உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-9) – நிராஜ் டேவிட்



தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கை (Psychological Operations)  பற்றி கடந்த இரண்டு மாதங்களாக இப்பத்தியில் ஓரளவு விரிவாகப் பார்த்து வருகின்றோம்.
எதிரியைக் கிலிகொள்ள வைப்பதான உளவியல் போர் பற்றியும், இந்த வகையான உளவியல் போர் எப்படியான தாக்கத்தை உலகப் போரியல் அரங்குகளில் ஏற்படுத்தியிருந்தது என்றும் பார்த்திருந்தோம்.
சிறிலங்காவின் போரியல் அரங்குகளில் இந்தவகை உளவியல் போரை சிறிலங்கா அரச படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எவ்வாறு கையாண்டிருந்தார்கள் என்பது பற்றித்தான் இனி வரும் வாரங்களில் ஆராய இருக்கின்றோம்.
எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதான இந்த முக்கிய உளவியல் யுத்தத்தை விடுதலைப் புலிகளும், மற்றைய தமிழ் போராட்ட அமைப்பினரும் தமது போராட்ட நடவடிக்கைகளின் பொழுது பல சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்தியிருந்தார்கள்.
 குட்டிமணி சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்படும்வரை குட்டிமணி பற்றிய ஒரு அச்சம் கலந்த ஆச்சரியம் சிறிலங்கா படைகள் மத்தியில் இருந்து வந்தது. அதாவது, குட்டிமணி தனது பற்களில் துப்பாக்கிச் சன்னங்களை கட்டிவைத்திருப்பதான ஒரு வதந்தி சிங்களப் படையினர் மத்தியில் காணப்பட்டது.
புலிகளின் தலைவர் உட்பட பல போராட்டத் தலைவர்கள் சிறிலங்காப் படைகள் வைத்திருந்த உப இயந்திரத் துப்பாகியின் (Sub-Mechine Gun) சுடு குழலில் உள்ள துவாரங்களை பார்த்து, இந்தத் துவாரங்கள் வழியாகவெல்லாம் குண்டுகள் வெளியேறுமா?“ என்று ஆச்சரியப்பட்ட காலத்தில், அதாவது நவீன துப்பாக்கிகளை தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமதாகக்கொண்டிராத காலகட்டத்தில், தமிழ் போராளிகள் அதி நவீன ஆயுதங்களைப் பாவித்து வருவதாகவும், அவர்கள் வைத்திருக்கும் ஆயதங்களினால் ஒருதடவை சுட்டால் பத்துப்பேருக்கு குண்டு பாயுமாம் என்ற அச்சம் கலந்த வதந்தி தென் இலங்கை மக்கள் மத்தியில் பரவி இருந்தது.
இதுபோன்று தமிழ் போராளிகள் பற்றி தென் இலங்கை மக்கள் மத்தியில் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பரவிக்கொண்டிருந்த வதந்திகள்தான், 83 இனப்படுகொலை காலகட்டத்தில் கொழும்பிற்கு புலிகள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்டு சிங்கள இனவெறிக் கும்பலை தலைதெறிக்க ஓடவைத்திருந்தது.
 1983ம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஏராளமான தமிழ் அரசியல் கைதிகள் தப்புவிக்கப்பட்டார்கள். புளொட் அமைப்புத்தான் இந்தச் சிறை உடைப்பை நடாத்தியது. இந்தச் சிறை உடைப்பு நடைபெற்றுக்கெண்டிருந்த நேரத்தில், சிறையில் இருந்து தப்பித்துசென்ற தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் முகமாக, நுற்றுக்கணக்கான புளொட் போராளிகள் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அணிவகுத்து நின்றதாகவும், அவர்களனைவரது கரகங்களிலும் வெள்ளி நிறத்தினாலான புதுவகைத் துப்பாக்கிகள் பளபளத்துக்கொண்டிருந்ததாகவும் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது. மக்கள் மத்தியில் அடிப்பட பேச்சுக்கள் நாளாவட்டத்தில் தமிழ் சிங்கள ஊடகங்களிலும் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் போராளிகள் பற்றிய அச்சம் கலந்த ஆச்சரியம் சிங்களத்திற்கு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், இத்தனைக்கும் அந்தச் சிறை உடைப்பில் ஈடுபட்ட போராளிகள் வெறும் ஒற்றைத் துப்பாக்கிகளையும், ஒரிரு கைத்துப்பாக்கிகளையும் தவிர வேறு எந்தவித ஆயுதங்களையும் தம்மிடம் வைத்திருக்கிவில்லை என்பதுதான் உண்மை. மட்டக்களப்பு ஆனைப்பந்திப் பிள்ளையார் கோவிலுக்குள் மறைந்திருந்த வாசுதேவா தலைமையிலான குழுவினர் தம்மிடம் இருந்த இரண்டு ஒற்றைத் துப்பாக்கிகளின் நீண்ட முனைகளை வாளினால் அறுத்து சாக்குகளில் மறைத்துக் கொண்டுவந்திருந்தார்கள். அவ்வளவுதான்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஈழவிடுதலைப் போராளிகள் பற்றிப் பரவ ஆரம்பித்திருந்த வதந்திகள், சிறிலங்காவிற்கும் அதனுடைய படைத்துறைக்கும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
இந்த வதந்திகள் இரண்டுவிதமான அனுகூலங்களை தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்தியிருந்தன. முதலாவது, எதிரியை கிலிகொள்ள வைக்கக் கூடிய ஒருவகை Fear Psycho இனை ஏற்படுத்தி, எதிரியின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும், ஆட்டங்காணவைக்கவும் போராளிகளுக்கு உதவின.
இரண்டாவது, தமிழ் போராட்ட அமைப்புக்கள் பற்றிய ஒருவித மிகைப்படுத்தப்பட்ட மாயையை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி, "அடுத்த பொங்கல் தமிழீழத்தில்தான்",... "அடுத்த புதுவருடத்தில் தமிழீழக்கொடி ஏற்றப்படும்..." என்பதான நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து, பாரிய உளவியல் தெம்பை தமிழ் மக்களுக்கு உருவாக்க முடிந்தது. இதனால் ஆயுதப் போராட்டத்தினால் வெற்றியைப்பெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தது.
அடுத்ததாக, இப்படி நம்பிக்கையூட்டும் உளவியல் நடவடிக்கைகள் பாரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியதன் விளைவாக போராட்டத்திலும், அதனது வெற்றியிலும் நம்பிக்கைவைத்து ஆயிரக் கணக்கில் தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.
அதாவது எதிரியை அச்சமடையவைத்து, அவனைக் குழப்பி, அவனது நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் அல்லது தடுமாறவைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் உளவியல் நடவடிக்கைகள், மறுபக்கத்தில் தமது தரப்பில் பாரிய உளவியல் உரத்தை ஏற்படுத்தும் என்பதும் ஒரு மிகப்பெரிய அனுகூலம்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராட்ட அமைப்புக்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் விடயத்தில் அதிக தெளிவைப் பெற்றிருக்கவில்லை. எதிரியை அச்சமடைய வைத்து, அவனைத் தடுமாற வைத்து, அவனைக் குழப்பநிலையில் வைத்திருப்பதான உளவியல் நடவடிக்கைளை பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் தானாகப் பரவிய வதந்திகள்தான் செய்துகொண்டிருந்தன. எவராலும் திட்டமிட்டு அவை மேற்கொள்ளப்படவில்லை.
எதிரியை அச்சமடையவைக்கும்படியான இந்தவகை உளவியல் நடவடிக்கையை முதன்முதலில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் திட்டமிட்டு மேற்கொண்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்தான், எதிரியை அச்சநிலைக்குள் வைத்திருக்கும் இந்தவகை உளவியல் நடவடிக்கையை முதன்முதலில் திட்டமிட்டு உருவாக்கினார்.
80களின் ஆரம்பத்தில் அவர் ஆரம்பித்த இந்த உளவியல் நடவடிக்கையை அவர் 4ம்கட்ட ஈழ யுத்தத்தின் கடைசி வரைக்கும் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்தார்.
வே.பிரபாகரன் மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கைகள் கடந்த 30 வருடங்கள் தமிழ் மக்களை தலைநிமிர வைத்தன.
தலையில் குடும்பிகட்டிக்கொண்டு, காதுகளில் தோடு அணிந்துகொண்டு சிங்கள மக்களுக்குப் பலவீனர்களாகத் தெரிந்த தமிழர்களை, அதே சிங்கள மக்கள் அச்சத்துடன் பார்க்கும்படியான ஒரு மாற்றத்தை உருவாக்கியது திரு.வே.பிரபாகரன் செய்த அந்த உளவியல் நடவடிக்கைகள்தான்.
மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் மன்னம்பிட்டி தாண்டியதும், அல்லது யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதம் மதவாச்சி தாண்டியதும் தமிழ் பெண்கள் தமது நெற்றியில் வைத்திருக்கும் குங்குமப் பொட்டுக்களையெல்லாம் அழித்துவிட்டு, பேசாமடந்தைகளாகப் பயணம் செய்து, பாலுக்காகவோ அல்லது வேறு உபாதைகளுக்காகவே தமிழில் அழும் தமது பிள்ளைகளின் வாயை அடைத்தபடி தமிழர்கள் பயணம் செய்து, கொழும்பு வருவார்கள்.
கொழும்பு வந்ததும் "அவன் முனா".. 'இவர் சீனா.." என்று சங்கேத பாசைகளிலும் வெறும் சைகளினாலும் அச்சத்துடன் பேசிவந்த தமிழ் மக்களை, நெற்றியில் இரண்டு பெரிய குங்குமப் பொட்டுக்களை வைத்துக்கொண்டு, உரத்த குரலில் தமிழில் பேசியபடி வெள்ளவத்தையில் நடமாடும்படி செய்த பெருமை, திரு.பிரபாகரன் அவர்கள் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்டுவந்த உளவியல் நடவடிக்கைகளையே சாரும்.
80களுக்கு முன்னர் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பாக பல நகைச்சுவைப் பேச்சுக்கள் இருந்துவந்தன. சிங்களவர்களுக்கு கறுப்பு நிறத்தில் பிள்ளைகள் பிறந்துவிட்டால், அதனை "தெமல பாட்ட’ (தமிழர்களின் நிறம்) என்றுதான் குறிப்பிடுவார்கள்.
அதேபோன்று, சிங்களவர்களின் வீடுகளில் அதிக சத்தம் போட்டு கும்மாளம் அடித்தால், „என்ன தமிழர்களுக்கு சம்பளம் கிடைத்தது போல சத்தம் போடுகின்றீர்கள்..“ என்று கேலியாகக் கேட்கும் நிலை தென் இலங்கையில் இருந்துவந்தது. தமிழர்கள் எனப்டுபவர்களை மிகவும் பலவீனமான, கேவலமான ஒரு கூட்டமாகத்தான் சிங்களவர்கள் பார்த்துவந்தார்கள்.
சிங்களவர்களால் கேவலமாகப் பார்க்கப்பட்டு வந்த அதே தமிழர்களை அச்சத்துடனும், மரியாதையுடனும் சிங்களவர்களைப் பார்க்கவைத்தது, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் செய்த உளவியல் நடவடிக்கைதான்.
திரு.வே.பிரபாகரன் செய்த அந்த உளவியல் நடவடிக்கைகள் என்ன?
பிரபாகரனின் அந்த உளவியல் நடவடிக்கைகள் எதிரிக்கு எப்படியான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது?
திரு.பிரபாகரனின் உளவியல் நடவடிக்கையை சிங்களதேசம் எப்படி எதிர்கொண்டது.
திரு.பிரபாகரனுக்கும் அவரது உளவியல் நடவடிக்கைகளுக்கும் எதிராக சிங்கள தேசம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் என்ன?
இவை பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்..
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:

Legg inn en kommentar