ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 15


வழிகளைக் காணாத பயணம் இலக்கைப் போய்ச் சேராது - குணா.கவியழகன்
நோர்வே பேச்சுவார்த்தையில் சமஷ்டி பற்றி எட்டப்பட்டது உடன்பாடோ பிரகடனமோ இல்லை, அது சமஷ்டியை பரிசீலிப்பதான உரையாடல் மட்டுமே என புலிகள் அறிவித்தனர். ஆயினும் பேச்சு முயற்சியில் தாம் பற்றுறுதியுடன் இருப்பதாகவும் சமாதான வழியில் முன்னேறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து யுத்தத்திற்குத் திரும்புவதற்கான புறநிலை இல்லை என்பது அப்போது புலிகளுக்குத் தெரிந்து தான் இருந்தது. எனவே வேண்டியது ஒரு அரசியல் பயணம் என்றபோது அந்தப் பயணத்திற்கு தேவையான வழிகளை அமைக்கவும், தடைகளை அறுக்கவும் வேண்டியது முன் நிபந்தனையாகும்.

பேச்சு வார்த்தையில் முன்னேறியே ஆகவேண்டும் என்பது ஒரு வகை நிர்ப்பந்தமான தெரிவு. மீதமுள்ள பயணத்தை இவ்வழியில் முன்னெடுப்பதற்கு இரண்டு நிபந்தனைகளை புலிகள் பூர்த்தியாக வேண்டியிருந்தது. ஒன்று இந்தியாவுடனான தமது உறவை மறுசீரமைத்துக் கொண்டு அனுசரிப்பது. இரண்டாவது வடக்கு கிழக்கின் தேசிய பிரக்ஞையை வலுப்படுத்தி ஒரு வெகுஜனப் போராட்டத்திற்கு மக்களையும் அமைப்பையும் தயார்படுத்திக் கொள்வது.

இலங்கைத்தீவில் இந்தியா என்ற பிராந்திய வல்லரசை மீறி அனைத்துலக நாடொன்று தீர்வைத் திணித்துவிட முடியாது. தவிரவும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு மிகமிக வலுவானது.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான யுத்தத்தை எதிர்பார்த்திருக்கும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவும் அனுசரணையும் அவசியமானது. சீனாவிற்கு எதிரான முடக்கற் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்தியா அமெரிக்காவின் இணைபிரியா பங்காளியாக இருக்கிறது. இந்தியா அனைத்துலக அரசியலில் தனக்கான முக்கிய வகிபாகத்தைத் தேடும் பொருட்டு அமெரிக்காவுடன் அனுசரிக்கும் அரசியற் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் விருப்பு வெறுப்புக்களை மீறி இலங்கைப் பிரச்சினையில் தீர்மானம் எதனையும் எடுத்துவிட முடியாத அளவிற்கு மேற்குலகம் இந்தியாவுடன் கேந்திர உறவைக் கொண்டிருந்தது. எனவே இந்தியா புலிகளைக் குரோதக் கண்கொண்டு பார்க்கும் நிலைளை மறுசீர் செய்தே ஆகவேண்டிய கடப்பாடு புலிகளுக்கு இருந்தது.

பேச்சு முயற்சி தொடங்கிய காலகட்டத்தில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தன் உடல்நிலை கருதி இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்து இப்பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வேண்டுகோளை விடுத்தார். இதன் மூலம் புலிகள் இந்தியாவுடன் உறவை மறுசீரமைக்கும் சமிக்ஞையைத் தெரிவித்தனர். இந்தியா இதனை ஒத்துக்கொள்ளவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தில் மூடிய கதவுகளை மீண்டும் திறந்து புலிகளை அனுமதிக்க இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினர். விடுதலைப்புலிகளும் இந்தியாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அதை இந்தியாவே புறக்கணித்த நிலையை உருவாக்கி விட்டதோடு நிறுத்திக்கொண்டனர். சமாதான முயற்சியில் இனி இந்தியா மூக்கை நீட்டுவதற்கான முகாந்திரம் இல்லை என்பதே புலிகளுக்கு ஆறுதலளிக்கும் அரசியல் கணக்காக இருந்தது. திருப்தியும் பட்டுக் கொண்டனர்.

இந்தியா இப்பேச்சு முயற்சி நீண்டு நிலைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் மேற்குலகம் இதில் தீர்மானமாக இருந்து பேச்சை முன்னெடுத்துச் செல்லும் சூழலில் இந்தியா திட்டவட்டமான கொள்கையை இதில் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.

இதனால் பின்னைய நாட்களில் யதார்த்தத்தை உணர்ந்தது இந்தியா. பலிகளுடன் தொடர்பாடலைப் பேணவும் தீர்மானத்திற்கு வரவும் முயற்சி செய்தது. ஆனால் புலிகளின் பக்கத்தில் இருந்து இம்மாதிரியான ஒரு முயற்சி எடுக்கப்படவில்லை. அக்கறை காட்டப்படவும் இல்லை. இறுதியில் சமிக்கைகளுக்கு போதிய பொறுப்புணர்வான பதில் அணுகுமுறைகூட புலிகளால் காட்டப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்தியாவின் கோரிக்கைகளோ, அணுகுமுறையோ விரும்பத்தக்கதாக இல்லாதபோதும், சந்தேகம் தருவனவாக இருந்தாலும்கூட இந்திய உறவில் போதிய அக்கறை காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் மீதமுள்ள பயணத்திற்கு இவ்வுறவு பூர்த்தி செய்யப்படுவது ஒரு வகையில் முன்நிபந்தனையாகும்.

இது விடயத்தில் போதிய விழிப்புணர்வை எடுத்துக் கொள்ளாமையின் விளைவு சமாதானம் நெருக்கடிக்குள்ளாவதற்கு இந்தியாவின் மறைகரங்கள் கணிசமானளவு காரணமாயின.

புலிகள் மீதுள்ள இந்தியாவின் சந்தேகங்கள், அச்சங்கள், பகையுணர்வு சீர்செய்யப்படாமல் புலிகள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இப்பேச்சு முயற்சியில் வெற்றி பெறுவதையோ அதிசுரத்தைக் கைப்பற்றுவதையோ இந்தியா விரும்பியிருக்கவில்லை.

இரண்டாவது விடயம் வடக்குக் கிழக்கில் தேசிய பிரக்ஞையை வலுப்படுத்துவதும், வெகுசனப் போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்து கொள்வதும் தொடர்பானது.

சமாதானப் பயணத்திற்கு அகப்பலம் பூரணப்படுத்தப்படுவது இன்றியமையாதது. இதற்கு போதாமையுடன் காணப்பட்ட தேசிய பிரக்ஞையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு போதிய அக்கறை காட்டப்படவில்லை.

பேச்சுக்கான ஒப்பந்தத்தில் வடக்குக்கிழக்கை இணைக்கும் மணலாற்றின் ஊடான வீதியை திறக்க கோரிக்கை விடப்படாதது பெரும் தவறாக இருந்தது. இலகுவில் திறந்திருக்கக்கூடிய இயலுமையைப் புலிகள் கொண்டிருந்தபோதும் இது தொடர்பான போதிய விழிப்புணர்வை எடுத்துக் கொள்ளாதது தவறாயிற்று.

இரு மாகாணங்களுக்கிடையிலான தொடர்பாடலை எல்லா நிலையிலும் வலுப்படுத்தி தேசிய பிரக்ஞையை பலம் பெற வைப்பதற்கான அரசியல் சமூக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். வசதியும், வாய்ப்பும், அவகாசமும் போதியளவு இருந்தபோதும் இத்தகைய வேலைத்திட்டம் ஒன்றை புலிகள் வகுத்துக் கொள்ளவில்லை.

இதனால் கிழக்கு ஒரு பலவீனப் புள்ளியாகவே நீடித்தது எனலாம். கருணாவின் பிரிவைத் தொடர்ந்து கருணாவை அரசு அரசியலிலும் பயன்படுத்த முடிந்ததென்றால் இப்பலவீனத்தைக் கருத்தில் கொண்டுதான்.

ஆயுதப்போராட்டத்திற்கான வாய்ப்புக்கள் அரசியலில் மறைந்தவிடத்து பேரத்தை பேணுவதற்கான அழுத்தப் புள்ளியை உருவாக்கிக் கொள்வது அவசியமானது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதில் இதயபூர்வமாக இல்லை என்பது மிகவும் வெளிப்படையானதே. ஆனால் ஆயுதப்போரைத் தொடர்வதற்கு வாய்ப்பற்ற போது அடையப்பட்ட இலக்கில் இருந்து முன்னேறுவதற்குத் தேவையான வழிகளை ஏற்படுத்திக் கொள்வது தலைமைத்துவத்தின் கடமையாகும். அனைத்துலக தலையீடு என்ற அம்சத்தில் வெகுசன போராட்டத்தை தயார்செய்ய வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.

இத்தகைய ஒரு வெகுசனப் போராட்ட இயக்கத்தை உருவாக்கி இருந்தால் அதனை இப்பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்திற்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு அழுத்தப்புள்ளியாக பயன்படுத்தியிருக்க முடியும். மட்டுமல்ல, புலிகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு பாதுகாப்பரணாகவும் பயன்படுத்தியிருக்க முடியும்.

'பொங்கு தமிழ்' இயக்கம் இதற்கான நல்ல தொடக்கமாகவும் முயற்சியாகவும் இருந்தது. வெற்றிகரமான வெகுசன மக்கள் இயக்கமாக இருந்த பொங்குதமிழ் இயக்கம் புலிகளின் ஏகதலைமைத்துவத்தை ஜனநாயக வழியில் காட்சிப்படுத்தவும், புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் முயன்றதோடு சுருங்கிப்போனது.

இது மாதிரியான சொந்த வெகுசன இயக்கமே மீதமுள்ள பயணத்திற்கு புலிகளுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் கண்ட வலுச்சமநிலையை ஆதாரமாகக் கொண்டு எழுந்த சமரச ஒப்பந்தத்தில் பேச்சு முயற்சியில் தொடர்ந்து முன்னேறக்கூடிய போராட்டவடிவமாக வெகுசன இயக்கம் ஒன்றே பொருத்தமான தெரிவாக இருந்தது.

ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் புலிகளால் தொடக்கப்பட்டும் கூட போதிய விழிப்புணர்வு இன்மையினாலும் குறுகிய கொள்கைக்குள் சுருங்கிப்போனதாலும் அது தொடரப்படவில்லை. அல்லது மீதமுள்ள பயணத்தை வெகுசன போராட்ட வடிவமூடாக தொடரலாம் என்றோ அவ்வாறு தொடர முடியும் என்றோ புலிகள் நம்பிக்கை கொள்ளவில்லை.

மொத்தத்தில் இந்திய உறவை மீள் சீராக்கம் செய்வது, வெகுசன போராட்ட இயக்கத்தை உருவாக்குவது என்ற இரண்டு முக்கிய விடயத்தில் புலிகள் அடியெடுத்து வைத்தபோதும் குறுகிய கொள்கை மனப்பாங்கால் அல்லது அநாவசியமான அச்சங்களினால் அது சரியான வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்படாமல் போனது.

சமாதானத்தில் தொடர்ந்து முன்னேறக்கூடிய வாய்ப்புக்களை கைதவற விட்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாகிற்று.

தொடரும்.. (நன்றி-குணா.கவியழகன் L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar