இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்- (பாகம்-24)- நிராஜ் டேவிட்



இஸ்ரேலியர்களுடைய விடுதலைப் போராட்ட வரலாறு பற்றிய நீண்ட பார்வையைச் செலுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், இடைநடுவில் விவாதத்திற்குரிய ஒரு விடயத்தையும் தொட்டுச் செல்வது நல்லது என்று நினைக்கின்றேன்.
இந்த வாரம் நாம் பார்க்க இருக்கின்தான அந்த விடயம் ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் சுவாரசியம் இல்லாத ஒன்றுதான் என்றாலும், இந்தக் கட்டுரைத் தொடரை அதிக அளவில் விரும்பிப் படித்துவரும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரிய அளவில் ஈடுபாடு காண்பிக்கக்கூடிய விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.
யூதர்கள் பெரிய அளவில் புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் அலைந்து திரிந்தார்கள் என்று கடந்த சில வாரங்களில் பார்த்திருந்தோம் அல்லவா?
அவ்வாறு அலைந்து திரிந்தவர்கள்தான் இந்தியாவில் பாரிய மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு, தமிழையும் தமிழர்களையும் இன்று சீரழித்துக்கொண்டிருக்கும் ஆரிய சமூகத்தவர்களா?
யூதர்கள்தான் தமிழ்நாட்டில் இன்று கடவுளையும் பக்தர்களையும் பிரித்துவைத்து வேடிக்கை காண்பிக்கும் பிராமணர்களா?
ஆரியர்கள் என்ற பதத்தில் திராவிடர்களால் வெறுப்புடன் நோக்கப்படும் சமூகத்தவர்கள்தான் இந்த யூதர்களா?
இப்படியான பல கேள்விகள், விமர்சனங்கள் தமிழ்நாட்டிலிருந்து பல உறவுகளால் எனக்கு அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. யூதர்களுக்கும் பிராமணர்களுக்கும் இருக்கின்ற மேட்டிமையான எண்ணம், இந்த இரண்டுதரப்பினர் மத்தியிலும் காணப்படுகின்ற வழிபாட்டு முறைகளிடையேயான ஒற்றுமை, இடப்பெயர்வு காலகட்டம் போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்த வாரம் பார்த்துவிட்டு, தொடர்ந்து இஸ்ரேலியர்களின் விடுதலைப் பயணம் பற்றி ஆராய்வோம்.
யார் இந்த ஆரியர்கள்?
இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்த யூதர்கள்தான் இந்த ஆரியர்களா?
ஆரியர்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலானவை இந்தக் கருத்தை முற்றாகவே நிராகரிக்கின்றன. ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யூதர்கள் அல்லவே அல்ல. இந்தியாவின் பிராமணர்களுக்கும் யூதர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றே பல்வேறு சரித்திரவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அப்படியானால் இந்த ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்?
இந்தக் கேள்விக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன்னால், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் பற்றி சில தலைவர்கள் மற்றும் சரித்திர ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்பது அவசியம்.
இந்திய சரித்திரம் பற்றி பல்வேறு தளங்களில் கருத்து வெளியிட்டிருக்கும், இந்தியத் தலைவர்கள், இந்த ஆரியர்கள் பற்றிக் கூறும்பொழுது திராவிடர்களின் தேசத்தை அவர்களிடம் இருந்து அபகரித்த ஒரு இனமாகத்தான் இந்த ஆரியர்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
உலகில் தென் இந்தியா ஒரு உயர்ந்த இடத்தை ஒரு காலத்தில் வகித்து வந்தது. அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது ஆரியர்கள் வசமானது என்று பண்டிதர் நேரு-உலக சரித்திரம் முதல் பாகத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இராமாயணம் என்பது தென் இந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிக்கும் என்று பண்டிதர் நேரு டிஸ்கவறி ஒப் இந்தியா என்ற புத்தகத்தில் ( பக்கம் 82) குறிப்பிட்டுள்ளார்.
மேற்கில் இருந்து வந்த ஆரியர்களால் திராவிடர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள் என்று சரித்திரவியலாளர் ஏ.எல் சாண்ட்ர்ஸ் எழுதிய குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
ஆரியர்கள் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட நாகரீகமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடம் இருந்து பல நாகரீகங்களைக் கற்றுக்கொண்டார்கள். என்று எச்.ஜீ. வெல்ஸ் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்கள்.
இதுபோன்று பல்வேறு முக்கியஸ்தார்களால் வெளியிடப்படும் கூற்றுக்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஆரியர்கள் என்கின்ற சமூகக் கூட்டம் இந்தியாவில் கால் பதித்தபொழுது, இந்தியாவில் திராவிட இனம் மிகுந்த பலத்துடனும்;, செல்வச் செழிப்புடனும், நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்த நிலையிலும் காணப்பட்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட திராவிடர்களை பலத்தினாலும், பல்வேறு தந்திரங்களினாலும் முறியடித்தே அந்த இனத்தை இந்த ஆரியர்கள் அடிமை கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் யூதர்களின் புலம்பெயர்வு காலகட்டங்களையும், சந்தர்ப்பங்களையும் எடுத்து நோக்கினால்; எந்த ஒரு இனத்தையும் அடிமைப்படுத்தும் பலத்துடன் யூதர்களின் புலம்பெயர்வு இடம்பெறவில்லை. (இது பற்றி கடந்த அத்தியாயங்களில் நாம் விரிவாகப் பார்த்திருந்தோம்.
பாலஸ்தீனத்தில்(இஸ்ரேலில்) இருந்த யூதர்கள் அடிமைகளாக, ஏதிலிகளாக, கைதிகளாகத்தான் அந்த தேசத்தில் இருந்து அந்த தேசத்தை ஆக்கிரமித்தவர்களால் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு ஏதிலிகளாக உயிரைக் கைகளில் ஏந்தியபடி அலைந்து திரிந்த யூதர்கள், நாகரீகத்தில் வளர்ச்;சியடைந்திருந்த திராவிடர்களின் பூமியை ஆக்கிரமித்து இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது என்றே பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அடுத்ததாக, பைபிளில் இந்தியா பற்றி சொல்லப்பட்டிருக்கும் ஒரு விடயமும், யூதர்கள் ஆரியர்களாக இருப்பதற்கான சாத்தியத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது. இந்தியா பற்றி ~இந்து தேசம்| என்று யூதர்களின் தோறாவில் (பைபிளின் பழைய ஏற்பாட்டில்) ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளை ஆண்டுகொண்டிருந்த அகஸ்வேறுவின் நாட்களில் சம்பவித்தது என்று எஸ்தர்1:1 இல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது அகஸ்வேறு (king of Persia Xerxes (Ahasuerus)) என்ற பேர்சிய(ஈரானிய) மன்னன் கி.மு. 486 –கி.மு.465 காலப்பகுதிகளில் இந்தியாவையும் உள்ளடக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்டிருக்கின்றான் என்பதை சரித்திரமும் உறுதியாகத் தெரிவிக்கின்றது. இந்தக் காலகட்டத்தில்தான் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் தமது சேத்திற்கு மீண்டும் திரும்ப ஆரம்பித்த காலகட்டம்.
இது யூதர்கள் ஒரு தேசத்தின் மீது, அதாவது நாகரீகமடைந்த திராவிடர்களால் ஆளப்பட்டுவந்த ஒரு பலமான தேசம் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் சக்தியம் அற்றிருந்த ஒரு காலகட்டம் என்றே பல்வேறு ஆராய்சியாளர்களும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே யூதர்கள்தாம் இந்த ஆரியர்கள் என்கின்ற வாதத்தின் பரிமானம் பெருமளவில் குறைவடைந்ததாகவே உள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, யூதர்கள் எனப்படுபவர்கள் ஒரே கடவுள் வழிபாடான யாவே வழிபாட்டு முறையைத் தமதாகக் கொண்டவர்கள். அவர்கள் சிலை வணக்க வழிபாட்டை மிக மிக மோசமாக வெறுப்பவர்கள். இஸ்ரேலியர்களின் புனித நூலான தோறா (பைபிளின் பழைய ஏற்பாடு) உருவ வழிபாட்டை மிக மிக மோசமாகக் கண்டிக்கின்றது.
ஏசாயா புத்தகம் 44ம் அதிகாரத்தில் உருவ வழிபாடு பற்றி அதாவது விக்கிரக வழிபாடு பற்றி குறிப்படும்பொழுது, அது இஸ்ரேல் தேவனுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் ஒரு வழிபாடாகக் குறிப்பிடப்படுகின்றது.
யூதர்களின் தோறா முழுவதுமே விக்கிரக வழிபாட்டு முறை மிக மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு தரப்பு, உருவ வழிபாட்டு முறையை இந்தியாவில் வகை வகையாக அறிமுகப்படுத்தி, அதன்பால் மக்களை திரட்டுவது என்பது முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இஸ்ரேலியர்கள் அடிமைப்பட்டிருந்த காலத்தில் தலைமைகள், போதனைகள் அற்றிருந்த சில யூதர்கள் தனிப்பட்ட ரீதியில் சில அன்னிய வழிபாட்டுமுறைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் ஒரு சமூகமான உருவ வழிபாட்டு முறைகளை யூதர்கள் பின்பற்றிய சந்தர்ப்பத்தை சரித்திரத்தில் காண்பது அரிதாகவே இருக்கின்றது.
அப்படி இருக்க, யூதர்கள் இந்தியாவிற்கு சென்று உருவ வழிபாட்டில், விக்கிரக ஆராதனையில், மூடப் பழக்கவழக்கங்களில் அங்கிருந்த திராவிடர்களை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு என்றே அனேகமான சரித்தியவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அடுத்ததாக யூதர்களுடைய நம்பிக்கையில் ஆபிரகாம் பற்றியும், யாக்கோபு பற்றியும், மோசே பற்றியும், தாவீது பற்றியும், சாலமோன் பற்றியும் பேசப்படாத சந்தர்பங்களே கிடையாது என்று கூறலாம். இந்த நபர்கள் பற்றிய கதைகள் இல்லாத வரலாறோ, வழிபாட்டு முறைமைகளோ யூத நடைமுறையில் கிடையாது.
யூதர்கள்தான் பிற்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆரியர்கள் என்பது உண்மையானால், மேலே குறிப்பிடப்பட்ட யூதர்களது பிதாமகர்களின் வரலாறுகள் கதைகள் நிச்சயம் ஆரியர்களால் தோற்றுவித்ததாக நம்பப்படும் இந்து மதத்தில் இருந்தாகவேண்டும். ஆனால் அவைகளை ஒத்ததான கதைகள் ரிக் வேதத்தில் இல்லை என்பதும் பல ஆய்வாளர்களால் சுட்டிக் காணப்பிக்கப்படுகின்றது.
எனவே யூதர்களே ஆரியர்கள் என்ற சிலரது வாதம் பலமிழந்து போகின்றது.
அப்படியானால் யார் இந்த ஆரியர்கள்?
ஆரியர் என்ற சொற்பதமானது குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு சொல் என்று விக்கிப்பீடியா என்சைக்ளோபீடியா தெரிவிக்கின்றது.
ஆரியர் என்ற சொல் சமஸ்கிருத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த 'ஆர்ய" எனும் அடிச்சொல்லில் இருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகின்றது.
இச் சொல்லானது முதன்முதலில் ரீக் வேத நூலில் காணப்படுகின்றது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகின்றது.
ஆரிய என்ற பதத்திற்கு யூதர்களின் ஹிப்றூ மொழியில் சிங்கம் என்றும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த ஆரியர்கள் பற்றி யூதர்களின் தோறாவில் (பழய ஏற்பாட்டு பைபியில்-யோபு-4) குறிப்பிடப்படுவதாக சில வேதாகம ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அதாவது இந்த ஆரியர்கள் பற்றி எதிர்மறையான கருத்துக்களே யூதர்களால் முன்னர் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஆரியர் பற்றிக் குறிப்பிடும் பல சரித்திர ஆராய்சியாளர்கள், அவர்கள் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றார்கள். தற்போதைய ஈரான் தேசம்தான் முன்னர் பாரசீகமாக இருந்தது.
ஆரிய என்ற சொற்பதமே பின்னர் ஈரான் என்று திரிபடைந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில பாரசீக மன்னர்கள் பற்றி யூதர்களின் தோறாவிலும், பைபிளின் பழ ஏற்பாட்டிலும் குறிப்பிடப்படுகின்றன. (தானியேல் புத்தகத்தில் உள்ள தரியு, அகாஸ்வேறு).
அதேபோன்று பைபிளில் (யூதர்களின் தோறாவிலும்) ஒரு முக்கிய அரசனான நேபுக்காத் நேச்சார் பற்றி நிறைய விடயங்கள் கூறப்படுகின்றன. இவன் ஒரு பாரசீக மன்னன். கி.மு. 605 ஆம் ஆண்டு முதல் 562ம் ஆண்டுவரை வாழ்ந்த இந்த மன்னர் யூதர்களை அடிமை கொண்டு சித்திரவதை செய்த விடயங்கள் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கின்றன.(இராஜாக்கள் 24,25, நாளாகமம் 34, எஸ்தர் 1-6, நெகேமியா 7, தானியேல்)
அந்தக் காலகட்டத்தில் பெரிய இராட்சியக் கனவுடன் தனது தேசத்தின் எல்லையை விஸ்தரித்து நகர்ந்துகொண்டிருந்த பாரசீக தேசம்தான், திராவிடர்களை அடிமைகளாக மாற்றும்படியாக நகர்ந்த ஆரியர்கள் என்று தற்கால ஆய்வுகள் பலவற்றில் கூறப்படுகின்றது.

சரி, இனி யூதர்களின் அடிமை வாழ்க்கையின் மீதமான பகுதிகள் பற்றியும், யூதர்களின் விடுதலைக்கான பயணம் பற்றியும், அவற்றில் இருந்து ஈழத் தமிழர்களாகிய நாம் ஏதாவது படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்றும் அடுத்தவாரம் முதல் ஆராய்வோம்.
தொடரும்..
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:

Legg inn en kommentar