தாவீது கோலியாத்தை வென்றிருக்கலாம் அதற்காக இன்னொருமுறை அழைக்கக்கூடாது - குணா.கவியழகன்
ஓர் அரசுக்கும் ஏனைய அனைத்துலக அரசுகளுக்கும் இடையில் உள்ள உறவைப்போல் ஓர் அரசுசாரா அமைப்புக்கும் அரசுகளுக்குமிடையில் உள்ள உறவு பலமானதாக அமையும் என்று கொள்வதற்கில்லை. அனைத்துலக உறவில் அரசுக்குள்ள ராஜதந்திர செயல்வெளி போல் அரசு சாரா அமைப்புக்கு இருக்காது என்பதும் உண்மை.
தமிழர்களின் தாயக உரிமை மீது அனைத்துலகத்திற்கு உடனடி நலன் எதுவும் இல்லாத வாய்ப்பற்ற சூழலில் ஒரு போராட்ட அமைப்பு அனைத்துலக உறவை மேம்படுத்துவது சாத்தியமானதல்ல. அதை போதிய பலமாக கொள்வதும் நம்பிக்கையானதல்ல என விடுதலைப்புலிகள் உணர்ந்தனர். எனவே தமது அகப்பலத்தை மேலும் மேம்படுத்தி விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பாதுகாப்பானது என எண்ணினர்.
இங்கு புலிகளால் புரியப்படாமல் போனது எதுவெனில் அனைத்துலக அரசியல் சாதகமற்ற சூழலில் ஒர் அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயங்கக்கூடிய இராஜதந்திர செயல் வெளி போல் அரசுசாரா அமைப்புக்கு இருக்காது என்பது தான்.
அதுவும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட ஓர் ஆயுத அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கருத்தாக்கத்தில் மையம் கொண்டியங்கும் அனைத்துலக அரசியல் சூழலிலிருந்து அனைத்துலகச் சக்தியின் நலன்களுக்கு முரணாக இயங்க முனைவது பாதுகாப்பானதல்ல.
ஆனால் புலிகள் தமது கண்ணோட்டத்தில் போராட்டத்தை முன்னகர்த்த முனைந்தனர். புலிகளின் பார்வையில் ஈழத்தமிழர் போராட்டத்தின் முக்கிய கேந்திரங்கள் இரண்டு. வடக்கின் யாழ்ப்பாணம் அரசியல் கேந்திர முக்கியத்துவம் கொண்டிருந்தது. கிழக்கில் திருகோணமலை இராணுவக் கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இவை இரண்டுமே புலிகளின் கையில் இல்லை.
ஆக நான்கு இலட்சத்திற்குட்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட வன்னிப் பிரதேசமே தளப்பிரதேசமாக இருந்தது. கிழக்கில் நகர்ப்பிரதேசம் தவிர்ந்த கிராமப்பிரதேசங்கள் கையில் இருந்தன. எனினும் இவை மீண்டும் ஒரு போரில் இலகுவில் இராணுவத்தினரின் கையில் விழக்கூடிய புவியியல், குடியியல் அமைப்பைக் கொண்டவை. எனவே யுத்தத்திற்கு திரும்பவியலா நீண்ட பேச்சில் புலிகள் பலமற்று ஈடுபட அஞ்சினர்
இதன் பொருட்டு இவ்விரு கேந்திரங்களையுமோ குறைந்தது ஒன்றையேனுமோ உடனடியாகக் கைப்பற்றிவிட்டு சமாதானத்திற்குத் திரும்புவது பாதுகாப்பான தீர்மானம் என எண்ணினர். அகப்பலத்தையாவது மேம்படுத்திக் கொள்வது கட்டாயம் என உணர்ந்தனர்.
ஒருவேளை ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட விடயங்களின் படி தொண்ணூறு நாட்களில் வடகிழக்கில் நிகழவேண்டிய படைவிலகல்கள் மற்றும் ஏனைய பிற அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்ததை அரசு நிறைவேற்றியிருந்தால் புலிகளுக்கு இத்தகைய அச்சம் ஏற்பட்டிருக்காது போயிருக்கலாம்.
ஆனால் உடன்பாட்டில் எட்டப்பட்ட ஆரம்ப அடிப்படை விடயங்கள் கூட நிறைவேற்றப்படாததனால் புலிகளின் அச்சம் ஒருவகை நியாயமானதாகிற்று. அமைப்புக்குள்ளும் மக்கள் மத்தியிலும் இத்தீர்மானம் நியாயமானதாகக் தோன்ற வழிசெய்தது.
அச்சம் கொண்ட இப்பேச்சில் இருந்து பின்வாங்கும் உத்தியாக அரசாங்கத்தை மாற்றும் முயற்சியைப் புலிகள் எடுத்தனர். அதிபர் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதன் மூலம் ஜ.தே.க வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வருவதைத் தடுத்து ராஜபக்சவை பதவிக்குக் கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் மாறவேண்டியாயிற்று இனவாதிகளில் கூட்டணியாக இருந்த இவ்வரசாங்கம் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படியும் விருப்பின் படியும் சமாதானத்தை முறித்துக் கொள்ளும். எனவே சமாதானத்தை முறித்த குற்றம் அரசைச் சாரும். இடையில் ஏற்படும் இவ்வரசியல் சூழலில் தமது இலக்குகளைக் கைப்பற்றி அகப்பலத்தை மேம்படுத்தி விடலாம் என புலிகள் கணித்தனர்.
புலிகள் கணிக்கத் தவறியது எதுவெனில் சமாதானத்தை முறித்துக் கொண்டது அரசே என வாதம் செய்வதற்கு அனைத்துலக அரசியல் ஒன்றும் பட்டிமன்ற மேடையல்ல. இதனை அனைத்துலக சமூகம் சமாதானத்தை முறிக்கும் புலிகளின் சதியால் விளைந்தது என்றே புரிந்து கொள்ளுவது மட்டுமல்ல, மேற்குலகில் நிகழ்ச்சி நிரலையும் குழப்பியதற்கான கோபத்தையும் இவ் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படுத்தும், இக் கண்கொண்டே அவை புலிகளைக் கையாளவும் தலைப்படும் என்பதையே.
யுத்தம் தொடக்கப்பட்டால் மேற்குலக எவ்வாறு அதைக் கையாளும்? யுத்தம் தொடர்ந்து இலங்கையில் இழுபடும் விவகாரமாக இருப்பது மேற்குலகின் நலன் அல்ல. எனவே யுத்தமே ஒரு கருத்துப் பரிமாற்றமாகி ஒரு பக்க வலுச்சமநிலையை நிரூபிக்க வேண்டும். புலிகள் யுத்தத்தில் வெற்றி முகம் கண்டால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கிவருவது நிர்ணயமாக சாத்தியமற்றுப் போகும்.
தனிநாடு அனைத்துலக நாடுகளுக்கு ஒத்திசைவானதல்ல. மாற்றுத் தீர்வுக்கு புலிகளைக் கையாள்வது மேலும் கடினமாகும். அதே நேரம் இத்தகைய சூழலில் இதனை விரும்பாத இந்தியாவையும் கையாள்வது கடினமாகும். இலங்கை அரசியலில் இனவாதிகள் தலையெடுக்க வழி செய்யும் தெற்கின் அரசியலைக் கையாள்வதும் கடினமாகும். எனவே மேற்கு புலிகளுக்கான தம் கதவுகளை மூடுவது மட்டுமல்ல தம்மறை கரம் கொண்டு புலிகளை முற்றுகையிடும். தாம் விரும்பாத அரசாங்கமேயாயினும் அதற்கு தம் மறுகரங்களால் ஆதரவு செய்யும்.
யுத்தத்தை இந்தியா எவ்வாறு கையாளும்? தமிழர்களின் தலைமைத்துவமாக புலிகள் இருப்பதையும் அத்தலைமையின் தீர்வு எட்டப்படுவதையும், மேற்குலக புலிகள் இதற்குள் இழுத்து வந்ததையும் விரும்பாத இந்தியா இந்த யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி முகம் காண்பதையே விரும்பும். வெறும் விருப்பம் மட்டுமல்ல அதன் உடனடி நலனுமாகும். மேலும் ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவை அனுசரிப்பது தவிர்க்க இயலாது. எனவே ராஜபக்ச அரசாங்கத்திற்கு எல்லாவகையிலும் யுத்தத்திற்கு உறுதுணையாவதே இந்தியாவிற்கு இருக்ககூடிய தெரிவு.
இந்த யுத்தத்தில் சீனாவின் பார்வை என்ன? ராஜபக்ச அரசாங்கம் மேற்கின் கூட்டணியல்ல. ராஜபக்ச தன் அரசியலுக்காக சீனசார்புவெளியுறவுக் கொள்கையில் மேலும் இறங்கி வருவது தவிர்க்கவியலாதது.
இனவாதிகளின் இவ்வரசு யுத்தத்தில் இறங்கும் யுத்தம் இலங்கையை சீனாவின் பக்கம் அதிகமாக சாயவைக்கும். யுத்தத்தில் சீனாவுக்கான கதவுகள் இலங்கையில் மேலும் அகலத் திறக்கப்படும். சமாதானம் முறுகலடைந்த காலத்தில் சீனாவின் சில நவீனரக ஆயுதங்களின் கறுப்புச்சந்தை புலிகளுக்காக திறக்கப்பட்டது யுத்தத்தை ஊக்குவிக்க முயலும் சீனாவின் அரசியற்சதியே. யுத்தம் சீனாவிற்கு அவசியமானது ஆனால் யுத்தத்தில் சீனாவின் ஆதரவு இலங்கை அரசுக்கே.
ராஜபக்ச செய்யக்கூடியதும் வசதியானதும் அரசியல் யுத்தமே. யுத்தத்திற்கு சீனாவின் உதவி தாராளமாகக் கிடைக்கும் சீனாவின் நுழைவை விரும்பாத இந்தியா இலங்கை அரசுக்கு அதிக ஆதரவு காட்ட நேரிடும். இதனால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பேரத்தில் இலங்கையின் கை பலமாகும். இந்தியாவை யுத்திற்குள் இழுத்து விட்டால் வெற்றிக்கான பொறுப்பு இந்தியாவுடையதாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாப்பும் இந்தியாவுடையதாகும்.
மேற்கு புலிகளின் போர் வெற்றி முகத்தை விரும்பாது புலிகளைப் பலவீனப்படுத்த மேற்கு தன் மறைகரங்களைப் பயன்படுத்தும். ஆக யுத்த அரசியல் தனக்கு தோல்வி தராது என ராஜபக்ச புரிந்து கொண்டார்.
ஆனால் விடுதலைப்புலிகளின் சாணக்கியத்தவறு முழு உலகையும் ஏறத்தாள எதிரணியில் நிறுத்தி போரைத் தொடங்கியது அரசியற் தற்கொலைத் தீர்மானமாகிற்று.
தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar