பயங்கர வாதம்

essay தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தொடர்ச்சியாகவே பெரும்பான்மைச் சமூகத்தினரால் பேணப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையில் முயற்சி எடுத்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் தலையிட்டுச் சீர்குலைப்பதற்கும் அரசு பின் நிற்பதில்லை.

இராணுவமயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழ் மக்கள் எப்போதும் அடக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதில் அரசு குறியாக இருக்கிறது. அவர்களது நாளாந்தக் கடமைகளில் இராணுவத் தலையீடுகளும் நெருக்கடிகளும் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் சாட்டுப்போக்குச் சொல்லி அரசு தமிழ் மக்கள் மீதான கெடுபிடியைத் தொடராகக் கைக்கொண்டு வருகிறது.

அதன்மூலம் அவர்களது எழுச்சி, உணர்வு, உரிமை என்பன அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தமிழ் மக்கள் அவர்கள் போக்கில் சிந்தித்துச் செயற்படுவார்களானால் எதிர்காலத்தில் அது பெரும் விபரீதங்களை ஏற்படுத்தலாம் என்பது அரசின் கட்டியம்.

பயங்கரவாதத் தடைச்சட்டம்

1979 ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முற்படுவோர் எந்தச் சட்ட நடவடிக்கைகளுமின்றி 18 மாத காலத்துக்கு வெளியுலகே தெரியாதவாறு தடுத்துவைக்கும் அதிகாரம் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு இருக்கிறது.

ஒரு சந்தேகநபர் மீதான விசாரணைக் கட்டங்களில் இருந்தும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரது மறியல் காலம் மூன்று நாள்களிலிருந்து ஒன்றரை வருடம் வரை நீடிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் சட்டப்பிரகாரம் மேலும் நீடிக்கவும் செய்யலாம்.

பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் சீரழிக்கப்பட்டுள்ளது. இன்றும் தமிழ் இளைஞர்கள் பலர் எந்த விசாரணைகளுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு இருக்கின்றனர். எவரும் தலையிட முடியாத அளவுக்குச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வடமாகாணத்தில் போர் முடிவடைந்து 3 வருடங்களின் பின்னர் இரண்டாம் தலைமுறை விடுதலைப்புலிகளின் புரளி கிளப்பப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் நிதிப் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இளைஞர்கள் இந்தியா சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்புகின்றனர் எனவும், அவர்களே இரண்டாந் தலைமுறை விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

பல்கலை அராஜகம்

ஏதோ ஒன்றில் தொடங்கிப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் முடிக்கப்பட்டு இருக்கிறது பல்கலை மாணவர்களது விவகாரம். இவர்களும் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கின்றனர் என்பதே அரசின் வாதம். இதனால் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளே கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.

மருத்துவர் சிவசங்கர் கைது

அநுராதபுரம் வைத்தியசாலையில் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமில் வைத்துக் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்தமாதம் 29 ஆம் திகதி மருத்துவர் கைதாகி உள்ளார்.

இவர் இராணுவத்தினருக்குத் தன்னை ஒரு மருத்துவர் என்று அடையாளப்படுத்தாமையும், புலிகளுக்கு ஆதரவான, தமிழ்த் தேசியக் கருத்துக்களை வெளிப்படுத்தினார் என்றும், தனது மடிக்கணினியில் அதற்கான ஆதாரங்களை வைத்திருந்தார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இணைந்த பெண் ஒருவர் சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக வீடு சென்று திரும்பாத நிலையில், அவரை மீளப் பணிக்குத் திரும்புமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும் குறித்த யுவதி தான் இராணுவத்துக்கு மீளச்செல்லவில்லை எனப் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி பெற்றோர் தமது பிள்ளையை அழைத்துக்கொண்டு கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். மொழிப் பிரச்சினை காரணமாக ஒருவரது உதவி இவர்களுக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. தெரிந்தவர், பொறுப்பான மருத்துவர் என்ற அடிப்படையில் மருத்துவர் சிவசங்கரின் உதவியை அந்தக் குடும்பத்தார் நாடியுள்ளனர். உதவிக்கென மருத்துவரும் சென்றுள்ளார்.

அந்தச் சமயத்தில் இராணுவத்தினர் குறித்த யுவதியை வீட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாதென்றும், அப்படி அனுப்ப வேண்டுமாயின் இராணுவ விதிமுறைகளுக்கு அமைய அவர் பணிவிலக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

துவண்டுபோன தாயார் தனது பிள்ளையை விடுவிக்குமாறு கத்திக் கதறியுள்ளார். இதன்போது மருத்துவர் சிவசங்கருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

கைதுக்கு இதுமட்டும் காரணமல்ல

மருத்துவர் சிவசங்கர் சாந்தி நிலையத்தில் உளவியல் மனோதத்துவ நிபுணராக நீண்டகாலமாகப் பணியாற்றுகிறார். இதன் பொருட்டு அவர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு வருகிறார். இதற்காக  வன்னிப் பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அவர் குறிப்பெடுத்து வருகிறார்.

அண்மையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் 16 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களின் நோய் தொடர்பில் இன்னமும் மௌனிக்கப்படுகிறது. இதனைவிட இராணுவத்தில் இணைந்த 109 தமிழ்ப் பெண்களில் 6 பேர் தாமாகவே விலகினர். இவ்வாறான சம்பவங்களின் பின்புலத்தையும் மருத்துவர் தனது ஆய்வின் நிமித்தம் தரவாகக் கொண்டிருக்கிறார். இதுவும் அவரது கைதுக்குக் காரணமாக இருக்கிறது.

"உதயனில்' பத்தி எழுதினால் பயங்கரவாதி?

கைதாகிய மருத்துவர் உதயன் பத்திரிகையில் பத்தி எழுதுபவர் எனக் கொழும்புச் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் அவர் ஒரு விடுதலைப் போராளி எனவும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துபவர் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றியும், வடக்கில் நடக்கும் அராஜகங்கள் தொடர்பிலும் மருத்துவர் சில குறிப்புக்களில் உதயனில் பதிவு செய்திருந்தார் என்பது உண்மையே. அவர் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலேயே அந்தப் பத்திகள் பார்க்கப்பட்டன தவிர, வேறு எவற்றையும் சொல்லவில்லை.

அரசியல் மருத்துவம்

உயிர்க்காப்புப் பணியாகக் கருதப்படும் மருத்துவத் தொழில் புரிவோர் தமது சுயநலங்களுக்குக் கட்டுப்படும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோதும் வைத்தியர்கள் அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். வாரக்கணக்கிலும் நாள்க்கணக்கிலும் அவர்களது போராட்டம் நீடித்திருந்தது.

வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஓர் உயிர்காக்கும் பணியைச் செய்யும் மருத்துவன் தாக்கப்பட்டால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை சக மருத்துவருக்கு இருக்கிறது. அப்படியானால் சிவசங்கர் ஏன் புறக்கணிக்கப்பட்டார்.

அவர் அநுராதபுரத்தில் பணியாற்றினாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.யாழ்ப்பாணத்து மக்களுக்காகவும் சேவையாற்றி இருக்கிறார்; இன்றும் பங்களிக்கிறார். அப்படியிருக்கையில் யாழ்ப்பாணம் மருத்துவர் சங்கமும் தாய்ச் சங்கமும் ஏன் இந்த விடயத்தில் மௌனம் காக்கிறது?

மனநிலை பாதிக்கப்பட்டவர்

மருத்துவர் சிவசங்கர் மீது இப்படியொரு திருப்பம் திருப்பப்படுகிறது. அவர் ஒரு மனநோயாளி என்றும் இதற்காக அவர் சிகிச்சை பெற்றிருக்கிறார் என்றும் ஒரு செய்தி கிளப்பப்பட்டு இருக்கிறது. மனநோயாளியான சிவசங்கர் எப்படி மருத்துவத் தொழில் செய்ய முடிகிறது? எப்படி மக்களுக்கு மனநிலை ஆற்றுகை செய்ய முடிகிறது?

உண்மையில் மருத்துவர் சிவ சங்கரைப் பொறுத்தவரை தான் செய்யும் தொழிலைத் தீவிரமாக நேசித்தவர். தான் செய்யும் வேலையை தீவிரத்துடன் செய்பவர். அந்த மனப்பாங்கின் தூண்டுதலே சில சமங்களில் அவரை ஆழச் சிந்திக்க வைத்திருக்கிறது.

இந்தத் தீவிரத்தன்மை அவரை தட்டிக்கேட்கும் அளவுக்குக் கொண்டுசென்று இருக்கிறது. பிரச்சினையைத் தட்டிக் கேட்டதால் அவர் கைதாகி இருக்கிறார். பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க எண்ணுபவர்கள் நழுவல் போக்கில் கதை கூறுகின்றனர்.

அரசின் தமிழ் மக்கள் மீதான நிலைப்பாடு தட்டிக்கேட்கும் அதிகாரத்தைத் தட்டிப் பறிப்பதே. தமிழ் மக்கள் அடக்கப்பட்ட சமூகம் என்பதை நிரூபிப்பதே. இதன் வெளிப்பாடே நொண்டிச் சாட்டுகளும், கைதுகளும்.




(நன்றி-விகேஎம்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar