வடக்கு வாழ் மக்களால் மட்டுமன்றி, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்
உறவுகளாலும், அனைத்துலக நாடுகளினாலும் மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தேறி விட்டது.
வாக்காளர் பெருமக்களின்
விழிப்புணர்வால், எதிர்பார்த்ததையும் விடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சிறப்பான அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு
சார்ந்த தரப்புகளால் தேனொழுகும் பிரசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும்,
கவர்ச்சிகரமான ஆசையான வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், வடக்கு
வாக்காளர்களை ஏமாற்ற இயலவில்லை.
தேர்தலில் போட்டியிட்ட அரசு சார்பில்லாத
கட்சிகளின் அமோக வெற்றியைத் தடுத்துவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின்
நோக்கத்தை, அதன் பலம் மிக்க பரப்புரைகள் மற்றும் தகிடு தத்தங்களால் ஈட்ட
முடியவில்லை. வடக்கு மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
மிகக் குறிப்பாக, புலனாய்வாளர்கள்
மற்றும் இராணுவத்தின் எடுபிடிகளின் அச்சுறுத்தல்கள், வன்முறைகள்
வெளிப்படையாக இருந்த போதிலும் , வடக்கு வாக்காளர்கள் உதாசீனம் செய்து
உதறித் தள்ளிவிட்டதையே தேர்தல் முடிவுகள் முழுமையாகத் தொட்டுக்
காட்டுகின்றன.
போரின் போதும், அதன் பின்னரான கடந்த
நான்கு வருட காலத்திலும், வடக்கு மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை
அரைகுறையாகவேனும் பூர்த்தி செய்வதில் அரசு முழுமையான அக்கறை காட்டவில்லை.
பிரசாரம் நூறு வீதமும் செயல் இருபது
வீதமும் என்ற வகையிலேயே அவை நடந் தேறின. தேர்தலில் போட்டியிட்ட அரசு சாராத
கட்சிகள், மிகக் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்
கட்சி) உள்நாட்டு, வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்களுக்குள்
எண்ணெய் விட்டுக் கொண்டும் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டும் உன்னிப்பாகச்
செயற்பட்டதாலேயே 68 சதவீத வாக்களிப்புச் சாத்தியமானது என்பது ஊன்றிப் பதிய
வேண்டிய ஒன்றாகும்.
தேர்தல் நாளன்று ஒரு புனித கடமையை
நிறைவேற்றும் பாங்கில், காலை வேளையில் தமது ஜனநாயகக் கடமையை வடக்கு வாழ்
மக்கள் மிக்க ஆர்வத்தோடு நிறைவேற்றினர்.
அது மட்டுமன்றி, தமது தீர்ப்புடன்
வடபகுதியின் சக மக்களும் ஒத்தியங்கினரா என்பதனைக் கண்டறிவதற்காக தேர்தல்
முடிவை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.
வாக்காளர் பெருமக்களின் அந்த ஆவல்
நேற்று இப்பத்தியை எழுதும் போதும் தளராது இருந்தது. வேட்பாளர்கள் பெற்ற
விருப்பு வாக்குகளை அறிவதில் காட்டிய தீவிர ஆர்வம் அதனை வெளிப்படுத்தியது.
மொத்தத்தில் வடக்கு வாழ் மக்கள் தமது
இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமது விருப்பை அமோகமாக வெளிப்படுத்தி
உள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நீண்ட காலமாக நடத்தாமல், அதற்கான
உப்புச் சப்பற்ற காரணங்களை முன்னிறுத்தி வந்த அரசாங்கம், திடீரெனத் தனது
மனதை மாற்றியதும், தேர்தலை நடத்தியதும் தனது சொந்த உள்ளார்ந்த
விருப்பத்தினால் அல்ல.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட
வெளிநாடுகள் அந்தரங்க மாகக் கொடுத்த அழுத்தமே அரசை இந்த வழிக்கு உந்தியது
என்பது இரகசியமல்ல. ஆனால் அதனைப் பூசி மெழுகிவிட்டு, தானே சொந்தத்தில்
சுயவிருப்பத்துடன் அதனைச் செயலாக்கியதாக அரசும் அதன் அமைச்சர் பிரதானிகளும்
மார் தட்டிப் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதேவேளை, வடக்கு மக்கள் தமது தீர்ப்பின்
ஊடாக முக்கிய செய்தியை வெளியிட்டிருப்பதும் ஊன்றிக் கவனித்தாக வேண்டிய
ஒன்றாகும். முப்பது வருடகாலமாக ஆயுதப் போராட்டம் வெறும் அபிவிருத்திக்கா
நடத்தப்பட்ட ஒன்றல்ல.
அர்த்தமுள்ள அதிகாரங்கள் நிறைந்த அரசியல் தீர்வே அதன் முழுதார்ந்த குறிக்கோள்.
அதனை வலியுறுத்தும், வகையிலேயே, வடக்கு வாக்காளர்கள் தமது வாக்குகளை தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
அவர்களது நிதானமான முடிவு மக்கள்
சிந்தனை, மஹிந்த சிந்தனையை விஞ்சி எழுந்திருப்பதனை அரசு மறந்து விடலாகாது.
மறுபுறத்தில், வடமாகாண சபைத் தேர்தலை உன்னிப்பாகக் கவனிக்கிறோம்,
உள்ளார்ந்து அவதானிக்கிறோம் என்று தெரிவித்த தரப்புக்கள் ஐக்கிய நாடுகள்
சபையின் செயலாளர் நாயகம் முதற்கொண்டு அனைத்துலக நாடுகளின் அரசுகள் மற்றும்
உயர்மட்ட அதிகாரிகள் வரை
இது விடயத்தில் இலங்கை அரசு அக்கறையுடன்
செயற்படுத்துவதற்கு உந்துதல் கொடுக்குமா, அதற்கான அடிகளை அவை
முன்வைக்குமா என்பதனை வாக்களித்த மக்கள் உரிமையோடும் உன்னிப்பாகவும்
எதிர்பார்த்து நிற்கின்றனர்.
|
Ingen kommentarer:
Legg inn en kommentar