ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கொடுமையை புரியத்தொடங்கியுள்ளனர் சிங்கள மக்கள்!

http://www.globaltamilnews.net/Portals/0/GlobalResources/EN/images/01-12-2012/MahindaPoster_CI.jpg
சிறீலங்கா அரசாங்கம் தென்னிலங்கையில் தனது ஆட்சியைத் தக்க வைப்பதற்காக மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்திச் செல்கின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் போன்று கணிக்கப்பட்டு அவர்கள் அடிமைகள் போன்று நடத்தப்பட்டமையாலேயே ஆயுதப் போராட்டம் வெடித்தது.

தொடர்ந்து தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துவதன் மூலமே அவர்களை மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரத்தை நோக்கித் தள்ள முடியுமென்ற கள யதார்த்தத்தை நன்கு உணர்ந்த சிறீலங்கா அரசாங்கம் அதன் வழியே நகர்ந்துகொண்டிருக்கின்றது.
தென்னிலங்கையில் தற்போது மகிந்த குடும்பத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து இதுவரை யுத்தத்தையும் யுத்தத்தின் வெற்றியையும் காரணம் காட்டி சிங்கள மக்களை மாயத் தோற்றமொன்றுக்குள் தள்ளிவிட்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருந்த மகிந்த குடும்பத்தைப் பற்றி சிங்கள மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டனர்.
செல்வந்த நாடுகளில் குடியுரிமை கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச கும்பத்தினர் சிறீலங்காவில் தமது அராஜகங்களை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றமை தற்போது தான் சிங்கள மக்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது. தங்கள் பெயரில் பல பில்லியன் ரூபா செலவில் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைக்கின்ற மகிந்த குடும்பத்தின் செயற்பாடுகளால் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நிலையானது யுத்த காலத்தில் இருந்ததை விட தற்போது  மிக மோசமாக இருக்கின்றது. பொருட்களின் விலையானது என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. நாடு இந்த நிலைக்குள் செல்வதற்கு மகிந்த குடும்பமே காரணம் என்பது சிங்கள மக்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கின்றது.

வெளிநாடுகள் செய்கின்ற உதவிகளுக்கு மேலதிகமாக சிறீலங்கா அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் பல பில்லியன் ரூபாய்களை கடனாக வாங்கி தமது பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டு வருகின்ற தகவல்களும் தற்போது சிங்கள மக்களுக்கு கசியத் தொடங்கியிருக்கின்றன.
இவற்றை விட, அண்மையில் வெலிவேரியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மகிந்தவின் தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே சிங்களப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விடயமும் தற்போதுதான் சிங்கள மக்களுக்கு தெளிவாக புரிந்திருக்கின்றது. சுத்தமான குடிதண்ணீர் கேட்டு போராடிய மக்களையே கொல்லத் துணிந்த மகிந்த குடும்பம் இனியும் நாட்டில் ஜனநாய ஆட்சியை நடத்தமாட்டாது என்ற உண்மை தற்போதுதான் சிங்கள மக்களுக்கு புரிந்திருக்கிறது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் செல்வாக்கு வெகுவாக குறைந்துகொண்டு செல்கின்றது. இந்த நிலையிலேயே தமது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்த மகிந்த குடும்பம் முயன்று வருகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகவே இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் இரண்டு கருத்து இருக்கின்றது. இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஜனாதிபதி மகிந்தவும் இதனை ஏற்கனவே கூறியிருக்கின்றார். கூட்டமைப்பின் இந்த வெற்றியானது அரசாங்கத்திற்கு ஒருவகையில் சாதகமாக அமைகின்ற அதேவேளை மறுவகையில் பாதகமாக அமையும் என்று அமைச்சர்கள் கணிப்பிட்டிருக்கின்றனர். கூட்டமைப்பு வென்றால் சிறலங்கா அரசாங்கம் சர்வதேச ரீதியான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். மாறாக, கூட்டமைப்பின் வெற்றியானது அரசாங்கம் தென்னிலங்கையில் தனது ஆட்சியைத் தக்க வைப்பதற்கு மிகவும் சாதகமான போக்கை உருவாக்கும்.
எப்படியென்றால், கூட்டமைப்பை புலிகளாக வர்ணித்து வடக்கில் இனவாத சக்தி ஆட்சிக்கு வந்துவிட்டது. இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் கூறி தென்னிலங்கையில் தனது மகிந்தவின் ஆட்சியை நீடிப்புச் செய்ய முடியும். யார் எதைக் கூறினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுமே தற்போதும் தென்னிலங்கை ஆட்சியைத் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடையும் பட்சத்தில் வடக்கில் மீண்டும் புலிகளின் ஆட்சி அமைந்துவிட்டது.
மீண்டும் அங்கே ஆயுதப் போராட்டம் தொடங்கப் போகின்றது. அதனை முறியடிக்க நாங்கள் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அரசு தென்னிலங்கையில் பிரசாரத்தை முன்னெடுக்கும். அதற்கு ஏற்றாற்போல சிறீலங்கா இராணுவமே வன்னியிலோ யாழ்ப்பாணத்ததிலோ சில குண்டுகளையும் வெடிக்க வைக்கலாம். அதன் பின்னர் வன்னியின் அடாந்த காடுகளில் விமானத் தாக்குதல்களும் நடத்தப்படலாம். இவ்வாறானதொரு நிலை ஏற்படுத்தப்பட்டு, சிங்களப் பிரதேசத்தில் அரச ஊதுகுழலாகச் செயற்படுகின்ற ஊடகங்கள் மூலமாக இதனை அம்பலப்படுத்தினால் ஏற்கனவே புலி என்றால் கிலி கொள்ளும் சிங்கள மக்கள் மீண்டும் மகிந்த அரசாங்கத்தை நம்புவார்கள்.
மீண்டும் ஒரு ஆறு அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மகிந்தவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை மகிந்த குடும்பத்திடம் உண்டு. இதற்கு ஏற்றாற்போலவே தற்போதும் வடமாகாணத்தில் சிறீலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மிக முக்கியமான மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்வதால் இங்கிருக்கின்ற இராணுவத் தளபதியும் முக்கியமானவராக, அதிகாரம் மிக்கவராக திகழ்கின்றார். இவர் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் நிரந்தர இராணுவ ஆட்சிக்கான அடித்தளத்தை இட்டு வருகின்றார் என்பது மறுக்க முடியாதது.
அண்மையில் இவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியன்றில், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தல் பிரசாரத்திற்காக ஆயிரக்கணக்கான முன்னாள் புலிகளை இணைத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் தீவிர போராட்ட குணத்துடன் இருக்கின்றார்கள். கூட்டமைப்பு வேட்பாளர்கள் புலிகள் தொடர்பாக பிரச்சாரம் செய்து மக்களை கொதித்தெழ வைக்கின்றனர். மீண்டும் போராட்டம் வெடிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே, யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் இராணுவ முகாம்களையும் விஸ்தரிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இவரின் கூற்றானது வெறுமனே அலட்சியப்படுத்தப்படக்கூடியதல்ல. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பிராந்தியத்தில் இராணுவத்தின் இருப்பைத் தக்க வைப்பதற்கும் இங்கு யுத்த சூழ்நிலை உள்ளது என்பதை வெளிக்காட்டுவதற்கும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி முற்படுவதன் மூலமாக தென்னிலங்கையில் மகிந்த அரசாங்கத்தை தக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
மகிந்தவுடன் நெருங்கிய நபராக விளங்குகின்ற ஹத்துறுசிங்க மகிந்த குடும்பத்தைப் பாதுகாப்பற்கு முற்பட்டு வருகின்றார். இவரைப் போன்றே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் இராணுவத் தளபதிகளும் கடந்த சில மாதங்களாக வடக்கில் அதிகரித்த படைப் பிரசன்னத்தை வலியுறுத்தி வருகின்றனர். இது தமிழ் மக்களின் விடுதலை உணர்வைத் தொடர்ந்தும் மழுங்கடித்து தமிழ் மக்களை அடக்கியடுக்குகின்ற ஒரு செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது. இதற்கு புறம்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சிங்களத் தலைமைகள் விமர்சிக்கின்ற விதத்தை நோக்குகின்ற போது தென்னிலங்கை ஆட்சியைத் தக்க வைப்பதற்கான காய் நகர்த்தல்கள் தென்படுகின்றன.
கூட்டமைப்பு இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் போது முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களும் இந்த  விஞ்ஞாபனமும் பெருமளவு ஒத்த தன்மையுடையனவாகவே இருக்கின்றன. ஆனால், இந்த தடவை இது தொடர்பில் தென்னிலங்கையிலுள்ள அரச ஆதரவுக் கட்சிகளும் படைத்தரப்பும் ஏன் அதிக கரிசனைப்பட வேண்டும்.
எனவே, தென்னிலங்கையில் மகிந்த குடும்பமும் வடக்கே இராணுவத் தளபதிகளும் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களும் நடைபெறுகின்ற சம்பவங்களையும் உற்று நோக்குகின்ற போது ஏதோ பாரிய வேலைத்திட்டங்களுடனேயே ஆட்சியாளர்கள் தமது காய் நகர்த்தலை மேற்கொள்கின்றார்கள் என்ற உண்மைத்தன்மை வெளிப்படுகின்றது. காலம் காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அழிவில் ஆட்சி நடத்தியதைப் போன்று தற்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் தமிழ் மக்களின் அழிவிலிலேயே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றது.
மேலும் தனது ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தற்போது வலுவான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழர் தரப்பு தெளிவாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். கடந்த காலங்களில் நாங்கள் யதார்த்தத்தை மறுதலித்த காரணங்களால் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. எனவே, தற்போது இருக்கின்ற தமிழ்த் தலைமைகள் இந்த விடயங்களில் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயம் தொடர்பில் தற்போதே சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலமாக தமிழ் மக்களின் பாதுகாப்பை இறுக்கமாக்கலாம். இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் மூலமாக சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கு இந்த விடயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழர்களின் இருப்பைத் தக்க வைப்பதுடன் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு இனிமேல் சர்வதேசத்தின் அனுசரணையே அவசியம் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நன்றி: ஈழமுரசு - தாயகத்தில் இருந்து வீரமணி
GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar