நினைவுகள் வரலாற்றையும், கடந்த காலத்தையும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பவை. அதனால்தான் அவற்றை அழிப்பதில் அதிகாரத் தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றது.
இந்த நுண் அரசியலில் நின்றபடியே
விடுதலைப் புலிகளும் நினைவிலிருந்து அகற்றப்படுகின்றனர். முள்ளிவாய்க்கால்,
பேரவலத்தின் குறியீடாக மாறியிருந்தாலும், அந்தக் குறியீட்டின் ஒளி
மங்கிவருகின்றது. ஆனால் முள்ளிவாய்க்காலில் இருந்த ஒரு பொருள் "கறள்' ஏறி,
கலர் மங்கி நின்றாலும் அது வைத்திருந்த கடந்த கால நினைவை உயிர்ப்புடன்
வைத்திருந்தது.
முள்ளிவாய்க்கால் என்றதும் முதலாவதாக
நினைவுக்கும் வரும் "பர்ஹா' கப்பலை இன்னும் சில காலங்களில் யாரும் பார்க்க
முடியாது. அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த
இடத்தில பெரிய கப்பல் நின்றது என்ற வசனங்களை மட்டுமே சில வருடங்களுக்கு
பேசமுடியும். ஏனென்றால் கப்பலைச் சிங்களவர்கள் இரும்புக்கு
விற்றுவிட்டார்கள்.
இந்த இடத்தில் அந்தக் கப்பலோடு
கரைந்திருக்கின்ற சில நினைவுகளை பதிவிடலாம். ஏனெனில் எதிர்காலத்தில் தமிழ்
என்றொரு மொழியும், வரலாற்றுத் தேடலுமுடைய குழந்தைகள் வந்தால் படித்துப்
பெருமைகொள்ளட்டும்.
கப்பலடிக் காதல்
கொப்பியில் எழுதியிருந்த எழுத்தெல்லாம்
தலைகீழாகத் தெரிந்தது அவளுக்கு. அம்மா, 4 மணிக்கே எழுப்பிவிட்டிருந்தார்.
அந்தக் கிராமத்திலிருந்து ஏ.எல் படித்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு
அப்படியயாரு தண்டனை.
முந்தநாள் இருந்தபடி நித்திரை கொண்டு
விழுந்ததால் அவளின் தலையின் இடப்பக்கம் அடிபட்டு வீங்கியிருந்தது. நேற்று,
நெற்றிக்கு மேலே சுருட்டி விடப்பட்டிருந்த தலைமயிரின் ஓரங்களை குப்பி
விளக்கில் கருக்கியிருந்தாள்.
விளக்கு நெருப்பில தலைமயிர் பொசுங்கும்
வரைக்குமா நித்திரைகொண்டு விழுந்தனி என்று தலைவாரும்போது அம்மா
கேட்டபோதுதான் அவளின் நித்திரை வெறி எவ்வளவு விசேமானது என்பதை
அறிந்திருந்தாள். இன்றும் அப்படித்தான்.
அரைமயக்கத்தில் எழுத்துக்களை
உச்சரித்துக் கொண்டிருக்கையில், அவளுக்கு சொர்க்கம் அருகில் தெரிந்தது.
அம்மா.. அய்யா.. அண்ணா.. என்ற குரல் மட்டும் எங்கேயோ தொலைவில் அவளுக்கு
கேட்டது.
ஆனால் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில்
திடுக்கிட்டு எட்டிப் பார்த்தாள். வாசலில் வரியுடை சேர்ட்டும், அரைவாசிக்
காலுக்கு மேல் மடித்து விட்ட வரியற்ற ஜீன்சும் அணிந்த ஒருவன் வீட்டுக்காரரை
கூப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
"அம்மா யாரோ நிக்கினம்'' என்ற
வார்த்தைகளுக்குள் அவளின் குடும்பமே எழும்பியது. கப்பல் ஒண்டு வந்திருக்கு
ஐயா.. அதில இருந்து கொஞ்ச சாமான் இறக்கவேணும்.. வருவியளோ.. என்று அந்த
கடற்புலிப் போராளி கேட்டுக் கொண்டிருக்கையில் அவளின் அண்ணன், புறப்பட்டு
வெளியே போனான். போராளியும், அண்ணனும் காலையிருளில் மறைந்தனர்.
மறுநாள் முள்ளிவாய்க்கால் முழுதும்
விழாக்கோலம் பூண்டது. சிறுவர்கள் யாரும் பாடசாலைக்குப் போகவில்லை.
இவளும்தான். கப்பலடியில் ஊரே கூடியது. தலைக்குமேல் வண்டும், (ஆளற்ற உளவு
விமானம்) கிபிரும் சுற்றிய போதிலும் மக்கள் எதையும் கண்டுகொள்ளாது புதினம்
பார்த்தனர். அவளும் எட்டியயட்டிப் பார்த்தாள்.
மேல் தளத்தைப் புதினம் பார்த்துக்
கொண்டிருந்தாள். அப்போதுதான் அவனின் மின்னல் அவளை வெட்டியது. அப்படியேதான்
அந்தக் காதல் அரும்பியது. ஒரே ஒரு முறை கப்பலடி ஒழுங்கையில் கண்டு
கதைத்ததும், வற்றாப்பளை திருவிழாவில், ஏனைய போராளி நண்பர்களுடன் அவனைக்
கண்டு கதைத்ததுமே அவளின் காதல் காலத்தில் நடந்த மறக்க முடியாத
சந்திப்புகள்.
பின்னர் அடிக்கடி வீடு வரும்
போராளியாகினான். அவனின் வீட்டாருக்கும் அவனைப் பிடித்திருந்தது. அவளுக்கும்
ஏ.எல். படிப்பு முடிவுக்கு வர வன்னியில் ஆள்பிடிப்பும் ஆரம்பமாகியது.
ஆரம்பத்தில் அவள் உடனடித்
திருமணத்துக்கு மறுத்தாள். (ஆள் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக
செய்யப்பட்டவைகள் உடனடித் திருமணங்கள்). அவளின் அம்மாவுக்கோ இன்றைக்கோ,
நாளைக்கோ என்றிருக்கின்ற போராளியைத் திருமணம் செய்து வைப்பதில் மனச்சிக்கல்
இருந்தது.
ஆனால் வேறு வழியில்லை. நாள் முழுதும்
விமானத் தாக்குதல்கள் தொடர்ந்த ஒரு நாளில், இரவு 10 மணிக்கு, கைவேலியில்
அமைந்திருக்கின்ற, போராளிகளுக்கான திருமண மண்டபத்தில் அவனும், அவளும்
தம்பதிகளாயினர்.
அதன் பின் அவன் உடனடியாகவே போருக்குப்
போகவேணடியிருந்தது. திடீர் திடீரென்று, எந்தப் பொழுதிலாவது அவன் வருவான்.
ஒரு வருட இடைவெளியில் அவள் கர்ப்பிணித் தாயாகவும் தகைமை பெற்றாள். போர்
முடிவுக்கு வரும் நாள்களில் அவனின் ஆண்மகன் நிலம் தொட்டான்.
இறுதியில் ஓமந்தையில் அவனையும், அவள்
ஒப்படைத்தாள். ஆனால் அவன் மீண்டும் வரவேயில்லை. கப்பலடியில் கருவான
காதலுக்கு கருவான தமிழினியன் பாடசாலை செல்லும் வயதை எட்டியிருக்கிறான்.
அவனுக்கு இப்போது கப்பலடி தெரியாது.
அவனுக்கு இறுதியாக நினைவிருப்பது சன்சீ
கப்பல் பயணம்தான். ஆள்பிடி தீவிரமாகியிருந்த காலம் அது. இரவு பகலாக,
பிடிப்பவர்களும், பயந்தோடும் இளைஞர்களும் விழித்திருக்கவேண்டிய
தேவையிருந்தது. அந்தக் காலகட்டத்தில் அங்கிருந்த இளைஞர் சிலர் நிம்மதியாக
மறைந்திருந்த இடம், முள்ளிவாய்க்காலில் கரையயாதுக்கப்பட்ட ஜோர்தானிய
கப்பல்தான்.
மாக்சியமும், கம்யூனிசமும் பிறந்த இடம் கப்பலடி
போர் இறுதி வடிவம் எடுத்திருந்தது.
புதுமாத்தளன், வலைஞன் மடம் முள்ளிவாய்க்கால் மட்டும்தான் தமிழரின்
கட்டுப்பாட்டிலிருந்தது. அந்த காலகட்டத்தில் இராணுவமும் மக்களுக்குள்
ஊடுருவி, வரியுடை தரித்து மக்கள் மீதான தாக்குதல்களை நடத்திவருவதாக
சொல்லப்பட்டது. அந்த நேரத்தில்தான் தடைகளை உடைத்துக் கொண்டு சரணடையவும்
முற்பட்டனர்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு,
புலிகளின் முன்னாள் விசுவாசிகளும், பின்னாள் விரோதிகளுமாக மாறியிருந்த
கந்தையா, நொந்தையா, வெந்தையா போன்றோர், தலையில் தலைப்பாகையை கட்டிக் கொண்டு
புலியயதிர் பிரசாரத்தை, மாக்ஸிய, கம்யூனிச நோக்கில் தீவிரமாக முன்னெடுத்த
இடம் கப்பலடி..
ஆனால் அவர்கள் போதித்த மாக்ஸிய,
கம்யூனிச கோட்பாடுகளையும் தாண்டி ஆமிக்காரன் அடிச்ச செல் கப்பலடியில்
விழுந்து வெடித்துக் கொண்டிருந்தது. போர், வன்னி முழுதுமிருந்த மக்களை
ஓரிடத்துக்கு கொண்டு வந்து விட்டிருந்தால், சகல தேவைகளுக்கும் கடற்கரையையே
நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.
கழிப்பும், குளிப்பும் இதில் பிரதானம்.
கழித்தல் என்ற விடயத்துக்கு கப்பலடி மிகப் பொருத்தமான இடமாக இருந்தது.
குறிப்பாக பெண்களுக்கு ஓரளவு மறைவான இடத்தை இந்த ஜோர்தானிய கப்பல்தான்
வழங்கிக் கெளரவித்தது.
கிளைமாக்ஸ் நடந்த இடம் பெரும் சனத்திரளை
ஒரு பட்டிக்குள் அடைத்துவிட்டது போல மாறியிருந்த இறுதிப் போர்வேளையில்
பலரும் திசை மாறிப் போயிருந்தனர். பயமும் பீதியும் விரக்தியும் "எங்கு
செல்வோம்?'' என்ற மனநிலையை இலகுவாக உருவாக்கிவிட்டிருந்தது.
ஆகவே பிள்ளைகள் இலகுவாகத்
தவறிப்போயினர். வயதானவர்கள் காணாமல் போயிருந்தனர். இயக்கத்திலிருந்து
ஓடிவந்த பிள்ளைகளைத் தேடித்தேடியே பெற்றோர்கள் அலைந்தனர். இப்படியிருந்த
அனைவரையும் அடையாளம் வைத்து இணைத்த இடம்தான் கப்பலடி.
ஏனெனில் பிரமாண்டமாக அடையாளப்படுத்திக்
கொள்ளக்கூடிய ஓர் இடமாகக் கப்பலடி மட்டுமே எஞ்சியிருந்தது. "...கப்பலடிக்கு
வா... நான் வந்திடுவன்...'' என்ற அடையாளப்படுத்தலை பெரும்பாலானவர்கள்
கொண்டிருந்தனர். அதனால்தான் முள்ளிவாய்க்கால் போரின் உச்சமான காட்சி
(கிளைமாக்ஸ்) நடந்த இடமாக கப்பலடி நினைவுகூறப்படுகின்றது.
இறுதி மாவீரர் துயிலுமில்லம்
போராளிகள் அதிகமதிகமாக வீரச்சாவை
தழுவிக்கொண்டிருந்தார்கள். விதைக்க துயிலுமில்லங்கள் இருக்கவில்லை.
புதுக்குடியிருப்போடு மாவீரர் விதைநிலங்களுக்கு இடமே இருக்கவில்லை.
பெருகியிருந்த சனத்திரளுக்கு கொட்டிலடிக்கவே இடமிருக்கவில்லை.
அப்படியிருக்கையில்தான் மாவீரர்
விதைப்பிற்காக ஓர் இடத்தை கப்பலடி ஒழுங்கை தந்தது. (கப்பல் பார்க்க
செல்பவர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கிரவல் பாதையை கப்பலடி றோட் என
அழைத்தனர்) அதில் இருந்த சிறு மணற்பரப்பில் என்றுமில்லாத முறையில்
மாவீரர்கள் விதைக்கப்பட்டார்கள்.
மாவீரர்களுக்கு புதிய வரியாடை
அணிவித்து, சந்தனப் பேழையில் அடக்கம்செய்வதே வழமை. ஆனால் இதற்கான வசதிகள்
அந்த நேரத்தில் இல்லாமையால், கிடங்கு மாதிரியான ஒன்றினுள், வெறும்
வரித்துணியை மாவீரர் மீது போர்த்தி விதைத்தனர். இறுதி மாவீரர்
துயிலுமில்லமாக கப்பலடி மாறியிருந்தது.
ஒற்றுமையான ஒரு விடயம் புலிகளின்
காலத்திலும், இராணுவத்தின் காலத்திலும் ஒரு விடயத்தில் மட்டும் கப்பலடி
ஒற்றுமையைப் பேணியது. அதாவது, கப்பலடி ஒரு சுற்றுலா மையம். வன்னி
முழுவதுமிருந்தும், இலங்கை முழுவதுமிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள்
கப்பலோடு ஒட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களுக்குப்
பிடித்தமான ஒரு விடயம்.
ஆனால் புலிகளின் காலத்தில் புகைப்படம்
எடுத்துக் கொண்டவர்கள், இது இயக்கம் கொண்டு வந்த கப்பல் என்று நினைவைப்
பதிவிடுகின்றனர். இராணுவம் இருக்கின்ற காலத்தில் புகைப்படம் எடுத்துக்
கொள்பவர்கள் இது ஆமிக்காரர் புலிகளிட்ட இருந்து மீட்ட கப்பல் என்று
நினைவைப் பதப்படுத்துகின்றனர். எப்படியாயினும் புகைப்படம் எடுத்துக்
கொள்ளத்தக்க இடம் கப்பலடி.
இவையயல்லாவற்றையும்விட இன்னொரு நினைவையும் இரும்பு வியாபாரத்தோடு விற்பனை செய்யவுள்ளோம்.அது, 23 டிசெம்பர் 2006
கப்பலடி உருவாக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால்
சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல்
கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள்
காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா
இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் இந்தியாவிலிருந்து
தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற
ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான "பர்ஹா - III'' என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட
தொழில்நுட்பக்கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரும்பக் காரணம்
என்று சிறிலங்கா கடற்படையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்தக் கப்பலையும் மாலுமிகளையும்
விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளனர் என்றும் கப்பலையும் மாலுமிகளையும்
காப்பாற்றுவதில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும்
தெரிவித்தனர்.
பெருகியிருந்த சனத்திரளுக்கு
கொட்டிலடிக்கவே இடமிருக்கவில்லை. அப்படியிருக்கையில்தான் மாவீரர்
விதைப்பிற்காக ஓர் இடத்தை கப்பலடி ஒழுங்கை தந்தது. (கப்பல் பார்க்க
செல்பவர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கிரவல் பாதையை கப்பலடி றோட் என
அழைத்தனர்) அதில் இருந்த சிறு மணற்பரப்பில் என்றுமில்லாத முறையில்
மாவீரர்கள் விதைக்கப்பட்டார்கள் மீது போர்த்தி விதைத்தனர்.
ஜெரா
(நன்றி-U) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar