தம் பிரயோகிக்கவில்லை அல்லது சமாதானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள் மறைமுகமாக இதனை ஆதரித்தன. அவற்றின் அறிவில் தெரிந்திருந்தது கட்டாய படைச்சேவை சொந்த மக்களுக்குள்ளேயே போராட்ட அமைப்பு பகைமையடைந்தது பலவீனப்படும் என்று.

தாமாக வலையில் விழுந்தது போல் புலிகள் கட்டாய இராணுவச் சேவையை நடைமுறைப்படுத்த முனைந்து சொந்த மக்களின் பகைக்கு ஆளாகினர். களத்திலும் மக்களின் பகையை சம்பாதித்தனர்.

முன்னதாக வன்னிச்சமர்க் காலத்தில் குடிமக்கள் படையை உருவாக்கி ஆட்பலத்தை தேட முயன்ற போது மக்கள் பெருந்தொகையில் ஆயுதப்பயிற்சி பெற முன்வந்தனர். குடிமக்கள் படையான எல்லைப்படையில் பெருந்தொகையில் பங்களித்தனர். வலிந்த தாக்குதல்களிலும் குறிப்பிடக்கூடியளவு பங்காற்றினர். வன்னிச்சமரின் வெற்றியை குடிமக்கள் படையினரே தமது ஆட்பல நிரப்பீட்டால் ஒருவகையில் சாத்தியப்படுத்தினர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிற்று.

இப்படைச் சேர்ப்பால் கீழ்நிலைப் போராளிகளுக்குள்ளும் குழப்பம் உருவாகிற்று. தம் சகோதர, சகோதரிகள் வலுக்கட்டாயமாக போரிற்கு அழைத்து வரப்படுவது அவர்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்தது. திரட்டப்படும் இப்படை எனவே இருக்கும் போராளிகளை விட பலமடங்கு பெரும்பான்மையை கெண்டிருந்தது. சிறுபான்மை போராளிகளால் பெரும்பான்மை கெண்ட இக்கட்டாயச் சேவைப் படையை கட்டுப்படுத்தி வழிநடத்துவதும் இயலக்கூடியதல்ல. புலிகள் படையின் எஞ்சிய மனோதிடம் இதனால் மோசமாகச் சீரழிந்தது.

யுத்தம் தொடங்கிய காலத்தில் அரசுப்படைகள் யாழ்ப்பாணத்தில் மோசமான இனந்தெரியாத கொலைகளை தொடர்ந்து செய்து யாழ்ப்பாணத்தின் குரல்வளையை நசுக்கியது.

புலிகளின் ஆதரவை எந்த வகையில் வெளிப்படுத்தினாலும் மரணம் உடனடியானது என்ற நிலை உருவாக்கப்பட்டது. இக் கொலைகளால் யாழ்ப்பாணம் கிலி கொண்டது. தவிரவும் கட்டாயச் சேவை கூட யாழ்ப்பாண மக்கள் மத்தியில் புலிகள் யாழ்ப்பாணத்திலும் இதனைத் தொடரக்கூடும் என்ற அச்சத்தை குறிப்பிடக்கூடியளவு தோற்றுவித்தது. புலம்பெயர் தமிழர்களுக்கும் புலத்தில் தமது குடும்பத்தினர் கட்டாயப் படைச்சேவைக்கு அழைக்கப்படுவதில் மனக்குழப்பத்தைத் தோற்றுவித்தது.

இப்படி தமக்கிருக்கக் கூடிய அகப்பலத்தை பலவீனப்படுத்தினர். புலிகள் கிழக்கின் படை வளத்தை இழந்தது, கிழக்கின் அரசியற்குழப்பம், யாழ்ப்பாணம் இயங்க முடியாமல் நசுக்கப்பட்டது, வன்னியில் மக்களிடம் தேடிய பகைமை, போராளிகளுக்குள் ஏற்பட்ட மனக்குழப்பம் மனோதிட வீழ்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக கருணா எதிர் அணியில் இருந்து புலிகளின் புரியாத இரகசியங்களை முடிச்சவிழ்த்தது என எல்லாம் இணைந்து எஞ்சிய அகப்பலத்தையும் பொருளற்றதாக்கியது.

அகப்பலம் புறப்பலம் எதுவுமற்று வெறுங்கையுடன் நிற்கும் புலிகள் யுத்தத்தின் மாற்றுவழிகளை தேடாமல் தாவீது மீண்டும் கோலியாத்தை யுத்தத்திற்கு அழைக்கும் செயலுக்கு உவமானம் ஆகினர்.

தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar