கடவுள்களின் கவனயீனங்கள்

essay வாழ்வின் ஆனந்திப்பின் காலங்களில் அவர்கள் மிதந்து கொண்டிருந்தனர். ஊரே அவர்களின் இணைபிரியா வாழ்வு பற்றிப் பேசிக்கொண்டது. மகிழ்வின் எல்லாத் திசைகளும் அவர்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருந்தது.


ஆனாலும் சின்னதாக ஒரு குறை. அவர்களின் மணவாழ்வின் 4 மாதங்கள் கடந்த பின்னரும், வாரிசு ஒன்றின் உருவாக்கம் பற்றிய எந்த அடையாளங்களும் இல்லை. எல்லாம் விதிப்படி நடக்கட்டும் என்று காலத்தின் மீது பழி போட்டுவிட அவர்கள் தயாராகவில்லை.

உடனேயே மருத்துவரை நாடினார்கள். எல்லாப் பரிசோதனைகளும் முடிந்தன. மெலிதான சிரிப்புடன் "எதுக்கு அவசரப்படுறீங்கள்? ரண்டு பேர்லையும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் நல்லபடியா நடக்கும்' என்று சொல்லி வழியனுப்பினார் மருத்துவர்.

மருத்துவரின் வாக்குப் பலிதமாயிற்று. நாலைந்து மாதங்களுக்குப் பின்னர் ஒருநாளில் அவள் கருவுற்றாள். வைத்திய பரிசோதனைகளும் அதை உறுதி செய்து தம்பதியரின் முகங்களில் பூரிப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

அரச மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் கிரமமாக எல்லாக் "கிளினிக்'குகளுக்கும் தவறாது போனார்கள். குங்குமப்பூ, மாத்திரைகள் என்று பணம் கரைந்து கொண்டிருந்தது.

கருவுற்ற 5 மாதங்களின் பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர்கள் வழமையாக செல்லும் மருத்துவரிடம் போனார்கள். இண்டைக்கு ஒருக்கா ஸ்கான் செய்து பாப்பம் என்று கூறிய, மருத்துவர் சிலநொடிகளிலேயே ஸ்கான் செய்துவிட்டு, நிமிர்ந்தார். எல்லாம் ஓகே. ஆனா... இழுத்தார் அவர்.

ஆனா என்ன டொக்டர்? ஏதும் சிக்கலோ? இவர்கள் இருவரும் பதற்றத்துடன் கேட்டார்கள். அப்பிடியொண்டுமில்லை. எல்லாம் நல்ல விஷயம்தான். உங்களுக்கு "ருவின்ஸ்' பிள்ளையள். இரட்டைப்பிள்ளையள் எண்டதால கொஞ்சம் கவனமாக அவாவைப் பாக்கவேணும் மருத்துவரின் சொற்கள், அந்த இளம் தம்பதியரை இறக்கை கட்டி சந்தோஷ வானில் பறக்கவைத்தன.

டெலிவரிக்கு எங்க போற பிளான்? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் மருத்துவர்.
வேற எங்க? பெரியாஸ்பத்திரிக்குத்தான் என்றான் அவன். உங்களுக்கென்ன விசரா? அங்க வசதிகள் குறைவு. அதுவுமில்லாமல் இப்ப பிள்ளப்பெத்து வார்ட்டையும் இடிச்சு கட்டிக்கொண்டிருக்கிறாங்கள்.

அதால நான் சொல்ற பிரவேட் ஹொஸ்பிட்டலுக்கு போங்கோ. கவனிப்பும், வசதியும் இருக்கும். காசும் பெரிசா முடியாது என்று ஆலோசனை சொன்னார் மருத்துவர். அவர்களும் நீண்ட நேர விவாதத்தின் பின்னர் பெரியாஸ்பத்திரிக்கு போகும் திட்டத்தை ஒதுக்கிவிட்டு, தனியார் மருத்துவமனைக்கே பிரசவத்துக்காகச் செல்வதென்று தீர்க்கமான முடிவுக்கு வந்தனர்.

ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை. ஆசைக்கு ஒரு பெண்குழந்தை. அதுவும் முதற்பிரசவத்திலேயே. அதற்குப் பிறகு அவளை, அவன் தோளில் தூக்கித்திரியாத குறைதான். அவளின் பாதம் கூட தரையில் படாதபடி, எந்தச் சின்ன நோவும் அவளை அணுகாதபடி அவன் பார்த்துக்கொண்டான்.

காத்திருப்பின் காலம் இன்னும் சில வாரங்கள் மட்டுமே. அதன் பின்னர் அவர்களின் கைகளில் இரட்டை உலகங்கள் தவழத் தொடங்கியிருக்கும். அதற்கிடையில் வழமைபோன்று "செக்அப்'புக்காக தமது மருத்துவரிடம் அவர்கள் போனார்கள். சிரித்துக்கொண்டே பரிசோதித்த மருத்துவரின் முகம் இலேசாக மாறியது. வியர்வைத் துளிகள் அரும்பத்தொடங்கின.

எல்லாம் ஓகே. ஆனா ஒரு இன்ஜெக்ஷன்(ஊசி) உடன போடவேணும். அந்தப் பிரை வேட் ஹொஸ்பிட்டல்ல கொண்டுபோய் உடன போடுங்கோ துரிதப்படுத்தினார் மருத்துவர். அவனுக்கு என்னவோ பிரச்சினை போலபட்டது. அவனின் தாயார் மருத்துவரை தனியே சென்று சந்தித்து, டொக்டர், உண்மையை சொல்லுங்கோ! ஏதும் பிரச்சினையோ? என்று பதற்றத்துடன் கேட்டார்.

"சீச்சி! அப்பிடியொண்டுமில்லை. இரட்டைப்பிள்ளை எண்டதால, அவை பிறக்கேக்க மூச்சுத்திணறல் வராமல் இருக்க இப்பிடி இன்ஜெக்ஷன் போடுறது வழமைதான். சொல்லிவிட்டு அடுத்த நோயாளியை பார்க்கத் தொடங்கினார் மருத்துவர்.

அவர் சொன்ன மருத்துவமனையில், ஊசி போட்டாயிற்று. ஓரிரண்டு நாள்கள் நகர்ந்தன. திடீரென ஒருநாள் அவளின் உடல்நிலையில் மாற்றம். காய்ச்சல். வாந்தி. உடல் பலவீனமாகிக்கொண்டே போயிற்று. மருத்துவருக்கு போன் மூலம் தகவல் சொல்லி, என்ன செய்வதென்று ஆலோசனை கேட்டார்கள். அதே தனியார் மருத்துவமனைக்கு உடனே கொண்டு போகச் சொன்னார்.

எனினும் அவளின் உடல் சிறிது தேறியதால், அடுத்தநாள் காலைதான் ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போனார்கள். இவர்களின் மருத்துவர் வந்து பரிசோதித்தார். பயப்பிடும்படி ஒன்றுமில்லை என்றும் இன்னும் நாலைந்து நாள்களில் குழந்தைகள் பிரசவமாகி விடுமென்றும் சொன்னார்.

ஆனால் அவளுக்கோ உடல்நிலை மோசமாகி வருவது போன்று தோன்றியது. வயிற்றின் இரு பக்கங்களிலும் இருந்த சிசுக்களின் செல்ல உதைப்பின் வீரியம் குறைந்துவிட்டதை உணர்ந்தாள். அதிலும் ஒருபக்க துடிப்பு முற்றாக இல்லாமல் போயிருந்தது. கூடவே அந்தப்பக்கம் விறைத்துப்போயிருந்தது. மருத்துவரிடம் அதையெல்லாம் சொன்னாள்.

"டொக்டர் என்னால ஏலாமக் கிடக்கு. ஒரு பக்கம் விறைச்சு போச்சு. எனக்கென்னவோ பயமாக் கிடக்கு. நீங்கள் இண்டைக்கே ஒப்பிரேஷன் பண்ணுங்கோ'' கண்ணீரோடு கதறினாள். ஆனால் இவ்வாறான வலிகள் சகஜமாக பிரசவத்தின் போது ஏற்படுபவை என்று நம்பிக்கை சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஆனால் அடுத்து வந்த நாள்களில் அந்தப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர், இடியொன்றை அவளின் இதயத்தில் இறக்கினார். சொறி! உங்கட 2 குழந்தைகளும் செத்துப்போச்சுதுகள். இண்டைக்கு ஒப்பிரேஷன் பண்ணி வெளியில எடுக்கிறன். இந்த வார்த்தைகள் அவளின் கனவுகளை ஒரேநொடியில் சுக்கலாக்கின.

அழுதாள். கண்ணீர் வற்றுமட்டும் அவள் அழுகை நிற்கவில்லை. ஒப்பிரேஷன் முடிந்தது. ஒரு காட்போட் பெட்டியில் குழந்தைகளின் உடலங்கள். கண்ணீரோடு  பெற்றுக்கொண்ட அவனிடம் கொண்டுபோய் அடக்கம் செய்யுங்கோ என்று சொல்லிவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.

புதைக்கப்பட்டன சிசுக்களின் உடலங்கள். அவளின் உடல்நிலையும் மோசமடைந்தது. தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரும் அவளைச் சரியாகக் கவனிக்கவில்லை. இறுதியில்  பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் மட்டுமே அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை.

ஆனால் அங்கிருந்து உடனடியாக அவளைக்கொண்டு செல்ல அம்புலன்ஸ் கூட அந்த மருத்துவமனையில் இருக்கவில்லை. அந்தளவுக்கு "வசதிகள்' கொண்ட மருத்துவமனை அது.

ஆனால் காலம் கடந்து போயிருந்தது. பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருநாள்களில் அவளும் தன்  குழந்தைகளைத் தேடி உலகை விட்டுப் பயணித்தாள். இன்னும் துயரடங்காமல் அழுது கொண்டே இருக்கிறான் அவன்: தேற்றுவதற்கு அவள் இல்லையே அருகில்!

மருத்துவ உலகின் அலட்சியத்தால் தன் குழந்தைகளையும் துணையையும் தொலைத்து விட்ட ஒருவரின் கதை இது. குறித்த மருத்துவர் அந்தப்பெண் கதறியழுத போதே, சத்திரசிகிச்சை செய்திருந்தால், எஞ்சிய ஒரு குழந்தையின் உயிரையும், அந்தப்பெண்ணையும் காப்பாற்றியிருக்காலாம்.

என்ர மருமகளின்ர வயித்தில இருந்த ஒரு குழந்தை செத்து மூண்டு நாளாப்போட்டுது. அதுதான் வயிறின் ஒருபக்கம் விறைச்சது. எனக்கு தெரிஞ்சு நான் அங்க நிண்ட நேர்ஸிட்டையும், டொக்டரிட்டையும் சொன்னன். ஆனா அவை என்னை நக்கலாப் பாத்திட்டு, அதெல்லாம் துடிப்பு இருக்கு எண்டு சொல்லிட்டினம்.

அண்டைக்கு ரீவியில ஒரு நியூஸ் போட்டாங்கள்.அனுராதபுரத்தில இப்பிடி ருவின்ஸ் பிள்ளையளில ஒண்டு வயித்துக்க செத்தவுடன் மற்றப்பிள்ளையை ஒப்பிரேஷன் செய்து எடுத்திட்டாங்கள். குழந்தையும் தப்பிட்டுது. தாய்க்கும் பிரச்சினையில்லை. அதுவும் ஆறு மாதக் குழந்தை. இது ஒன்பது மாதமாப்போச்சு, அப்ப துணிஞ்சு செய்திருக்கலாம் தானே. இது அந்தப்பெண்ணின் மாமியாரின் வாக்குமூலம்.

யாழ்ப்பாணத்தில் மருத்துவத்துறை என்பது, சமூகப்பணி என்ற நிலைக்கு அப்பால் மிக இலாபமீட்டும் தொழிலாக மாற்றமடைந்துவிட்டது. அரச மருத்துமனைகளில் பணிபுரிந்தாலும் அநேக மருத்துவர்களின் மனங்கள், தனியார் மருத்துவமனைகளிலேயே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒருநாளில் அரசபணிக்கு செலவிடும் நேரம்போக, மீதமுள்ள மணித்தியாலங்களை எப்படி பணமாக்கலாம் என்பதே இத்தகைய பணத்தைக் குறியாக கொண்டு செயற்படும் மருத்துவர்களின் யோசனையாக இருக்கிறது. எல்லா மருத்துவர்களும் இப்படி பணத்தின் பின்னால் வால்பிடிப்பவர்கள் அல்லர்.

ஆயினும் ஒரு சில மருத்துவர்களின் பணத்துக்காக மருத்துவத்துறையை பயன்படுத்தும் போக்கு, ஒட்டுமொத்த மருத்துவர்களுக்குமே அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. கடவுளர்களுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை கொண்டவர்களாக மக்கள் நம்புவதும், ஆராதிப்பதும் மருத்துவர்களைத்தான்.

அந்த நம்பிக்கைக்கு ஏற்றபடி, நடமாடும் கடவுளர்களாக மருத்துவர்கள் இருந்த காலமொன்றும் இருந்தது. இப்போதும் தெய்வங்களுக்கு நிகரான மருத்துவர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் அதை மறைக்கச்செய்யுமளவுக்கு, சில மருத்துவர்கள் நடக்கத்தொடங்கியிருக்கின்றனர்.

ஒருநாளில் அரசபணி தொடங்க முன்னரும், முடிந்த பின்னரும் விழுந்தடித்துக் கொண்டு வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், யாழ்.நகர் என மாவட்டத்தின் சுற்றுத்திக்குகளிலும் உள்ள இடங்களுக்கு இந்த மருத்துவர்கள் ஓடவேண்டியிருக்கிறது.

அங்கு எவ்வளவு நோயாளர்களை பரிசோதிக்க முடியுமோ அந்தக் கொள்ளளவையும் தாண்டி, பார்த்த பின், உழைப்பின் வேதனத்தை அதிகரித்த பின்னரே இத்தகைய மருத்துவர்கள் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். தமது சக்திக்கு மீறிய அளவில்குறுகிய நேரத்தில அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற விருப்பில் அதிகளவான நோயாளர்களை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர்.

இதனால் ஒவ்வோரு நோயாளிக்கும் செலவிடும் நேரம் மிகக்குறுகியதாகவே இருக்கிறது. இதனால் நோயின் தன்மைகளையும், வேதனைகளையும் சரிவரக் கவனிக்க இவர்களால் முடிவதில்லை. நித்திரை, ஓய்வு எதுவுமின்றி ஓடி ஓடி உழைப்பதால் தம்மையும் மீறி இந்த மருத்துவர்கள் தவறுகளை இழைக்கும் சந்தர்ப்பங்கலும் அதிகம்.

அண்மையில் ஒரு தனியார் வைத்தியசாலையில், மேலே சொல்லப்பட்ட இரட்டைப்பிள்ளைகள் உயிரிழந்த சம்பவத்தில் சொல்லப்பட்ட அதே மருத்துவர் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றை வெளியே எடுக்கும் போது கவனக்குறைவால் அந்தக் குழந்தையின் தலையிலும் இலேசாக, சத்திரசிகிச்சைக்கத்தியால் கீறிவிட்டார்.

அந்தக் கீறல் ஆழமாக இருந்திருக்குமானால் சோகமான முடிவொன்றே அங்கும் ஏற்படு இருக்கும். கைராசிக்காரர் என்ற பெயராலேயே தொடர்ந்தும் இவர்களது தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. கர்ப்பிணிப்பெண்களைப் பரிசோதிக்கும் சில மருத்துவர்கள், தமது நோயாளர்களை தனியார் மருத்துவமனைகளுக்கே போகச் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் தாம் பரிசோதிக்கும் கர்ப்பிணிகளையே அரச மருத்துவமனைகளில் கரிசனையோடு கவனிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நீண்டநாள்களாக உண்டு. மற்றவர்கள் மீது மருத்துவர்கள் மட்டுமன்றி, தாதியர்களும் சீறிச் சினக்கின்றனராம்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 சிசுக்கள் காரணமின்றி உயிரிழந்துள்ளன. ஆனால் அதைப்பற்றியோ, இனிமேல் இத்தகைய உயிரிழப்புக்களைத் தடுப்பது குறித்தோ எவரும் அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை.

எனினும் இப்போது வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகள் ஏராளமான புதிர்களை விடுவிப்பதோடு, இத்தகைய அலட்சியங்களால் நிகழும் மரணங்களையும் தடுக்கும்  என்பதே பலரின் நம்பிக்கை. மீண்டும் கடவுளர்களாக மாறுவார்களா மருத்துவர்கள்?

(நன்றி-ஒளண்யன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar