நீங்கள் மீண்டும் வரவேண்டும்!


உலக வரலாற்றில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பல வெற்றி பெற்றன, சில தோல்வியுற்றன, ஒரு சில அறவே அழிந்துள்ளன. ஆனால் வெற்றி, தோல்வி அற்ற நிலையில் உலகில் தொடர்ந்தும் ஏதோ விதத்தில் ஆக்கிரமிப்பாளார்களான பௌத்த சிங்களவர்களுக்கு தொல்லை கொடுப்பதானால் அது தமிழீழ விடுதலைப் போராட்டமே.
2009ம் ஆண்டு மே மாதம் வரை பெய்து ஓய்ந்த மழையில் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காய்பவர்கள், நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையென வாழ்பவர்கள் பலர்.
மனநோய் வைத்தியசாலையில் முடிந்தவர்கள் சிலர். எந்தவித வாழ்வாதாரமும் இன்றி வாழ்பவர், உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என ஏங்குபவர், இந்த வாரம் மாதம் வருடம் தன்னும் எம்மை விடுதலை செய்வார்களா என காத்திருப்போர் பல ஆயிரம்.
சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் தடுப்பு முகாம்கள் - கொலை களங்களாகவும், சித்திரவதை கற்பழிப்பு முகாம்களாகவும் மாறியுள்ளன. தொடர்ந்து எழுதுவதானால் ஆயிரம் கதைகள் உண்டு. மிகச்சுருக்கமாக, எமது தாயக பூமியில் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலமபெயர் தேசத்தின் “அரசியல் சாம்பாரை”, “தமிழ்” என்ற கலப்புடன் ஆங்கில எழுத்தில் ஏ (A) யிலிருந்து சற் (Z) வரையும், உட்பூசல் நிறைந்த பல அமைப்புக்கள் திறமையாக குழப்புகின்றன.
இவர்கள் யாவருடைய அரசியல் கொள்கையிலும், “தமிழீழம்”  தவிர்ந்த வேறு எந்த கொள்கைகளும் காணப்படவில்லை. அப்படியானால் ஏன் பிரித்துள்ளார்களென ஒருவர் அறிய விரும்பினால், இதற்கு சிறந்த பதில், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஏற்பட்ட சிறு இடைவெளியில், தாம் ஏன் தலைவர் ஆக முடியாது என்ற ஆசை பலரிடம் காணப்படுகிறது எனலாம்.
ஏன் மற்றவர்கள் எம்மை தலைவர்களாக மதிக்கப்படாது என்ற அற்ப ஆசை ஒரு பக்கம், அடுத்து நாலு பேருக்கு முன்னிலையில் “அண்ணை தான் எங்கடை அமைப்பின் தலைவர் என தமது கையாட்கள் கூறுவதை கேட்டு மகிழும் இன்னுமொரு நப்பாசை சிலரை குடி கொண்டுவிட்டது.
உலக நீதிமன்றத்திற்கு சிறிலங்காவின் போர்க்குற்றம் பதிவு செய்யப்பட்டதோ இல்லையோ, கூடிய விரைவில் புலம் பெயர் தேசத்தின் அமைப்புக்களது உட்பூசல் பற்றிய குற்றச்சாட்டுகள் சர்வதேச நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்புக்கள் நிறைய காணப்படுகின்றன.
அப்படியானால் இப்பொழுது புலம்பெயர் வாழ் மக்களிடையே என்ன நடக்குது என அறிய முயற்சிக்காதீர்கள்! 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முன்பு நடைபெற்ற வழமையான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், விழிப்பு போராட்டங்கள் தொடருகின்றன.
அதேவேளை தமக்குள் கரிபூசும் வேலைகள் முன்பு போல் அல்லாது - ஊடகவியலாளர் அற்ற பத்திரிகைகள், இழிவுத் தளங்கள்,  அநாமதேயக் கடிதங்கள் மூலம் சேறு பூசும் வேலை, விடயம் விளங்கியவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தங்களை கதாநாயகர்களாக காட்டும் வேலைத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. போட்டி, பொறாமை, பதவி ஆசை கொண்ட புது வாழ்க்கை புலம்பெயர் தேசங்களை சூழ்ந்துள்ளது.
நாம் முன்பு என்ன செய்தோம், எதற்காக புலம்பெயர் வாழ்வை தேடினோம், இப்போ என்ன செய்கிறோம் என்பவற்றை தற்பொழுது பெரும்பாலான புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர் எண்ணுவதில்லை. காலம் நேரம் எவருக்கும் பிரயோசனமற்ற முறையில் அற்பத்தனமான கலகங்களுடன் வாழ்க்கை ஒடுகிறது.
எங்கு பார்த்தாலும் 90,000 விதவைகள் பற்றிய மனுக்கள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் மனுக் கொடுப்பவர்களில் யாரும், 90 சென்ரீம் (சதம்) கூட நாட்டில் உள்ள விதவைகளின் புனர்வாழ்விற்கோ மறுவாழ்விற்கோ உதவி செய்ய முன்வருவது இல்லை.
இதேவேளை சகலரது கண் முன் பல ஆயிரக்கணக்கான முதலீடுகளை கூசாது செய்து, காட்சியாளிக்கின்றனர்! இப்படி அற்ப சிந்தனை கொண்டவர்களை, எப்படியாக தமிழீழ இலட்சியத்திற்காக உழைப்பவர்களாக நாம் கருதமுடியும்?
தாயக பூமியின் அரசியல் நிலையை பார்ப்போமானால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு 90களில் அத்திவாரம் போட்ட “மூவரும்” அரச செலவில் சர்வதேசங்களுக்கு சென்று, சொகுசு வண்டிகளில் உங்களைப் பற்றி அநியாயமான பரப்புரைகள் செய்தவர்களும், உங்களை அழித்து விட்டோம் என அறிக்கை விட்டவர்களும், உங்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குள் தமக்கு பழக்கமான பின் கதவால் புகுந்து நின்று, தற்பொழுது உங்களது அரசியல் காட்சியின் செயற்பாடுகளை அற்ப்பத்தனமான குறைகள் காரணங்களை முன் வைத்து நாசமாக்குகிறார்கள்.
நீங்கள் மதித்து பட்டம் கொடுத்த மாமனிதனின் மகன், “சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்” என்ற பட்டத்தை காத்திருப்பதன் காரணமோ என்னவோ, அர்த்தமற்று, இரவு பகலாக தான் என்ன சொல்கிறேன் என்பது அவருக்கே தெரியாமல் தொட்டதற்கெல்லாம் “சுயநிர்ணய உரிமை” யென புலம்புகிறார். இவரைப் பற்றி ஒரு கதையை ஓர் நண்பர் கூறினார். அதில் எவ்வளவு உண்மையுள்ளதென்பது எனக்கு தெரியவில்லை.
இவர் கொழும்பில் ஒர் தமிழ் உணவகத்தில் சாப்பிடும் பொழுது, அங்கு வேலை செய்பவரை திடீரென கூப்பிட்டு, சாப்பாட்டிற்கு “சுயநிர்ணய உரிமை” போதாதென கூறிவிட்டாராம். ஒன்றுமே புரியாத அவ்வூழியர், உணவகத்து உரிமையாளரிடம் இது பற்றி கூறினாராம். அவ் உணவகத்து உரிமையாளார், மாமனிதனின் மகன் என அறிந்ததும், சாப்பாட்டிற்கு உப்பு, புளி போதாது போல் உள்ளதை தான் இவர் “சுயநிர்ணய உரிமை” போதாதுவென கூறுகிறாரென புரிந்து கொண்டனராம்.
உங்களால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரித்த முதல் பெயர்வழியும் இவரே. இப்போதைய பிரச்சினைகளின் திரையின் பின் உள்ளவரும் இவரே. ராஜபௌத்தர்களிடம் வடமாகாண சபையை தாரைவார்த்து கொடுக்க திட்டம் தீட்டடியவரும் இவரே. இவர்களை ஊக்குவிப்பது ராஜபௌத்தர்களா என மக்கள் சிந்திக்கிறார்கள். இடை இடையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களின் பெயரில் தங்கள் ஆதங்கங்களை சொல்லித் தொலைக்கிறார்கள்.
யாராயினும் ஒன்றை மட்டும் சரியாக புரியவில்லை போலும். உங்களது கட்சியை விட்டு தூரம் சென்ற எவரையும் மக்கள் மதித்ததில்லை. உதரணத்திற்கு மாமனிதரின் மகனும், அவரது சகாவும் (கஜாக்கள்), நீங்கள் நடமாடிய காலத்தில் யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னராக விளங்கியவர்கள். உங்கள் கட்சியை பிரித்தது மட்டுமல்லாது, அளவுக்கு மிஞ்சி உங்கள் கட்சியைப் பற்றி பொய்யும் புரட்டும் கூறிவந்த காரணத்தினால் தேர்தலில் கட்டுக்காசை இழக்குமளவிற்கு மக்கள் இவர்களை வெறுத்தார்கள்.
வாழ்க்கை முழுவதும் தமது கட்சிகளது தலைவர்களாக இருப்பவர்கள் ஜனநாயகம் பேசுகிறார்கள். உங்கள் பெயரை கூறி புலம் பெயர் தேசம் வந்த பின்பே, மக்களிடம் கௌரவம், மரியாதையை பெற்றவர்கள், சகலதையும் மறந்து, நீங்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியை துண்டு போட ஆரம்பித்து விட்டார்கள்.
உங்களை பொது மேடைகளில் குறை கூறிய சங்கரி ஐயா உங்கள் கண்முன்னே பாரளுமன்றத் தேர்தலில் கட்டுக்காசை இழந்தார். தொடர்ந்து உங்களை விமர்சித்த காரணத்தினால், உங்கள் கட்சியில் கபடமாக சேர்ந்திருந்த பொழுதும், கடந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் மீண்டும் இவரை ஏற்க மறுத்து விட்டார்கள். சங்கரியாரோ இத்துடன் அடங்கவில்லை. மக்கள் தன்னை நிராகரித்தாலும் காரியமில்லை, உங்கள் கட்சி தன்னை நியமன அங்கத்தவராக்க வேண்டுமென்ற மிக அடாத்தான வேண்டுகோளை முன்வைக்கிறார்.
உங்கள் கட்சியை நீங்கள் ஆரம்பிக்கும் பொழுது எட்ட வைத்த சித்தர், உங்களை வெல்வதற்கு தாங்களும் துணை போனதாக அறிக்கை விட்டவர், தராகி சிவராமின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கட்சியில், மானத்தை அடைவு வைத்துவிட்டு, இணைந்து தேர்தலில் வெற்றியும் கண்டுள்ளார். தகப்பனாரை ரெலோ படுகொலை செய்த அனுதாபத்திற்காகவும், இவர் மீண்டும் தகப்பனாரை போல் வாழ்ந்து காட்டுவார் என்ற நம்பிக்கையிலும் மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள். புள்ளி போட்ட மை காய்வதற்கு முன்னரே, சித்தர் தனது வழமையான கெரில்லா வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
நீங்கள் நடமாடும் பொழுது இவை யாவும் எமக்கு சர்வசாதாரணமான விடயங்களாக இருந்தன. உங்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் இன்று யாவுமே தலைகீழாக உள்ளது! கடந்த வாரம் கொழும்பு பத்திரிகை ஒன்றில், “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடையலாமா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவை யாவும் செவிடர் காதில் ஊதிய சங்காகவுள்ளது.
இவற்றிற்கு விடை ொண்பதற்கும், தீர்ப்பதற்கும் நீங்கள் நிச்சயம் முன்வருவீர்களென்று பெரும் திரளான மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. இதற்கான பல சமிக்ஞைகள் தென்படுகிறதா?
“யானை வரும் பின்னே, மணியோசை கேட்கும் முன்பே” என்ற அடைமொழிக்கு ஏற்ப, அண்மையில் சீமானினால் எழுப்பப்பட்ட வினா, மக்களின் கண்களை திறக்க வைத்துள்ளது. இதில் பலருடைய கருத்து என்னவெனில், ஏன் இப்பொழுது மட்டும் சீமான் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்?
அன்று எம்மை போன்ற பலர், நவீன உலகில் படம் காட்டுவதும், படத்தை காட்டுவதும் மிகவும் சுலபமான செயல், ஆனால் ஏன் உடல்களை நேரில் காண்பிக்க தயங்குகிறார்களென கேட்டோம். அதற்கான பதில் இன்று வரை கிடைக்கவில்லை. சரி இவையாவும் எமது ஆதங்கமென்போம். அயலவர் கேட்டவை இன்று வரை கொடுத்தார்களா? அயலவர் திருப்திப்பட்டுள்ளார்களா?
நவநீதம்பிள்ளை அம்மையாருக்கும், சர்வதேசத்திற்கும் பெருமை காட்டுவதற்காக பாவிக்கப்பட்ட விமானத்தளம், மீண்டும் எந்த விமானமும் தரையிறங்க முடியாதவாறு, கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டதாக ஒரு தகவல். மறுபுறம் யுத்தகாலத்தில் வன்னிக்கு கொண்டுவரப்பட்ட சகல கனரக வண்டிகள் ஆயுதங்கள், நவநீதம்பிள்ளை அம்மையாரின் விஜயத்தை காரணம் காட்டி அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாக வேறு ஒரு செய்தி.
பல இடங்களில் மீண்டும், காவல் அரண்கள் திறக்கப்படவுள்ளதாக இன்னுமொரு செய்தி. அப்படியானால் இவை யாவும் எதற்காக? சர்வதேச தண்டனையிலிருந்து மாயமாக தப்புவதற்காகவா? அல்லது உங்கள் வரவிற்காகவா?
இதேவேளை, ராஜபௌத்தர்களின் ரை கட்டிய யுத்த வீரன், இரவு பகலாக தூக்கமின்றி, திடீர் தாக்குதல்களை எப்படியாக சமாளிப்பதுவென மந்திராலோசனை நடத்துவதாக எமது தெற்கின் நண்பர்கள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்லாது திடீரென நீங்கள் வாழ்ந்த வீடுகள் வாசல்களை ராஜபௌத்தர்கள் அழித்து வருவது மக்களது சிந்தனைகளை கண்களை திறக்க வைத்துள்ளது.
பலர் மகிழ்ச்சியினால் பிரார்த்தனைகளும், அர்ச்சனைகளும், அபிசேகங்களும் செய்கின்றனர். 2009 மே மாதத்தின் பின்னர் இரவோடு இரவாக வியாபாரிகளாக, உரிமையாளர்களாக, செல்வந்தர்களாக உருவாகியவர்கள், உங்களது இரகசியங்களை புலத்தில் ஒரு பொழுதுபோக்கிற்காக வெளியிட்டவர்களும், ‘இறைவா எங்களை காப்பாற்ற மாட்டியா? ஐயோ இப்படி முடியுமானால், புத்தியாய் இருந்திருப்போமே’ என மது மயக்கத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். இதில் சிலர் தேர்த் திருவிழாக்களில் அர்ச்சனை, தேங்காய் உடைப்பு, பிரதிட்டை, அன்னதானம் என கதை புலம்பெயர் தேசத்தில் தொடர்கிறது.
ராஜபௌத்தர்கள் தொடக்கம் சிறை சென்று திரும்பிய சரத் பொன்சேகா வரை, தென் பகுதி மக்களை ஏமாற்றி தெருப் பொங்கல்களை செய்விப்பதற்காக அவசரப்பட்டு வெளியிட்ட கருத்துக்கள் அறிக்கைகள், எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக எந்த நடவடிக்ககையும் எடுக்க முடியாத நிலையை உருவாக்கலாமென்பது சர்வதேச சட்ட நிபுணர்களின் கருத்து.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சர்வதேச ரீதியாக உலா வருபவன் என்ற அடிப்படையில் வெளிப்படையாக ஓர் முக்கிய விடயத்தை கூற விரும்புகிறேன்.
தற்போது சர்வதேசத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகளும் அனுதாபங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், 60வது வருடமாக இடம்பெற்று வரும் தமிழீழ மக்களது அரசியல் போராட்டத்திற்கானதே. காரணம் இறுதி நேரத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் பல சர்ச்சைகளுக்கு, சரியான ஆதாரபூர்வமான எந்த விளக்கமும் சர்வதேச ரீதியாக இன்று வரை முன் வைக்கப்படவில்லை.
ஆனால் நான் முன்பு பல தடவை எழுதியது கூறுதியது போல், சர்வதேச சட்டங்களும், விதிமுறைகளும் செல்வாக்குள்ளவர்களை என்ன செய்யும்? கொசோவாவின் விடுதலைப் போராட்டம் இதற்கு ஓர் நல்ல உதரணம்.
அதிகாரம் படைத்தவர்களால் கொசோவாவின் விடுதலைப் போராட்டம் இழிவுபடுத்தப்பட்டு, பின்னர் கௌரவப்ேபடுத்தப்பட்டதுடன், கொசோவா மக்கள் தமது இலட்சியத்தை வெல்வதற்கு உதவியும் புரிந்தார்கள். இலட்சியத்தை அடைவதற்கான அனுபவ ரீதியான சரியான பாதையை அமைந்து கொண்டால் சர்வதேசமே எமக்கு பின்னிற்கும்.
இலட்சியத்தை அடைவதற்கான நவீனகால நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், சர்வதேசமும் அயலவரும் உங்களுக்கான மறைமுக உதவியை காலப் போக்கில் செய்வார்கள். கொசோவா விடுதலை இயக்கத்தின் சரித்திரத்தை பாருங்கள் அறியுங்கள்.
உலகில் சிலரையாகுதல் நம்ப வேண்டும். இன்றுவரை யாரையும் நம்பாது நாம் ஒன்றையும் விசேடமாக சாதித்தது கிடையாது. உலக நீரோட்டத்துடன் தமிழீழ விடுதலை போராட்டம் பின்னிப் பிணைவதன் மூலமே நாம் இலட்சியத்தை அடைய முடியும்.
இதேவேளை அயலவர் உதவியின்றி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அயலவரிடையே எந்தனையோ மாநிலங்கள், எத்தனையோ அரசியல் கட்சிகள், எந்தனையோ நல்ல உள்ளம் படைத்த முக்கிய புள்ளிகள் தலைவர்கள் தனி நபர்கள் உள்ளார்கள். இவற்றை நாம் சரியான முறையில் அணுக வேண்டும்.
தவறுகள் நடப்பது சகஜம். தவறு தொடர்ந்து நடவாது கவனிப்பது தலைவர்களது கடமை. முன்னைய தவறுகளை அயலவர் உட்பட யாவரும் இப்பொழுது உணருகிறார்கள். அயலவர் உறவு பற்றிய முக்கியத்துவத்தை சில வருடங்களுக்கு முன்னர் உரிமையுடன் கூறப்பட்ட பொழுதும், புலம்பெயர் தேசங்களில் சிலர் இதை முயற்சிப்பதில்லை.
மாறாக பொதுமேடைபோட்டு தொடர்ந்து அயலவர்கள் எம்மை வெறுக்கும் வகையில் உளறுகிறார்கள். இப்படியான பெயர்வழிகள், ராஜபௌத்தர்களில் ஏவுதலினால் இவற்றை செய்கிறார்களென பலர் கூறுகிறார்கள்.
சிலருக்கு அயலவரது உறவின் பெறுமதியை விளங்குமளவிற்கு அரசியல் அறிவு இல்லை. விடுதலைப் போராட்டத்தின் திருமந்திரத்தை “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமென” மாற்றுமளவிற்கு துணிந்து விட்டார்கள்.
இவர்களில் சிலர் எம்மால் தனித்து போராட முடியும் என்பதை, ஜெனிவாவில் ஐ.நா. மண்டபம், பெல்ஜியத்தில் ஐரோப்பிய பாரளுமன்றத்தின் முன்பு மேடைபோட்டு கூறுவது மிக வேடிக்கையான விடயமாக உள்ளது.
எம்மால் தனித்து போராட முடியுமானால் பெரும் பணத்தை செலவழித்து இம் மண்டபங்களின் முன்பு சென்று ஏன் அதைச் சொல்ல வேண்டும். இது தான் இவர்களது அரசியல் சாணக்கியமா?
உண்மைகளை யதார்த்தங்களை கூறினால், ஒன்றில் பின் தொடருகிறார்கள், இல்லையேல் நாசகார வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே செயற்பாட்டாளரின் உயிர், புலம்பெயர் தேசத்தில் பறிக்கப்படுவது ஆரம்பமாகியுள்ளது.
2006ம் ஆண்டு முதல் பலர் எம்மை பின்தொடருகிறார்கள். இதில் ஒரு பகுதி, அர்த்தமற்று பின் தொடருகிறார்கள். அப்படியானால் எம்மை பின்தொடருபவர்களை ஊக்குவிப்பர்கள் யார்? எங்கு போகிறோம், எங்கு தங்குகிறோம், எந்தனை மணிக்கு வருகிறோம் போகிறோம், யாரை சந்திக்கிறோம் போன்ற வீண் ஆய்வுகள். தாமும் ஏதோ செய்கிறோம் என்று வீரம் பேசுவதற்கு கிடைத்தவர்கள் நாங்களா?
பிறரை பின்தொடருவதாக கூறி, தமது சுய தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்தவர்களும் உள்ளார்கள். இவர்கள் தமது நேரம் காலம் சக்திகளை வீண் விரயம் செய்யாது, அன்று உண்மையாக உழைத்திருந்தால் நாம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.
எழுதுவதற்கு நிறைய உண்டு. கால நேரம் பார்த்து தொடரும்.
அண்மையில் உயிர் நண்பர் ஒருவரின் செவ்வியை கேட்டதாக சில நண்பர்கள் கூறினார்கள். செவ்வி எப்படியிருந்தது என வினாவியதும், “அழுவதா? சிரிப்பதா? கர்த்தரே” என்று பதில் கூறினார்கள்.
எமது வாழ்க்கையில் அறிந்து உணர்ந்த உண்மை என்னவெனில், “உண்மைகளை நாம் காலம் தாழ்த்தி கூறும்பொழுது, வெளியிடும்பொழுது, நேர காலத்திற்கு கூறப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்கள் முக்கிய இடத்தை பெற்றுவிடுகின்றன. இதனால் உண்மைகளை மக்கள் ஏற்க தயங்குகிறார்கள்.”
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com
(நன்றி-L.SRI) G.JKMEDIAWORKS 2013

Ingen kommentarer:

Legg inn en kommentar