ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 16


கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்த கதை - குணா.கவியழகன்
அரசுகளுக்கிடையில் அரசுகளுடனான உறவுகள் வகைப்படுத்தப்பட்டே பேணப்படுகின்றன. வகை பிரிக்கப்படும் உறவுத் தன்மைக்கேற்ப அணுகுமுறைகளும் மாற்றமுறும். இது இன்று நேற்றுத் தொடங்கிய நவீன கல்வியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

அர்த்தசாஸ்திரம் மற்றும் த பிறின்ஸ் என்ற மேற்கத்தைய நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. இன்றைய அரசியல் உறவு இந்த அடிகளிலிருந்து மிகவும் செழுமையடைந்துவிட்ட நுண்மையான அறிவாகிவிட்டது.

அரசியலில் சந்தேக உறவு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. இனியும் இருக்கும். சந்தேகம் கொள்ளும் அரசுடன் ஏன் உறவைப் பராமரிக்க வேண்டும். அவ்வரசுடன் உறவை முறித்துக் கொள்வதனால் உண்டாகக்கூடிய எதிர்மறையான விளைவுகள் தெளிவாகுமிடத்து அவ்வுறவு பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எச்சரிக்கையுடன் கூடிய தவிர்க்கவியலாத உறவாக இது அமையலாம்.

டோக்கியோ மாநாடு இனப்பிரச்சினைப் பேச்சு வார்த்தையில் மிகமுக்கிய மைல்கல். இலங்கையில் சமாதானம் என்பது அனைத்துலக நலன் ஆகிவிட்டபோது பேச்சின் நிகழ்ச்சி நிரலும் அதனுடையதாவது தவிர்க்க இயலாதது.

இருதரப்பும் யுத்தத்திற்கு திரும்பவியலாத கட்டத்தை அடைவதே பேச்சில் அனைத்துலகம் கொண்டிருக்கும் முக்கியமான திருப்புமுனையாகும். பரஸ்பரம் இரு தரப்பும் கொண்டிருக்கும் பகைமை, சந்தேகம் என்பவற்றிலிருந்து சுமூகநிலையை ஏற்படுத்தி இருதரப்பும் தலைமை தாங்கும் தம் மக்கள் சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே முதல் கட்டப் பேச்சுக்களின் இலட்சியம்.

இந்நிலை உருவாகியதும் யுத்தத்திற்கு திரும்பவியலா கட்டத்திற்கு இரு தரப்பையும் இட்டுச் சென்று அனைத்துலகத்திற்கும் பொறுப்புக் கூற வைப்பதே முதலாவது திருப்புமுனை எனலாம். அதற்கான எல்லாநிலைத் தயார்ப்படுத்தலாகவே முன்னதான பேச்சுக்கள் சந்திப்புக்கள் அமைக்கப்பட்டன. இங்கு டோக்கியோ மாநாடே யுத்தத்திற்கு திரும்பவியலா மைல் கல்.

டோக்கியோ மாநாடு என்பது முடிவான ஒரு தீர்வை நோக்கி முன்னேறுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு இரு தரப்பும் உடன்பட்டு கைச்சாத்திடும் ஒரு மாநாடு. உடன்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் இருதரப்பும் பரஸ்பரம் பொண்டிருக்கும் மறுதரப்பின் மீதான சந்தேகம் அச்சம் என்பவற்றிற்கு அனைத்துலக சமூகமே பொறுப்பு நிற்கும் நிகழ்ச்சியாகும்.

அதே வேளை எட்டப்படும் நிகழ்ச்சி நிரலில் முன்னேறுவதற்கு இருதரப்பும் அனைத்துலக சமூகத்திற்கு பொறுப்புக்கூற கடமைப்பாடுடையது. இவ்வாறே இம்மாநாட்டின் சாராம்சம் அமைக்கப்பட்டது.

இறுதித்தீர்வாக சமஷ்டியை எட்டுவதென்ற இலட்சியத்தில் முன்னேறுவதும் அதற்கு முன் இறுதித்தீர்வின் இணைபிரியா அங்கமாக இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதும் இடைக்கால நிர்வாகம் நடைமுறைக்கு வரும் நேரத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை படிப்படியாக மூன்றாம் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும். என்பதும் உடன்பாட்டின் முக்கிய உள்ளடக்கங்கள்.

இணைத்தலைமை நாடுகள் தலைமையில் பல உலகநாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு அனைத்துலக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இங்கு எட்டப்படும் உடன்பாட்டிலிருந்து பின்வாங்காமல் இருக்க தரப்புக்கள் அனைத்துலக சமூகத்திற்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டது. அதே நேரம் மறுதரப்பு பின்வாங்காமல் பாதுகாக்க அனைத்துலக சமூகம் கடமைப்பட்டது. மொத்தத்தில் இங்கு எட்டப்படும் உடன்பாடு பின்வாங்க முடியாததாக அமைய வேண்டும் என்பதே அனைத்துலகத்தின் நிலைப்பாடு.

இலங்கையில் அமைதியாக அரசியல் என்பது இன்றைய உலகத் தலைமையினதும் பங்காளிகளினதும் கட்டாய நலன். இருதரப்பையும் ஒரு பொதுநிகழ்ச்சித் திட்டத்திற்குப் உட்படுத்துவதும் அதற்கு தாம் பொறுப்பு நிற்பதும் அனுசரணை வழங்குவதும் அவற்றின் அரசியல் அணுகுமுறை.

இந்நிகழ்ச்சியிலிருந்து பின்வாங்கும் தரப்பு அனைத்துலக சமூகத்தில் பகைக்கு ஆளாகும். உலகளாவிய அதன் நிகழ்ச்சி நிரலுடன் பின்னிப்பிணையும் இச் சமாதானத்தை முறிக்கும் தரப்பு உலகத்தலைமை நாடுகளின் அரசியல் நலனையும் முறிக்கும் தரப்பாகும்.

டோக்கியோ மாநாட்டின் பின் யுத்தத்திற்கு திரும்புவது இலகுவானதல்ல என்பது விடுதலைப்புலிகளுக்கு தெரிந்திருந்தது. சிங்கள இனவாத அரசு சமஷ்டி என்ற தீர்வைத்தருவது கூட மனமொப்பி நடக்க கூடியதல்ல. அனைத்துலக சமூகத்திற்கு இலங்கையில் தேவைப்படுவது பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் போராட்டம் யுத்தத்திற்கு திரும்பவியலாக் கட்டத்திற்குள் நுழைந்த பின்னர் ஏமாற்றப்படும் சமயத்தில் செய்வதற்கு எதுவும் இருக்காது. தீர்வில் நலன் அற்ற அனைத்துலக சமூகத்தை நிர்ப்பந்திக்க வழியும் இருக்காது என புலிகள் அஞ்சினர்.

போதாதற்கு பலஸ்தீனம் பேச்சு ஒரு கெட்ட முன்னுதாரணமாக கண்முன் இருந்தது. இந்த நியாயமான அச்சம் காரணமாக புலிகள் டோக்கியோவைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.

இச்சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் கூட இச்சந்தேக உறவைப்பேண வேண்டியதும் அதில் புதிய வழிகளை புதிய அணுகுமுறைகளைக் கண்டடைய வேண்டியதுமே புலிகளின் தெரிவாக இருந்திருக்க வேண்டும்.

அனைத்துலகம் பொறுப்பேற்கும் இச்சமாதானத்தில் இவ்வுறவை முறித்துக் கொள்வதனால் எவ்வகையிலும் ஆயுதப்போராட்டம் முன்னேற வாய்ப்பிருக்காது. அத்தகைய தெரிவு அனைத்துலகத்துடனான மறைமுகப் போராகி பேரழிவைச் சந்திக்கும் என்பதே புலிகள் புரிந்து கொள்ளவேண்டியிருந்த யதார்த்தமாகும்.

அரசும் கூட சமஷ்டியைத் தீர்வாகத் தந்து விட மனமொப்பி வரவில்லை. அனைத்துலக சமுகத்தை பகைக்க முடியாது என்பதும் இப்பாதையில் தான் வெற்றிபெற புதிய வழிகளைக்கண்டு பிடிப்பதே தனக்கிருக்கும் ஒரே தெரிவு என்பதுமே மாநாட்டில் கலந்து கொள்ளும் அரசின் நிலைப்பாடு.

ஆனால் அரசுடன் ஒப்பிடுகையில் இத்தகைய ஒரு பேச்சு முயற்சி போராட்ட அமைப்புக்கே அதிக ஆபத்தான விளையாட்டு என்பது மறுப்பதற்கு இல்லை. இருந்தும் புரிந்து கொள்ளப்படவேண்டியது. என்னவென்றால் அனைத்துலக சக்திகளின் நலன்சார்ந்த நிகழ்ச்சி நிரலை முறிப்பது மீண்டும் யுத்தத்திற்கு திரும்புவது அனைத்துலகத்துடன் மறைமுகப் போருக்குப் போவதற்கு ஒப்பானது.

தவிரவும் அப்போது உருவாகிய அனைத்துலக அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அச்சாணியில் சுழல்கிறது. இது சர்வ வல்லமை கொண்ட அரசியலாகவும் ஆயிற்று. இதைக் கருத்திற் கொள்ளாத தீர்மானம் எதுவும் கன்றுக்குட்டித் தீர்மானமாகவே அமையும்.

புலிகளின் டோக்கியோ புறக்கணிப்பை அனைத்துலகம் எதிர்பார்க்க வில்லை. இதனால் அனைத்துலகம் புரிந்து கொண்டது என்னவென்றால் புலிகள் தனிநாட்டைத் தவிர எதையும் ஏற்கப்போவதில்லை, போரையும் கைவிடப்போவதில்லை, புலிகள் பேச்சுக்கு வந்தது சூழ்நிலைத் தந்திரமே. இந்தப் புரிதலால் அனைத்துலகம் புலிகளை கடுமையாகக் கையாளும் நிலையை நோக்கி அடியெடுத்து வைத்தன. அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன் மீண்டும் புலிகளை தடை செய்தது.

தீர்வுக்குப் பொறுப்புக் கூறும் தரப்பாகவும், புலிகளின் நட்புச் சக்தியாக உறவை வளர்த்துக் கொள்ளத் தயாராகவும் இருந்த மேற்குலகு தம் கதவுகளை அடைத்து புலிகளுக்கு துர் சமிக்ஞை கொடுத்தது.

பிரத்தியேக சந்திப்புக்கள் மூலமாகவும் புலிகளுக்கு வரப்போகும் ஆப த்தை எடுத்துரைத்தன. பேச்சில் இருந்து பின்வாங்க முடியாது என்பதையும் யுத்தம் சாத்தியமில்லை என்பதையும் அவ்வாறு முயற்சித்தால் இரக்கமற்று போராட்டம் ஒடுக்கப்படும் என்பதையும் நோர்வே எடுத்துரைத்தது.

புலிகள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. விட்டுக் கொடாமையே தமது பலம் என ஒப்பினர். காண்காணிப்புக்குழுவில் வகித்த இருநாடுகள் புலிகளின் தடையை ஆதரித்ததனால் அவ்விரு நாடுகளையும் கண்காணிப்புக்குழுவில் இருந்து அகற்றக்கோரி நிறைவேற்றியும் கொண்டனர். புலிகள் பகையை வளர்த்தனரே தவிர தணிவித்தார். இல்லை.

அனைத்துலக சமூகம் விடுத்த தூர் சமிக்கைஞைகளை புலிகள் கண்டுகொள்ள மறுத்தனர். அனைத்துலகத் தலைமைச் சக்திகளின் பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற நிகழ்ச்சி நிரலில் ஈழப்போராட்டம் உட்படுத்தப்படாமல் இருக்க அனைத்துலகச் சமூகம் எடுத்த முயற்சிகளை புலிகளே ஒரு வகையில் தோற்கடித்தனர் எனலாம். தொலைநோக்கற்ற தீர்மானம் இதற்கு காரணமாயிற்று.

புலிகளிடம் இருந்த தியாகம், வீரம் நேர்மைக்குணம் என்பவற்றிற்கு இத்தீர்மானம் சான்றாகலாம். ஆனால் அரசியல் விவேகத்திற்கு இத்தீர்மானம் சான்றாகவில்லை.

தொடரும்..


*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar